"என்னங்க? அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் வரும்" என்றாள் பொன்னம்மாள்.
"சரி" என்றான் அழகேசன். "நாளைக்கு வியாபாரத்துக்குப் போகணும்.வரும்போது அரிசி, மத்த சாமான்கள் எல்லாம் வாங்கிக்கிட்டு வரேன்."
"இன்னிக்கே போயிருக்கலாமே!"
"இன்னிக்குக் காலையிலதானே ராமலிங்க சாமி போனாரு? அப்புறம் உடனே கிளம்ப முடியல. ரெண்டு மூணு நாள்ள வேற யாராவது வருவாங்க. அதுக்குள்ளே அரிசி மத்த சாமான்களை வாங்கி வச்சுக்கணும்."
அழகேசன் எதிர்பார்த்தது போல், நான்கு நாட்களில் இன்னொரு துறவி அவர்கள் வீட்டுக்கு வந்தார்.
"இந்த ஊருக்குள்ள நுழைஞ்சதுமே, எல்லாரும் உன் வீட்டைத்தான் காட்டறாங்க. துறவிகளை வரவேற்று உபசரிக்கிற வேலையைப் பல காலமாகச் செஞ்சுக்கிட்டிருக்கியாமே!" என்றார் துறவி.
"ஆமாம், சாமி. ஏதோ, என்னால முடிஞ்சது!" என்றான் அழகேசன்.
"பெரிய சேவைப்பா இது! உன்னைப் போன்றவர்கள் இருக்கறதாலதான், எங்களைப் போன்றவர்கள் தவம், துறவு இதிலெல்லாம் ஈடுபட முடிகிறது. சரி. உன்னைப் பத்திச் சொல்லு."
"என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்னங்க இருக்கு? நான் ரொம்ப நாளா துணி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். காஞ்சிபுரத்திலேந்து மொத்தமா துணி வாங்கிக்கிட்டு வந்து, சுத்தி இருக்கிற கிராமத்துக்குக்கெல்லாம் போய் வித்துட்டு வருவேன். எல்லாரையும் நம்பிக் கடன் கொடுத்து, தவணை முறையில பணம் வாங்கிக்கறதால, எங்கிட்ட நிறைய பேரு வாங்கறாங்க. ஓரளவுக்கு நல்ல வருமானம் வருது."
"நல்லது. துறவிகளுக்கும், தவம் செய்பவர்களுக்கும் உதவி செய்யணுங்கற எண்ணம் உனக்கு எப்படி வந்தது?"
"இந்த ஊருக்கு வெளியில பெரிய சாலை இருக்கு. யாத்திரை போறவங்க நிறைய பேர் அதில போவாங்க. நீங்களும் அப்படித்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். துறவிகள் சில பேர் பல நாள் சாப்பிடாம, சோர்வோட நடந்து போறதைப் பாத்து, அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு சாப்பாடு போட்டு, ஓய்வு எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னேன். அதுக்கப்புறம், இந்தப் பக்கமாப் போற துறவிங்க நிறைய பேர் அவங்களாவே என் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. கடவுள் புண்ணியத்தில, என்னால முடிஞ்ச சேவையை அவங்களுக்கு செஞ்சுக்கிட்டிருக்கேன்."
"துறவிகளைப் பாத்துக்கிட்டு, வியாபாரத்தையும் எப்படிப்பா கவனிக்கற?"
"மாசத்துல இருபது நாள் வியாபாரம், பத்து நாள் வீட்டில இருந்துக்கிட்டு துறவிகளுக்கு சேவைன்னு வச்சுக்கிட்டிருக்கேன். நான் இல்லாதப்ப, என் மனைவி துறவிகளை கவனிச்சுப்பா."
மாலையில் துறவி அவனிடம் விடை பெற்றுக் கிளம்பினார். கிளம்பும்போது, "ஆமாம், கேக்க மறந்துட்டேன். உன் குழந்தைங்க என்ன செய்யறாங்க?" என்றார்.
"எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்கும் காஞ்சிபுரத்திலேயே கடை வச்சுக் கொடுத்துக் கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்."
"அப்ப, உன்னோட இல்லறக் கடமைகள் முடிஞ்சு போச்சு. நீயும், உன் மனைவியும் இல்லறத்தை விட்டுட்டுத் துறவறம் மேற்கொள்ளலாமே!"
"அதுக்கு என்ன செய்யணும், சாமி? காட்டில போய்த் தவம் செய்யணுமா?"
"தவம்னா காட்டுக்குப் போகணும்னு இல்ல. உணவு, உடை, மற்ற சௌகரியங்களைக் குறைச்சுக்கிட்டு, திருத்தலங்களுக்குப் போறது, ஏதாவது ஆசிரமத்தில் சேர்ந்து தவ வாழ்க்கை வாழப் பழகிக்கறது இது மாதிரி செயல்கள்ள ஈடுபடலாம்."
"வேண்டாம், சாமி. உங்களை மாதிரி தவம் பண்றவங்களுக்கு சேவை செய்யறதே எங்களுக்குத் திருப்தியா இருக்கு. எங்களுக்கு இதுவே போதும்" என்றான் அழகேசன்.
"நீ சொல்றதும் சரிதான். உன்னை மாதிரி இருக்கறவங்க இல்லறத்தை விட்டுட்டுத் தவம் பண்ணப் போயிட்டா, என்னை மாதிரித் துறவிகளுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!" என்றார் துறவி, சிரித்தபடியே.
துறவி உண்மையாகச் சொல்கிறாரா இல்லை விளையாட்டாகப் பேசுகிறாரா என்று அழகேசனுக்குப் புரியவில்லை.
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
துறவிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் தவம் செய்ய நினைக்காமல் இல்லறத்திலேயே இருக்கிறார்களோ?
குறள் 264குறள் 262
No comments:
Post a Comment