About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, March 30, 2018

143. நடந்ததை நினைத்து...

"ஏம்ப்பா முப்பது வயசு ஆகப்போகுது. இன்னும் ஏன் பிரம்மச்சாரியா இருக்கே?"

"இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு கேளு? அவன் பிரம்மச்சாரியா இருக்கான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

"உஸ்ஸ்... மெதுவாப் பேசு. முதலாளி காதுல விழப் போவுது!"

ஊழியர்கள் பேசிக் கொண்டது 'முதலாளி' என்று குறிப்பிடப்பட்ட கணபதியின் காதில் விழுந்தது. 'கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை சரி. ஆனால் நீ பிரம்மச்சாரிதானா?' என்ற கேள்வி தங்கள் முதலாளிக்கும் பொருந்தும் என்பதால்தான் பேசிக்கொண்டவர்களில் ஒருவனுக்கு தங்கள் பேச்சு முதலாளியின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

"ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்று அவனிடம் பலர் பல வருடங்களாகக் கேட்டு வருகிறார்கள். அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வந்திருக்கிறான் கணபதி.

ருபத்தைந்து வருடங்களுக்கு முன், அவனுக்கு இருபது வயது இருக்கும்போது மதுரையில் ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான் கணபதி. கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும், ஆழமான விசுவாசத்தாலும் முதலாளியின் அன்பைப் பெற்று ஐந்து வருடங்களில் மானேஜர் என்ற நிலைக்கு உயர்ந்தான்.

முதலாளிக்கு அடுத்த நிலை என்பதால் அவனுக்குக் கிடைத்த கௌரவம், மரியாதை எல்லாம் அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. இந்தச் சிறிய வயதில் இவ்வளவு உயர்வா என்று மற்ற ஊழியர்களுக்கு வியப்பும், பொறாமையும் ஏற்பட்டன.

தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய முதலாளியை தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான் கணபதி.

அவனை விடப் பதினைந்து வயது மூத்தவரான அவன் முதலாளி திருமணமாகி ஓரிரு மாதங்களிலேயே மனைவியைப் பறி கொடுத்தவர். இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் வியாபாரத்திலேயே கவனம் செலுத்தி வந்தார்.

அவருடைய நாற்பத்தைந்தாவது வயதில் இருபத்தைந்து வயதுப் பெண் ஒருத்தியை திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.

முதலாளி தனியாக இருந்தபோது அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் கொண்டிருந்த கணபதி அவர் திருமணம் செய்து கொண்டதும் அவர் வீட்டுக்குச் செல்வதைக் கூடிய வரையில் தவிர்த்து வந்தான். எப்போதாவது போனாலும் வாசலிலேயே நின்று பேசி விட்டு வந்து விடுவான்.

ஒருநாள் முதலாளி கடையிலிருந்து கிளம்பி அவசரமாகப் பக்கத்து ஊருக்குப் போய் விட்டார். எப்போதும் இரவு ஒன்பது மணிக்குக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போகும்போது கடையில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு போய் விடுவார். அன்று வெளியூர் செல்லும்போது "நான் வரத்துக்கு லேட்டாகும். நீ கடையைப் பூட்டிட்டு பணத்தை வீட்டில கொடுத்துட்டுப் போயிடு" என்று சொல்லி விட்டுப் போனார்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் முதலாளியின் வீட்டுக்கு கணபதி பணத்துடன் போனான்.

கதவைத் திறந்த முதலாளியின் இளம் மனைவி "உள்ளே வா" என்றாள்.

"இல்ல. பணத்தைக் கொடுக்கத்தான் வந்தேன். இங்கியே வாங்கி எண்ணிப் பாத்துக்கங்க" என்றான் கணபதி.

"வாசப்படியில நின்னு யாராவது பணத்தை வாங்குவாங்களா, அதுவும் ராத்திரி வேளையில?" என்றாள் முதலாளியின் மனைவி.

கணபதி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

அதற்குப் பிறகு அந்த விபரீதம் எப்படி நிகழ்ந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அரை மணி நேரம் கழித்து அவன் கிளம்பியபோது "இது மாதிரி அடிக்கடி வா!" என்றாள் அவள்.

அடுத்த நாள் முதலாளியைப் பார்த்தபோது, கணபதியால் அவர் முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை. 'கடையில துணி எடுத்துப் போடற ஒரு சாதாரண ஆளா இருந்த என்னை இவ்வளவு உயரத்தில தூக்கி வச்ச இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணிட்டேனே!' என்று மனதுக்குள் புலம்பினான்.

அதற்குப் பிறகு அங்கே அவனால் அதிக நாட்கள் வேலை செய்ய முடியவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு திருச்சியில் இருக்கும் தனது தூரத்து உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி நான்கைந்து நாட்கள் விடுமுறை கேட்டு வாங்கிக் கொண்டு கிளம்பினான் கணபதி.

தனி ஆளாக இருந்ததால் அவனிடம் அதிகப் பொருட்கள் இல்லை. இருந்தவற்றை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு கிளம்பினான். அவன் இருந்த அறைக்கு மூன்று மாத வாடகை முன்பணமாகக் கொடுத்திருந்ததால் வாடகை பாக்கி எதுவும் இருக்காது.

பத்து வருடங்கள் வேலை செய்ததில் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். திருச்சிக்குப் போய் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் தங்கினான். தன் உறவினர் இறந்து விட்டதால் அவர் குடும்பத்துக்கு உதவியாக அங்கேயே இருக்க வேண்டி இருப்பதால் இனி தன்னால் வேலைக்கு வர இயலாது என்று முதலாளிக்குப் பணிவாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

பிறகு முதலாளி தன்னைத் தேடி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாதபடி கடலூருக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஊரைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியேறினான். கையில் இருந்த பணத்தை வைத்துச் சிறிய அளவில் துணி வியாபாரத்தைத் தொடங்கினான்.

பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அவன் வியாபாரம் பெருகிக் கடை பெரிதாகி விட்டது. இந்தப் பதினைந்து வருடங்களில் அவனுக்குப் பெண் கொடுக்கப் பலர் முன்வந்தனர். ஆனால் அவன் பிடி கொடுக்கவில்லை. திருமணம் என்றாலே முதலாளியின் மனைவியும் அவளுடன் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட தகாத உறவும்தான் நினைவுக்கு வந்தன.

"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறே?" என்று பலரும் கேட்டார்கள்.

அவனுக்குத் தெரியவில்லை. சாகும்வரை இப்படியே இருந்துதானே ஆக வேண்டும்?

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்துதொழுகு வார்.

பொருள்:  
தன்னை முழுவதுமாக நம்பியவரின் மனைவியிடம் தகாத உறவு கொண்டவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

          பொருட்பால்                                                                                  காமத்துப்பால்
















No comments:

Post a Comment