''அந்தக் காலத்தில முனிவர்கள் தவம் செஞ்சு, தங்களோட தவ வலிமையினால பல விஷயங்களைச் சாதிப்பாங்களாமே, உண்மையா, சுவாமி?'' என்று கேட்டார் குழந்தைவேலு.
''புராணங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. எதுக்குக் கேக்கற?'' என்றார் சுவாமிஜி.
''இந்தக் காலத்திலேயும் அப்படியெல்லாம் தவம் செஞ்சு, தவ வலிமை பெற முடியுமான்னு யோசிச்சுப் பாத்தேன்.''
''முடியும். இப்ப அதெல்லாம் இன்னும் சுலபம் கூட!''
''சுலபமா? ஆச்சரியமா இருக்கே!'
''இப்ப தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டாம். சுயக் கட்டுப்பாடோட, எளிமையா வாழ்ந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியை செஞ்சுக்கிட்டு வாழ்ந்தா, அதுவே தவம்தான்!'' என்றார் சுவாமிஜி.
''அப்படி வாழறவங்க யாராவது இருக்காங்களா?'' என்றார் குழந்தைவேலு.
'நீயே அப்படி வாழறவன்தான்! ஆனா நீ வாழறது ஓரு தவ வாழ்க்கைன்னு உனக்குத் தெரியாம இருக்கறது உன்னோட அடக்கம். இந்த அடக்கம் உன் தவ வலிமையை இன்னும் அதிகமாக்கும்! உன் தவ வலிமை உனக்கு எப்படியெல்லாம் உதவும்னு உனக்குத் தெரியாது!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சுவாமிஜி, ''நிச்சயம் இருப்பாங்க'' என்று மட்டும் சொன்னார்.
''சுவாமிஜி என்ன சொன்னார்?'' என்றாள் குழந்தைவேலுவின் மனைவி அலமேலு.
''சுவாமிஜி கிட்ட என் பிரச்னைகளைச் சொல்லல. ஏதோ ஒரு தயக்கம், தப்பா நினைச்சுப்பாரோன்னு.''
''தப்பா நினைச்சுக்கறதுக்கு என்ன இருக்கு? நீங்க எப்பவோ உங்க ஆஃபீஸ் நண்பர் நடராஜனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. அவர் பணம் கட்டாம இறந்து போயிட்டாரு. இப்ப அவர் வாங்கின கடன் பாக்கியை வட்டியோட சேத்து ஒரு லட்ச ரூபா கட்டச் சொல்லி உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு. இது அநியாயம் இல்லையா? இதை உங்க குருகிட்ட முறையிடறதில உங்களுக்கு என்ன தயக்கம்? இந்த நிலைமையில, உங்க நண்பர் கணேசன் பொண்ணு கல்யாணத்துக்கு வேற ஒரு லட்சம் ரூபா கடன் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க!''
''நடராஜன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கான். அவனுக்கு உதவி தேவைப்படறச்சே நான் செய்யத்தான் வேணும்னு நினைச்சுத்தான் அவனோட கடனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டேன். அவன் உயிரோட இருந்திருந்தா, கடனை அடைச்சிருப்பான். கணேசனுக்குக் கொடுக்கறதா சொன்ன பணத்தைத்தான் சீட்டுப் பணத்திலேந்து கொடுக்கறதா சொல்லியிருக்கேனே! நாம ரெண்டு தவணைதான் கட்டியிருக்கோம். நாம கட்டின பணத்தை கணேசன் நமக்குக் கொடுத்துடுவான். இனிமே வரப்போற மாசத் தவணைகளை அவனே கட்டிடுவான். அதில ஒண்ணும் பிரச்னை இல்ல.''
''ஆனா, சீட்டு உங்களுக்கு விழணுமே! அதுதானே பிரச்னை? அப்படி விழுந்தா கூட, அதை வச்சுக் கடனைக் கட்டுவீங்களா, இல்ல, உங்க நண்பருக்குக் கொடுப்பீங்களா?''
''குருவைப் பாத்துட்டு வந்திருக்கேன்ல? ஏதாவது வழி பிறக்கும்.''
''அதான் குருகிட்ட உங்க பிரச்னையைச் சொல்லாம வந்துட்டீங்களே! அவர் எப்படி உதவுவாரு?'' என்று முணுமுணுத்தாள் அலமேலு.
இரண்டு தினங்களுக்குப் பிறகு, குழந்தைவேலு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், ''என்னங்க, சிட்ஃபண்ட்லேந்து ஃபோன் பண்ணினாங்க. இந்த மாசம் குலுக்கல்ல சீட்டு உங்களுக்கு விழுந்திருக்காம்'' என்றாள் அலமேலு, உற்சாகத்துடன்.
''ஆச்சரியமா இருக்கே! சீட்டு எனக்கு விழணும்னு ஆசைப்பட்டேன். விழுந்துடுச்சே! நல்லவேளை, கணேசனுக்கு உதவ முடிஞ்சுது.''
''இந்தாங்க! ஒரு லெட்டர் வந்திருக்கு'' என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் அலமேலு.
நடராஜன் வாங்கிய கடனுக்குக் குழந்தைவேலு ஷ்யூரிட்டி போட்டிருந்ததால், அந்தக் கடனுக்கான பணத்தைக் குழந்தைவேலு கட்ட வேண்டும் என்று முன்பு கேட்டிருந்த நிதி நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் இறந்து போன நடராஜனின் மகன் தன் தந்தையின் கடன் பற்றி அறிந்து, அதை முழுவதுமாகக் கட்டி விட்டதால், குழந்தைவேலு கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.
''பாத்தியா, அலமேலு? சுவாமிஜியைப் போய் சும்மா பாத்துட்டுத்தான் வந்தேன். அவர்கிட்ட என் பிரச்னைகளைப் பத்தி சொல்லக் கூட இல்ல. சுவாமிஜி என் பிரச்னைகளைத் தீர்த்து வச்சுட்டாரு பாரு!'' என்றார் குழந்தைவேலு உற்சாகத்துடன்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
தீமை செய்யும் பகைவரை வீழ்த்துவதும், நன்மை செய்யும் நண்பர்களை உயர்த்துவதும், நினைத்த மாத்திரத்தில் தவ வலிமையால் நிறைவேறும்.
குறள் 265 குறள் 263
No comments:
Post a Comment