About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, April 9, 2017

73. கண்டேன் கல்யாணியை!

அந்த வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தால் அருகில் சென்று பார்த்தேன். யாரோ இறந்து விட்டார்கள் என்று தெரிந்தது. பல பேர் உள்ளே போய் விட்டு வந்து கொண்டிருந்தனர். இறந்தவர் ஒரு வி.ஐ.பி போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்றுத் தள்ளிப்போய், தெருவில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "இறந்து போனது யார்?"

"கல்யாணி அம்மா!" என்று பதில் வந்தது.

அப்படி ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. கல்யாணி அம்மா யார் என்று அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. 'கல்யாணி அம்மாவைத் தெரியாதா உங்களுக்கு?' என்று பதில் சொல்லுவார் என்று தோன்றியது!

கூட்டமாக நின்றிருந்தவர்களின் அருகில் போய் நின்று கொண்டேன் - அங்கே இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டு கல்யாணி அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று.

சுமார் பதினைந்து நிமிடம் அங்கே நின்று நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்கள் இவை.

நான் நினைத்தது போல் கல்யாணி என்பவர் ஒரு வி.ஐ.பி. இல்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. அதிகம் படித்தவர் இல்லை, எந்தப் பதவியிலும் இருந்தவரும் இல்லை. கணவன் மனைவி என்று இரண்டே பேர் கொண்ட குடும்பம். குழந்தைகள் இல்லை.

பின் எப்படி அவரது உடலைப் பார்க்க இத்தனை பேர் வந்து நிற்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடை காண நான் இன்னும் சற்று நேரம் நின்று மேலும் பலர் பேசியவற்றைக் கேட்க வேண்டியிருந்தது.

"ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது கல்யாணி அம்மா அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து, 'ஏம்மா, ரொம்ப சோர்வா இருக்கியே, கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டுப் போ' என்று என்னை வீட்டுக்குள் அழைத்தார்கள். தண்ணீர் கொடுத்து விட்டு பள்ளிக்கூடத்தில் நடந்ததைப் பற்றி விசாரித்தார்கள். அதற்குப் பிறகு தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான் கல்யாணி அம்மா வீட்டுக்குப் போய் விட்டுத்தான் என் வீட்டுக்குப் போவேன். நான் சொல்வதையெல்லாம் சிரித்துக்கொண்டே பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள்! என் அம்மா கூட நான் ஏதாவது சொன்னால், 'போதும் போதும். போய் வேலையைப் பாரு' என்று அலுத்துக் கொள்வார்கள். கல்யாணி அம்மா மாதிரி பாசமும், அக்கறையும் கொண்ட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை!" - சொன்னவள் ஒரு சிறுமி.

"ஒருநாள் கோவிலில் உட்கார்ந்து எனக்குத் தெரிந்தவர்களிடம் என் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இந்தக் கல்யாணியை யாரென்றே அப்போது எனக்குத் தெரியாது. நான் சொன்னதைத் தற்செயலாகக் கேட்டு விட்டு, 'அதுதான் கோவிலுக்கு வந்து விட்டீர்களே, எல்லாம் சரியாகி விடும்!' என்றாள். அவளுடைய சிரித்த முகத்தைப் பார்த்ததுமே அவளை எனக்குப் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு அவளிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன். எனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். என்னை டாக்டரிடம் செக் அப்புக்கு அழைத்துப் போக என் வீட்டில் யாருக்கும் நேரம் இல்லை என்று சொன்னேன். அவளே என்னை அழைத்துக் கொண்டு போனாள். இது மாதிரி எத்தனையோ உதவிகள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் பாசம் காட்டும் வேறொரு பிறவியை நான் பார்த்ததில்லை" - ஒரு வயதான பெண்மணி சொன்னது இது.

"இந்தத் தெருவில யார் வீட்டில இல்லேன்னாலும் அவங்களுக்கு வரும் கடிதங்கள், பார்சல்கள் எல்லாவற்றையும் கல்யாணி அம்மாவிடம்தான் கொடுப்பேன். என் குடும்பத்தைப் பத்தி அடிக்கடி விசாரிப்பாங்க. 'வெய்யில்ல அலையிறீங்களே!'ன்னு பரிவாகச் சொல்லி தினமும் தண்ணீர் கொடுப்பார்கள். சில நாட்கள் மோர், காப்பி எல்லாம் கூடக் கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பவர்கள் நான் அவர்களுக்கு ஏதோ உறவு என்று நினைத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு அன்பு காட்டுவார்கள்." சொன்னவர் ஒரு கூரியர் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்.

இன்னும் நிறைய பேர் பேசுவதைக் கேட்டேன். அவற்றிலிருந்தெல்லாம் நான் புரிந்து கொண்டது இதுதான். கல்யாணி என்பவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரையும் நேசித்த அவர் மறைந்ததும் அவர் அன்பைப் பெற்றவர்கள் அவர் வீட்டு வாசலில் குவிந்ததில் என்ன வியப்பு?

கல்யாணியின் உயிர் பிரிந்து விட்டதால் அவர் உடல் இனி இந்த உலகில் இல்லாமல் போய் விடும். ஆனால் அவர் நினைவுகள் பலர் மனங்களிலிருந்து என்றுமே நீங்காது என்று எனக்குத் தோன்றியது.

அன்பு நடனமாடிய நெஞ்சம் கொண்ட அந்தப் பெண்மணியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த நானும் அவர் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்:
உடலோடு எப்படி உயிர் இணைந்திருக்கிறதோ, அது போல் நம் வாழ்க்கையோடு அன்பு இணைந்திருக்க வேண்டும். (அன்பு இல்லாத வாழ்க்கை உயிர் இல்லாத உடலைப் போன்றது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















1 comment:

  1. உண்மைதான். இப்படித்தான் தஞ்சாவூரில் இருந்த டாக்டர் இறந்தபோது எல்லா சமுதாயத்தவரும், மதத்தவரும் வந்தார்கள் என்று சொல்வர். ஆனா இந்த அன்பு மனம் கொண்டவர்கள் வெகு அபூர்வமாகத்தான் தட்டுப்படுகிறார்கள். (சொல்வது யார்க்கும் எளிய.... சொல்லிய வண்ணம் செயல் - இதையும் அவர்தானே எழுதியிருக்கிறார்)

    ReplyDelete