About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, April 14, 2017

74. சேகரின் நண்பர்கள்

என்னைப் பெண் பார்க்க வந்தபோதே சேகர் சற்று வித்தியாசமாகத்தான் நடந்து கொண்டார். 

பெண் பார்த்ததும், "ஓரிரு நாட்களில் கடிதம் போடுகிறோம்" என்று சொல்லி விட்டு அவர் அம்மா கிளம்ப யத்தனித்தபோது அவர் குறுக்கிட்டு, "இதெல்லாம் எதற்கு? எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கும் என்னைப் பிடித்திருந்தால் இப்போதே பேசி முடிவு செய்து விடலாமே!" என்றார்.

அவர் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. "நீ பட்டென்று சொன்னது போல் பெண்ணும் சொல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அவள் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தனியேதான் சொல்லுவாள். அதற்குத்தான் இந்த ஊருக்குப் போய்க் கடிதம் எழுதும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்" என்று ஒரு நீண்ட உரையாற்றி விட்டு அவர் அப்பா கிளம்பி விட்டார்.

ஆனால் சொன்னது போலவே இரண்டு நாட்களில் கடிதம் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதாம்! அந்த நாட்களில் பொதுவாகப் பெண்களுக்கென்று தனியே விருப்பம் கிடையாது. அவரை வேண்டாம் என்று சொல்ல எனக்குக் காரணம் எதுவும் இல்லை என்பதால் நானும் ஒப்புக்கொண்டு விட்டேன்.

கல்யாணம் நிச்சயம் ஆன இரண்டு நாட்களில் சேகர் என் வீட்டுக்கு வந்தார். என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்தேன். ஆனால் அவர் பார்க்க வந்தது என் அப்பாவை! கல்யாண மண்டபம் பற்றிச் சில யோசனைகள் சொல்வதற்காகத்தான் வந்தாராம்!

"அவசரப்பட்டு அதிக வாடகை கொடுத்து ஏதாவது மண்டபத்தை ஏற்பாடு செய்து விடாதீர்கள். குறைந்த வாடகைக்கு நல்ல மண்டபங்கள் இருப்பது பலருக்குத் தெரியாது" என்றவர். "என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இந்த ஊரில் இருக்கும் எல்லா மண்டபங்கள் பற்றியும் தெரியும். அவன் ஆஃபீஸ் ஃபோன் நம்பர் கொடுக்கிறேன். நானும் அவனிடம் சொல்கிறேன். நீங்கள் அவனுக்கு ஃபோன் பண்ணினால் நல்ல மண்டபம் ஏற்பாடு செய்து கொடுப்பான்" என்றார் என் அப்பாவிடம்.

"மாப்பிள்ளைக்குத்தான் நம் மீது எவ்வளவு அக்கறை!" என்று அகமகிழ்ந்து போனார் என் அப்பா.

ல்யாணத்துக்குப் பிறகுதான் அவரது குணம் எனக்குத் தெரிய வந்தது. தனக்கு மாமனார் ஆகப் போகிறார் என்பதற்காக அவர் என் அப்பாவுக்கு உதவ வரவில்லை. சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் அவர் இந்த உதவியைச் செய்திருப்பார். அவர் சுபாவமே அதுதான்!

முன்பின் தெரியாதவர்கள் விஷயங்களில் கூட அக்கறை காட்டுவார். தானே வலியப்  போய் யோசனை கூறுவார். உதவி செய்வார். இது போன்று செய்து வந்ததால், அவர் உதவி செய்தவர்களில் பலர் அவருக்கு நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

எங்கள் வீட்டுக்கு இவர் நண்பர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகி விட்டது. அவர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுப்பதே எனக்குப் பெரிய வேலையாகி விட்டது.

ஆனால் இது பற்றி நான் அலுத்துக் கொள்வதில்லை. என் கணவர் மற்றவர்களுக்கு இவ்வளவு உதவி செய்யும்போது வீட்டுக்கு வரும் அவர் நண்பர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுக்கும் வேலையைக் கூட நான் செய்யக் கூடாதா என்று நினைத்துக் கொள்வேன்.

ஒருமுறை எங்களுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கல்லாரி மாணவி பேச்சுவாக்கில் தான் வெளி நாட்டில் போய் மேல் படிப்புப் படிக்க வேண்டும் என்று சொன்னாள். இவர் அவளிடம் விவரங்களை வாங்கிக் கொண்டார்.

ஊருக்குத் திரும்பியதும், சில நண்பர்களை விசாரித்து வெளிநாடு  சென்று படிக்க என்னென்ன செய்ய வேண்டும், இதற்கு உதவி செய்யக்கூடிய நம்பத்தக்க நிறுவனங்கள் என்ன என்ற விவரம் எல்லாம் சேகரித்து, ஒரு வாரம் கழித்து அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு ஃபோன் செய்து விவரங்களைச் சொன்னார்.

"என்ன சார், ரயிலில் ஏதோ பேச்சுவாக்கில் என் பெண் சொன்னதற்காக இவ்வளவு விவரங்கள் சேகரித்து எனக்கு ஃபோன் செய்திருக்கிறீர்களே! உங்களைப்  போல் இன்னொரு மனிதரை இந்த உலகத்தில் பார்க்க முடியுமா?" என்று நெகிழ்ந்து போனார் அந்தப் பெண்ணின் தந்தை.

இவர் சொன்ன விவரங்களைப் பயன்படுத்தி அந்தப் பெண் இப்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாள் விடியற்காலையில் அமெரிக்காவிலிருந்து ஃபோன் செய்து "என்ன அங்க்கிள் எப்படி இருக்கிறீர்கள்?" என்பாள். வாரம் ஒரு முறை அவள் அப்பா உள்ளூரிலிருந்து ஃபோன் செய்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்!

ப்போதுதான் எங்கள் கல்யாணம் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஒடி விட்டன. இதோ இன்று இவர் வேலையிலிருந்து ஒய்வு பெறப் போகிறார்.

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்' என்ற பழமொழி உண்மையோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் பையனும் பெண்ணும் படித்து வேலைக்குப் போய்த் திருமணமும் ஆகி வாழ்க்கையில் வேரூன்றி விட்டார்கள்!

வேலையிலிருந்து ஒய்வு பெற்று, மாலை இவர் வீடு வந்தபோது, இவருடன் இவர் நெருங்கிய நண்பர்கள் நாலைந்து பேர் வந்தனர்.

"மேடம், இன்றைக்கு சேகருக்கு நடந்தது போல ஒரு வழியனுப்பு விழா வேறு யாருக்கும் நடந்ததில்லை. போன மாதம் ஒய்வு பெற்ற எங்கள் ஜெனரல் மேனேஜருக்கு நடந்த வழியனுப்பு விழா கூட இத்தனை சிறப்பாக நடக்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை ஊழியரிடமும் நெருங்கிப் பழகியவர் எங்கள் ஜி.எம்.

"உங்கள் கணவருக்கு இவ்வளவு பாப்புலாரிடி இருப்பதைப் பார்த்து, அவருடன் இத்தனை வருடங்களாக நெருங்கிப் பழகும் எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சேகர் என்ற பெயரை விட வசீகரன் என்ற பெயர்தான் இவருக்குப் பொருத்தமாக இருக்கும். ஆஃபிஸில் மட்டும் இல்லை, ஆஃபிசுக்கு வெளியேயும் இவருக்கு எத்தனை நண்பர்கள்! ஒருவர் தன் வாழ்நாளில் இத்தனை நண்பர்களைச் சம்பாதிக்க முடியுமா?" என்றார் இவர் நண்பர் சுந்தர்.

'முடியும், மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் இருந்தால்' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தவர்களுக்குக் காப்பி போடப் போனேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 74
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

பொருள்:
மற்றவர்கள் மீது அன்பு இருந்தால் அவர்கள் நலனில் அக்கறை இருக்கும். இந்த அக்கறை நட்பு என்னும் பெரும் செல்வத்தை வழங்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















1 comment:

  1. நல்ல குறள். நல்ல கதை. ஆனா இந்த அன்பு இயல்பா வரணும் (ம்ஹ்ம்.. எங்க வருது)

    ReplyDelete