
"என்ன பயம்?" என்றார் தனபால்.
"பி எஃப், கிராச்சுவிட்டி பணத்தையெல்லாம் எதில முதலீடு செய்யறதுன்னே தெரியல. பாங்க்ல போட்டா, வட்டி கம்மியாதான் வரும். வேற எதிலேயாவது முதலீடு செஞ்சா ரிஸ்க் அதிகம்."
"இப்பல்லாம் பாங்க் கூட ரிஸ்க் ஆகிக்கிட்டு வருது. பேசாம ரிஸ்க் எடுத்து, மியூச்சவல் ஃபண்ட்ல கொஞ்சம், ஷேர் மார்க்கெட்ல கொஞ்சம் போடலாம்னு பாக்கறேன்" என்றார் சண்முகம்.
"என் பையன் எனக்கு வந்த அம்பது லட்சத்தையும் வாங்கி அவன் பிஸினஸ்ல போட்டுட்டான். வருஷா வருஷம் லாபத்தில் பங்கு தரேன்னு சொல்லியிருக்கான். இருபது பர்சென்ட்டுக்கு மேல ரிட்டர்ன் வரும்னு சொல்றான். பணத்தைக் கொடுத்துட்டு பக் பக்னு உக்காந்திருக்கேன். அவன் பிசினஸ் எப்படிப் போகுதுன்னு கூடத் தெரியல. வருஷம் முடிஞ்சதும் ரிட்டர்ன் வருமான்னு தெரியல. அதுக்கப்பறம் எல்லா வருஷமும் தொடர்ந்து வருமானம் வருமான்னும் தெரியல" என்று புலம்பினார் நடராஜன்.
"ஏன் எல்லாப் பணத்தையும் பையனோட பிஸினஸுக்குக் கொடுத்தீங்க? பாதிப் பணத்தையாவது பாங்க்ல போட்டிருக்கலாமே!" என்றார் தனபால்.
"பணத்தை நாலு பங்காப் பிரிக்கணும். ஒரு பங்கை பாங்க்ல போடணும். ஒரு பங்குல நகை வாங்கி வச்சுக்கணும். ஒரு பங்கை ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ல போடணும். ஒரு பங்கில எங்கேயாவது நிலம் வாங்கிப் போடணும்" என்றார் ராமலிங்கம்.
"நீங்க அப்படித்தான் செஞ்சீங்களா?" என்று கேட்டார் சபாபதி
"இல்ல. ஏதோ அந்த நேரத்தில தோணின மாதிரி செஞ்சேன். இப்படிச் செஞ்சிருந்தா நல்லா இருக்கும்னு அப்புறம் தோணிச்சு" என்றார் ராமலிங்கம்.
"நாமெல்லாம் பேசிக்கிட்டிருக்கோம். வீரராகவன் எதுவுமே சொல்ல மாட்டேங்கறாரே!" என்றார் தனபால்.
"எனக்கு அம்பது லட்ச ரூபா வந்தது. அதில பத்து சதவீதம், அதாவது அஞ்சு லட்சத்தைத் தனியா எடுத்து வச்சுட்டு, மீதி நாப்பத்தஞ்சு லட்சத்தை, என் பையன் கிட்ட சொல்லி முதலீடு செய்யச் சொன்னேன். அவன் பாங்க்ல வேலை செய்யறானே! அவன் ரெண்டு மூணு வகையில என் பேர்ல முதலீடு செஞ்சிருக்கான். ஏதோ வருமானம் வந்துக்கிட்டிருக்கு. ஆனா எத்தனை சதவீதம் வருது, அதிகமா, குறைவான்னெல்லாம் நான் கணக்குப் பாக்கல" என்றார் வீரராகவன்.
"சரி. தனியா எடுத்து வச்ச அஞ்சு லட்சத்தை என்ன செஞ்சீங்க?" என்று கேட்டார் சண்முகம்.
"அதைத் தனியா பாங்க்ல டெபாசிட் பண்ணி இருக்கேன். அதிலேந்து வர வருமானத்தை அன்னதானம் பண்றவங்களுக்கு, அநாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்குன்னு கொடுத்துக்கிட்டு வரேன்" என்றார் வீரராகவன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
குறள் 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பொருள்:
வறியவர்களின் கொடிய பசியைத் தீர்ப்பதே ஒருவன் தான் பெற்ற பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ: