About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, April 22, 2017

75. தம்பியிடம் கற்ற பாடம்!

"என்னங்க, ரொம்ப நாள் கழிச்சு உங்க தம்பி தன் குடும்பத்தோட வராரு. ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வீட்டில இருங்களேன்" என்றாள் ரேவதி.

"என்ன பொறுப்பு இல்லாம பேசற? நான் எப்படி லீவு போட முடியும்?" என்றான் குரு.

"லீவு போடாட்டாலும் பரவாயில்லை. இப்படி எரிஞ்சு விழாமலாவது இருங்க!" என்று முணுமுணுத்தாள் ரேவதி.

"என்ன முணுமுணுக்கற?"

"ஒண்ணுமில்ல. சீக்கிரமா ஆஃபீசுக்குக் கிளம்புங்க. லேட்டாயிடப் போகுது!"

"ஆமாம். இன்னிக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. எல்லாரும் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க."

ரவு குரு வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் ஒரே உற்சாகம். குருவின் மகள் தீபா, மகன் கார்த்திக் இருவரும் தங்கள் சித்தப்பா குடும்பத்துடன் மிக நெருக்கமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குருவைப் பார்த்ததும் இருவரும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

தம்பி மனைவி கலாவையும், அவர்கள் மகன்கள் விச்சு, நரேஷ் ஆகிய இருவரையும், விசாரித்து விட்டு, குரு தன் தம்பியிடம் சற்று நேரம் உரையாடினான்.

"இத்தனை நேரம் எல்லாரும் பெரிசா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க. உங்க தலையைக் கண்டதும் நம்ப குழந்தைங்க ரெண்டு பேரும் அடங்கிட்டாங்க!" என்றாள் ரேவதி குருவிடம் தனிமையில்.

"நான் என்ன செஞ்சேன்?" என்றான் குரு கோபமாக.

"எதுக்கெடுத்தாலும் இப்படி வள்ளுன்னு விழறீங்களே, அது போதாதா? என்னிக்காவது குழந்தைங்ககிட்டயாவது, எங்கிட்டயாவது அன்பாகப் பேசி இருக்கீங்களா? உங்க தம்பி அவரு மனைவிகிட்டயும் பிள்ளைங்ககிட்டயும் எவ்வளவு அன்பா இருக்காரு!"

"என்ன பேசறே நீ? நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு வசதி செஞ்சு கொடுத்திருக்கேன்? என் தம்பிக்கு வருமானம் கம்மி. என்னை மாதிரி அவன் பெண்டு பிள்ளைகளுக்கு செய்ய முடியுமா?"

"நீங்க பணத்தைப்பத்திப் பேசறீங்க! வசதி செஞ்சு குடுத்திருக்கீங்க. இல்லேங்கல. ஆனா எங்ககிட்ட அன்பா நடந்துக்க உங்களுக்கு நேரமும் இல்ல, அப்படி ஒரு சிந்தனையும் இல்ல. உங்களைக் கண்டாலே நம்ப குழந்தைங்க பயப்படறாங்க. உங்க தம்பி புள்ளைங்க அவங்க அப்பாகிட்ட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னு பாருங்க."

"நம்ப வீட்டுக்கு வந்திருக்கறதினால என் தம்பி தன் பையன்களைக் கோவிச்சுக்காம இருப்பான். அவன் வீட்டில இருக்கும்போது என்னை மாதிரிதான் இருப்பான்."

"நிச்சயமா இல்ல. அப்படி இருந்திருந்தா உங்க தம்பி குழந்தைகளுக்கு அவர்கிட்ட பயம் இருக்காதா? நீங்க வேணும்னா நாளைக்கு கவனிச்சுப் பாருங்க."

குரு பதில் பேசாமல் மௌனமாக இருந்தான்.

டுத்த நாள் குரு அலுவலகத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். தம்பி குழந்தைகள் அவர்கள் அப்பாவிடம் பேசுவதை கவனித்தான். 'தீபாவோ, கார்த்திக்கோ என்னிடம் இவ்வளவு சுதந்திரமாகப் பேசுவார்களா? ரேவதி சொல்வது சரிதானோ?'

தற்செயலாக சமையற்கட்டுப் பக்கம் போனபோது தீபா அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது குருவின் காதில் விழுந்தது. "ஏம்மா, விச்சுகிட்டயும், நரேஷ்கிட்டயும் சித்தப்பா எப்படி ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்காரு! ஏன் அப்பா மட்டும் எங்ககிட்ட எரிஞ்சு விழுந்துகிட்டே  இருக்காரு?"

குருவுக்கு, தன் தலையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது.

வசதியான வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தன் குடும்பத்தை விட, வசதிக் குறைவான தன் தம்பியின் குடும்பம்தான் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தோன்றியது. இதற்குக் காரணம் தன் தம்பி தன் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதுதானோ?

குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றித் தன் தம்பியிடம் தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் குரு.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:
உலகில் இன்புற்று வாழ்பவர்கள் அடையும் சிறப்பு அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளங்குவதன் பலனாக அவர்கள் பெறுவதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Brother's Family' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Friday, April 14, 2017

74. சேகரின் நண்பர்கள்

என்னைப் பெண் பார்க்க வந்தபோதே சேகர் சற்று வித்தியாசமாகத்தான் நடந்து கொண்டார். 

பெண் பார்த்ததும், "ஓரிரு நாட்களில் கடிதம் போடுகிறோம்" என்று சொல்லி விட்டு அவர் அம்மா கிளம்ப யத்தனித்தபோது அவர் குறுக்கிட்டு, "இதெல்லாம் எதற்கு? எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கும் என்னைப் பிடித்திருந்தால் இப்போதே பேசி முடிவு செய்து விடலாமே!" என்றார்.

அவர் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. "நீ பட்டென்று சொன்னது போல் பெண்ணும் சொல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அவள் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தனியேதான் சொல்லுவாள். அதற்குத்தான் இந்த ஊருக்குப் போய்க் கடிதம் எழுதும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்" என்று ஒரு நீண்ட உரையாற்றி விட்டு அவர் அப்பா கிளம்பி விட்டார்.

ஆனால் சொன்னது போலவே இரண்டு நாட்களில் கடிதம் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதாம்! அந்த நாட்களில் பொதுவாகப் பெண்களுக்கென்று தனியே விருப்பம் கிடையாது. அவரை வேண்டாம் என்று சொல்ல எனக்குக் காரணம் எதுவும் இல்லை என்பதால் நானும் ஒப்புக்கொண்டு விட்டேன்.

கல்யாணம் நிச்சயம் ஆன இரண்டு நாட்களில் சேகர் என் வீட்டுக்கு வந்தார். என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்தேன். ஆனால் அவர் பார்க்க வந்தது என் அப்பாவை! கல்யாண மண்டபம் பற்றிச் சில யோசனைகள் சொல்வதற்காகத்தான் வந்தாராம்!

"அவசரப்பட்டு அதிக வாடகை கொடுத்து ஏதாவது மண்டபத்தை ஏற்பாடு செய்து விடாதீர்கள். குறைந்த வாடகைக்கு நல்ல மண்டபங்கள் இருப்பது பலருக்குத் தெரியாது" என்றவர். "என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இந்த ஊரில் இருக்கும் எல்லா மண்டபங்கள் பற்றியும் தெரியும். அவன் ஆஃபீஸ் ஃபோன் நம்பர் கொடுக்கிறேன். நானும் அவனிடம் சொல்கிறேன். நீங்கள் அவனுக்கு ஃபோன் பண்ணினால் நல்ல மண்டபம் ஏற்பாடு செய்து கொடுப்பான்" என்றார் என் அப்பாவிடம்.

"மாப்பிள்ளைக்குத்தான் நம் மீது எவ்வளவு அக்கறை!" என்று அகமகிழ்ந்து போனார் என் அப்பா.

ல்யாணத்துக்குப் பிறகுதான் அவரது குணம் எனக்குத் தெரிய வந்தது. தனக்கு மாமனார் ஆகப் போகிறார் என்பதற்காக அவர் என் அப்பாவுக்கு உதவ வரவில்லை. சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் அவர் இந்த உதவியைச் செய்திருப்பார். அவர் சுபாவமே அதுதான்!

முன்பின் தெரியாதவர்கள் விஷயங்களில் கூட அக்கறை காட்டுவார். தானே வலியப்  போய் யோசனை கூறுவார். உதவி செய்வார். இது போன்று செய்து வந்ததால், அவர் உதவி செய்தவர்களில் பலர் அவருக்கு நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

எங்கள் வீட்டுக்கு இவர் நண்பர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகி விட்டது. அவர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுப்பதே எனக்குப் பெரிய வேலையாகி விட்டது.

ஆனால் இதுபற்றி நான் அலுத்துக் கொள்வதில்லை. என் கணவர் மற்றவர்களுக்கு இவ்வளவு உதவி செய்யும்போது வீட்டுக்கு வரும் அவர் நண்பர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுக்கும் வேலையைக் கூட நான் செய்யக் கூடாதா என்று நினைத்துக் கொள்வேன்.

ஒருமுறை எங்களுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கல்லாரி மாணவி பேச்சுவாக்கில், தான் வெளி நாட்டில் போய் மேல் படிப்புப் படிக்க வேண்டும் என்று சொன்னாள். இவர் அவளிடம் விவரங்களை வாங்கிக் கொண்டார்.

ஊருக்குத் திரும்பியதும், சில நண்பர்களை விசாரித்து வெளிநாடு  சென்று படிக்க என்னென்ன செய்ய வேண்டும், இதற்கு உதவி செய்யக்கூடிய நம்பத்தக்க நிறுவனங்கள் என்ன என்ற விவரம் எல்லாம் சேகரித்து, ஒரு வாரம் கழித்து அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு ஃபோன் செய்து விவரங்களைச் சொன்னார்.

"என்ன சார், ரயிலில் ஏதோ பேச்சுவாக்கில் என் பெண் சொன்னதற்காக இவ்வளவு விவரங்கள் சேகரித்து எனக்கு ஃபோன் செய்திருக்கிறீர்களே! உங்களைப்  போல் இன்னொரு மனிதரை இந்த உலகத்தில் பார்க்க முடியுமா?" என்று நெகிழ்ந்து போனார் அந்தப் பெண்ணின் தந்தை.

இவர் சொன்ன விவரங்களைப் பயன்படுத்தி அந்தப் பெண் இப்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாள் விடியற்காலையில் அமெரிக்காவிலிருந்து ஃபோன் செய்து "என்ன அங்க்கிள் எப்படி இருக்கிறீர்கள்?" என்பாள். வாரம் ஒரு முறை அவள் அப்பா உள்ளூரிலிருந்து ஃபோன் செய்து நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்!

ப்போதுதான் எங்கள் கல்யாணம் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஒடி விட்டன. இதோ இன்று இவர் வேலையிலிருந்து ஒய்வு பெறப் போகிறார்.

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்' என்ற பழமொழி உண்மையோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் பையனும் பெண்ணும் படித்து வேலைக்குப் போய்த் திருமணமும் ஆகி வாழ்க்கையில் வேரூன்றி விட்டார்கள்!

வேலையிலிருந்து ஒய்வு பெற்று, மாலை இவர் வீடு வந்தபோது, இவருடன் இவர் நெருங்கிய நண்பர்கள் நாலைந்து பேர் வந்தனர்.

"மேடம், இன்றைக்கு சேகருக்கு நடந்தது போல ஒரு வழியனுப்பு விழா வேறு யாருக்கும் நடந்ததில்லை. போன மாதம் ஒய்வு பெற்ற எங்கள் ஜெனரல் மேனேஜருக்கு நடந்த வழியனுப்பு விழா கூட இத்தனை சிறப்பாக நடக்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை ஊழியரிடமும் நெருங்கிப் பழகியவர் எங்கள் ஜி.எம்.

"உங்கள் கணவருக்கு இவ்வளவு பாப்புலாரிடி இருப்பதைப் பார்த்து, அவருடன் இத்தனை வருடங்களாக நெருங்கிப் பழகும் எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சேகர் என்ற பெயரை விட வசீகரன் என்ற பெயர்தான் இவருக்குப் பொருத்தமாக இருக்கும். ஆஃபீஸில் மட்டும் இல்லை, ஆஃபீசுக்கு வெளியேயும் இவருக்கு எத்தனை நண்பர்கள்! ஒருவர் தன் வாழ்நாளில் இத்தனை நண்பர்களைச் சம்பாதிக்க முடியுமா?" என்றார் இவர் நண்பர் சுந்தர்.

'முடியும், மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் இருந்தால்!' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தவர்களுக்குக் காப்பி போடப் போனேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 74
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

பொருள்:
மற்றவர்கள் மீது அன்பு இருந்தால் அவர்கள் நலனில் அக்கறை இருக்கும். இந்த அக்கறை நட்பு என்னும் பெரும் செல்வத்தை வழங்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Sekar's Friends' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Sunday, April 9, 2017

73. கண்டேன் கல்யாணியை!

அந்த வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தால் அருகில் சென்று பார்த்தேன். யாரோ இறந்து விட்டார்கள் என்று தெரிந்தது. பல பேர் உள்ளே போய் விட்டு வந்து கொண்டிருந்தனர். இறந்தவர் ஒரு வி.ஐ.பி போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்றுத் தள்ளிப்போய், தெருவில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "இறந்து போனது யார்?"

"கல்யாணி அம்மா!" என்று பதில் வந்தது.

அப்படி ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. கல்யாணி அம்மா யார் என்று அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. 'கல்யாணி அம்மாவைத் தெரியாதா உங்களுக்கு?' என்று பதில் சொல்லுவார் என்று தோன்றியது!

கூட்டமாக நின்றிருந்தவர்களின் அருகில் போய் நின்று கொண்டேன் - அங்கே இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டு கல்யாணி அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று.

சுமார் பதினைந்து நிமிடம் அங்கே நின்று நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்கள் இவை.

நான் நினைத்தது போல் கல்யாணி என்பவர் ஒரு வி.ஐ.பி. இல்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. அதிகம் படித்தவர் இல்லை, எந்தப் பதவியிலும் இருந்தவரும் இல்லை. கணவன் மனைவி என்று இரண்டே பேர் கொண்ட குடும்பம். குழந்தைகள் இல்லை.

பின் எப்படி அவரது உடலைப் பார்க்க இத்தனை பேர் வந்து நிற்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடை காண நான் இன்னும் சற்று நேரம் நின்று மேலும் பலர் பேசியவற்றைக் கேட்க வேண்டியிருந்தது.

"ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது கல்யாணி அம்மா அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து, 'ஏம்மா, ரொம்ப சோர்வா இருக்கியே, கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டுப் போ' என்று என்னை வீட்டுக்குள் அழைத்தார்கள். தண்ணீர் கொடுத்து விட்டு பள்ளிக்கூடத்தில் நடந்ததைப் பற்றி விசாரித்தார்கள். அதற்குப் பிறகு தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான் கல்யாணி அம்மா வீட்டுக்குப் போய் விட்டுத்தான் என் வீட்டுக்குப் போவேன். நான் சொல்வதையெல்லாம் சிரித்துக் கொண்டே பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள்! என் அம்மா கூட நான் ஏதாவது சொன்னால், 'போதும் போதும். போய் வேலையைப் பாரு' என்று அலுத்துக் கொள்வார்கள். கல்யாணி அம்மா மாதிரி பாசமும், அக்கறையும் கொண்ட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை!" - சொன்னவள் ஒரு சிறுமி.

"ஒருநாள் கோவிலில் உட்கார்ந்து எனக்குத் தெரிந்தவர்களிடம் என் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இந்தக் கல்யாணியை யாரென்றே அப்போது எனக்குத் தெரியாது. நான் சொன்னதைத் தற்செயலாகக் கேட்டு விட்டு, 'அதுதான் கோவிலுக்கு வந்து விட்டீர்களே, எல்லாம் சரியாகி விடும்!' என்றாள். அவளுடைய சிரித்த முகத்தைப் பார்த்ததுமே அவளை எனக்குப் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு அவளிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன். எனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். என்னை டாக்டரிடம் செக் அப்புக்கு அழைத்துப் போக என் வீட்டில் யாருக்கும் நேரம் இல்லை என்று சொன்னேன். அவளே என்னை அழைத்துக் கொண்டு போனாள். இது மாதிரி எத்தனையோ உதவிகள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் பாசம் காட்டும் வேறொரு பிறவியை நான் பார்த்ததில்லை" - ஒரு வயதான பெண்மணி சொன்னது இது.

"இந்தத் தெருவில யார் வீட்டில இல்லேன்னாலும் அவங்களுக்கு வரும் கடிதங்கள், பார்சல்கள் எல்லாவற்றையும் கல்யாணி அம்மாவிடம்தான் கொடுப்பேன். என் குடும்பத்தைப் பத்தி அடிக்கடி விசாரிப்பாங்க. 'வெய்யில்ல அலையிறீங்களே!'ன்னு பரிவாகச் சொல்லி தினமும் தண்ணீர் கொடுப்பார்கள். சில நாட்கள் மோர், காப்பி எல்லாம் கூடக் கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பவர்கள் நான் அவர்களுக்கு ஏதோ உறவு என்று நினைத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு அன்பு காட்டுவார்கள்." சொன்னவர் ஒரு கூரியர் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்.

இன்னும் நிறைய பேர் பேசுவதைக் கேட்டேன். அவற்றிலிருந்தெல்லாம் நான் புரிந்து கொண்டது இதுதான். கல்யாணி என்பவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரையும் நேசித்த அவர் மறைந்ததும் அவர் அன்பைப் பெற்றவர்கள் அவர் வீட்டு வாசலில் குவிந்ததில் என்ன வியப்பு?

கல்யாணியின் உயிர் பிரிந்து விட்டதால் அவர் உடல் இனி இந்த உலகில் இல்லாமல் போய் விடும். ஆனால் அவர் நினைவுகள் பலர் மனங்களிலிருந்து என்றுமே நீங்காது என்று எனக்குத் தோன்றியது.

அன்பு நடனமாடிய நெஞ்சம் கொண்ட அந்தப் பெண்மணியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த நானும் அவர் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்:
உடலோடு எப்படி உயிர் இணைந்திருக்கிறதோ, அது போல் நம் வாழ்க்கையோடு அன்பு இணைந்திருக்க வேண்டும். (அன்பு இல்லாத வாழ்க்கை உயிர் இல்லாத உடலைப் போன்றது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 
Read 'Who was Kalyani Madam?' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Thursday, April 6, 2017

72. சொத்து யாருக்கு?

"என் சொத்தில அவனுக்கு ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்!" ஆத்திரமாகக் கூவினார் தண்டபாணி.

"அப்படி என்ன தப்புப் பண்ணிட்டான் உங்க பையன்? வேற ஜாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ்வளவு பெரிய தப்பா?" என்றார் அவர் நண்பர் சோமசுந்தரம்.

"என் பேச்சை மதிக்காதவனுக்கு என் சொத்து மட்டும் எதுக்கு?"

"உங்களுக்கு இருக்கறது ஒரே பையன். அவனுக்குக் கொடுக்காம வேற யாருக்குக்  கொடுக்கப் போறீங்க?" 

"இன்னொரு  கல்யாணம் பண்ணிக்கறேன். எல்லா சொத்தையும் என் பொண்டாட்டிக்கு எழுதி வைக்கிறேன்."

"இந்த வயசிலயா?..." என்று இழுத்தார் சோமசுந்தரம்.

தண்டபாணி சொன்னபடியே செய்து விட்டார்!

தன் ஐம்பத்தைந்தாவது வயதில், நாற்பது வயதான பரிமளத்தைக் கல்யாணம் செய்து கொண்டார். பரிமளம் பெற்றோர்களை இழந்து, தூரத்து உறவினர்கள் வீட்டில் ஒரு வேலைக்காரி போல் இருந்து வந்தவள்.

யார் மூலமோ பரிமளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை "வளர்த்து வந்த" உறவினர்களுக்குக்  கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு அவளை மணந்து கொண்டார்.

கல்யாணம் ஆனதும் தன் சொத்துக்கள் அனைத்தையும் மனைவியின் பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டார் தண்டபாணி. அவர் மகன் ராஜு வந்து கத்தி விட்டுப் போனான். கோர்ட்டுக்குப் போவேன் என்றான். "போ!" என்று சொல்லி விட்டார் தண்டபாணி.

போவதற்கு முன், ராஜு பரிமளத்தைக் கண்டபடி ஏசினான். "எங்கப்பனை மயக்கி சொத்தெல்லாம் எழுதி வாங்கிக்கிட்டே இல்ல? பாத்துக்கறேண்டி உன்னை!" என்றான்.

"என் பொண்டாட்டியை மரியாதை இல்லாம பேசினா உன்னைக் கொலை பண்ணிடுவேன்!" என்று கத்தியபடி பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து மகன் மீது வீசினார் தண்டபாணி.

ராஜு போனதும், "என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? ஏற்கெனவே, சொத்துக்காகத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஊர்ல சில பேரு பேசறாங்க. எனக்கு எதுக்கு உங்க சொத்து? பேசாம உங்க புள்ள பேருக்கே எழுதிடுங்களேன்" என்றாள் பரிமளம்.

"இப்ப சொல்றேன் கேட்டுக்க. நான் செத்துப் போன பிறகும் நீ இந்த சொத்தை ராஜுவுக்குக் கொடுக்கக் கூடாது. வேற யாருக்கு வேணும்னா கொடு. எனக்குக்  கவலையில்லை."

பத்து வருடங்கள் பரிமளத்துடன் வாழ்ந்து விட்டு தண்டபாணி இறந்து போனார்.

ண்டபாணி இறந்த பிறகு ராஜு பரிமளத்திடம் வந்து பேசினான். 

"சித்தி! உங்களுக்குத்தான் யாரும் இல்லையே! அப்பா உங்க பேர்ல எழுதி வச்சிருக்கிற சொத்தை எல்லாம் என் பேருக்கு மாத்திடுங்க. உங்களைக் காலம் முழுக்க வச்சுக் காப்பாத்தறேன். அப்படி உங்களுக்கு என்னோட இருக்க விருப்பம் இல்லேன்னா, உங்க தேவைக்கு மட்டும் கொஞ்ச சொத்தை வச்சுக்கிட்டு மீதியை எனக்குக் கொடுத்துடுங்க. நீங்க அப்படிப் பண்ணலேன்னா, உங்க காலத்துக்கப்புறம் சொத்தெல்லாம் வேறு யார் கைக்கோ போயிடும்."

பரிமளம் மறுத்து விட்டாள். "உன் பிள்ளை பெரியவனானப்புறம் வா. அவனுக்கு ஏதாவது கொடுக்க முடியுமான்னு பாக்கறேன். உனக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு உங்கப்பா சொல்லியிருக்காரு."

ராஜு அவளை மீண்டும் கடும் சொற்களால் ஏசி விட்டுப் போனான். தன் தந்தையை ஏமாற்றிச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கி விட்டதாக அவள் மீது வழக்குப் போட்டான். ஆனால் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வரவில்லை.

ண்டபாணி இறந்து பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பரிமளம் உடல்நிலை சரியில்லாமல் போய்ப் படுத்த படுக்கையானாள். ராஜூவுக்குச் சொல்லி அனுப்பினாள். அவன் வரவில்லை.

சில தினங்கள் கழித்து ராஜூவுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் படித்தான்.

"நான் அதிக நாள் இருக்க மாட்டேன். சொத்துக்களை உன் பையன் பெயருக்கு எழுதியிருக்கிறேன். உயில் வக்கீலிடம் இருக்கிறது. உன் அப்பா எனக்கு எழுதி வைத்த சொத்துக்களை உனக்கே கொடுத்திருப்பேன். ஆனால் உனக்குக் கொடுக்கக் கூடாது என்று உன் அப்பா சொல்லி விட்டார். அதனால்தான் நீ வந்து கேட்டபோது மறுத்து விட்டேன்.

"உன் பையன் சிறுவன் என்பதால் அவன் பெயருக்குச் சொத்தை எழுதினால் உன்னைத்தான் கார்டியனாகப் போட வேண்டும். அது உன் அப்பாவின் விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும் என்பதால் அவன் பெரியவன் ஆகும் வரை காத்திருந்தேன்.

"உயில் எழுதுவது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நீ என் மீது வழக்குப் போட்டதால் நான் ஒரு வக்கீலைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அந்த வக்கீலின் உதவியுடன்தான் உயிலை எழுதினேன்.

"உன் அப்பா எனக்கு ஒரு நல்ல கணவராக இருந்தார். அவர் ஏன் உனக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீ அவரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டிருந்தால், கொஞ்ச நாளில் அவர் கோபம் குறைந்திருக்கலாம்.

"நீயும், உன் மனைவி, மகன் ஆகியோரும் நீண்ட நாட்கள் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்."

கடிதத்தைப் படித்ததும், ராஜு பரிமளத்தின் வீட்டுக்கு ஓடினான். வீட்டின் முன் சிறு கூட்டம் இருந்தது. வக்கீலும் இருந்தார். "சித்திக்கு என்ன சார் ஆச்சு?" என்றான் ராஜு பதட்டத்துடன்.

"இன்னிக்குக் காலையில உயிர் போயிடுச்சு. எனக்கு யாரோ தகவல் சொன்னதால நான் வந்தேன்."

ராஜு உள்ளே போக யத்தனித்தான்.

"நில்லுப்பா. பாடி உள்ளே இல்லை!" என்றார் வக்கீல்.

"அதுக்குள்ளே எடுத்துட்டாங்களா? நான்தானே கொள்ளி  போடணும்?"
என்றான் ராஜு.

'அவங்க உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் பண்ணியிருக்காங்க. அதனால அவங்க பாடி ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கு. எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்ததும் மீதி உடம்பு வரும். அதுக்கு நீ கொள்ளி  வைக்கலாம்!" என்றார் வக்கீல்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்:
அன்பு இல்லாதவர்கள், எல்லாம் தமக்கே வேண்டும் என்ற சுயநல எண்ணத்தில் வாழ்வார்கள். அன்பு உள்ளவர்கள் தங்கள் உடைமைகளை மட்டுமின்றி தங்கள் உடலைக் கூட மற்றவர்களுக்காக அர்ப்பணித்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Parimalam's Legacy' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























Tuesday, April 4, 2017

71. அன்பு வந்தது என்னை ஆள வந்தது!

செண்பகத்துக்குத்  திருமணம் ஆனபோது அவளுக்கு  வயது 22. அவள் கணவன் சங்கரன் ஒரு நிறுவனத்தில் உதவியாளனாகப் பணி புரிந்து வந்தான். சுமாரான சம்பளம். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்பே அவளுக்குத் தெரிந்ததுதான்.

அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவள்தான் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப்  பார்த்ததாகவே தெரியவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக வந்து பெண் பார்ப்பது போல் பார்த்து விட்டுப் போய் விட்டான்.

செண்பகம் நல்ல அழகு என்று பலரும் சொல்வார்கள். அவள் அழகுக்காகவே யாராவது ஒரு பணக்காரப் பையன் அவளைக் கொத்திக்கொண்டு போய் விடுவான் என்று அவள் அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.

சங்கரனைப் போல ஒரு சாதாரணமான நிலையில் இருந்த மாப்பிள்ளையை செண்பகத்தின் அம்மா விரும்பவில்லை. ஆனால் அவள் அப்பா அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்து விட வேண்டும் என்ற அவசரத்தில் முதலில் வந்த வரனைப் பேசி முடித்து விட்டார்.

செண்பகத்துக்குத் தனக்கு கணவனாக வரப்போகிறவனைப் பற்றி எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும், தன் அழகை ஒரு கணம் கூட அவன் ரசிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவள் முகத்தைக் கூட அவன் சரியாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகும் சங்கரன் அவளை அதிகம் லட்சியம் செய்யவில்லை என்று தோன்றியது. 'நீ அழகாக இருக்கிறாய்' என்றோ, 'உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது' என்றோ பொதுவாக எல்லாக் கணவர்களும் சொல்வது போல் அவன் எதுவும் சொன்னதில்லை.

அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை; கோபித்துக் கொண்டதில்லை; அவள் ஏதாவது தவறு செய்தால்  ஒன்றும் சொல்வதில்லை. ஒன்று கோபித்துக் கொள்ள வேண்டும், அல்லது 'பரவாயில்லை' என்றாவது  சொல்ல வேண்டும். சங்கரன் இரண்டையும் செய்வதில்லை. கோபித்துக் கொண்டிருக்கிறானா, அல்லது அவள் செய்த தவறைப்  பொருட்படுத்தவில்லையா என்று அவளால் தீர்மானிக்க முடிவதில்லை.

கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. பாலுவும், சாந்தியும் பிறந்து விட்டார்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்றுதான் இரண்டாவது குழந்தைக்கு சாந்தி என்று பெயர் வைத்தான் . (சாந்தி, மங்களம் என்றெல்லாம் பெயர் வைத்தால் அதற்கு மேல் குழந்தை பிறக்காதாமே!)

பாலுவுக்கு நாலு வயது. சாந்திக்கு இரண்டு வயது. குழந்தைகளிடம் சங்கரனுக்கு அதிகப் பாசம் உண்டு. அவர்களும் அப்பா அப்பா என்று அவனிடம்தான் அதிகம் ஒட்டிக் கொள்வார்கள்.

"உங்களுக்கு வேண்டியதையெல்லாம் நான்தான் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு உங்கள் அப்பாதான் முக்கியம்!" என்று அவள் விளையாட்டாகக் குழந்தைகளைக் கோபித்துக் கொண்டபோது அவர்களுடன் சேர்ந்து சங்கரனும் சிரித்தான். எப்போதோ ஒருமுறை அவன் முகத்தில் வரும் சிரிப்பு அது!

அலுவலக வேலையின் அழுத்தமும், குடும்பப் பொருளாதார நிர்வாகத்தின் சுமையும் அன்பு, பாசம், சிரிப்பு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை அவன் மனதிலிருந்து வற்றிப் போகச் செய்து விட்டனவோ என்று அவளுக்குத் தோன்றும்.

ருநாள் செண்பகம் ஜுரம் என்று படுத்துக்கொண்டு விட்டாள். இந்த ஐந்து வருடங்களில் இதற்கு முன்பு ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டவள் இல்லை அவள். இந்த முறை அவளால் முடியவில்லை.

குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் அவள் பக்கத்திலேயே இருந்தனர். சங்கரன் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவளை ஆட்டோவில் அழைத்துச் சென்றான். ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள்.

பக்கத்து வீட்டு அலமேலுதான் அவளுக்குக்  கஞ்சி போட்டுக் கொடுத்ததுடன், குழந்தைகளுக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாள். ஆனால் அவள் எவ்வளவு வற்புறுத்தியும் சங்கரன் அலமேலு கொடுத்த சாப்பாட்டை வாங்க மறுத்து விட்டான்.

"உங்களுக்கு ஏன் சிரமம்? நீங்கள் குழந்தைகளுக்குச் செய்வதே பெரிய விஷயம்! நான் எப்படியாவது பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டான்.

"நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?" என்று அவள் கேட்டதற்கு, "என் நண்பன் முரளி வீட்டில் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் அவன்.

ஜுரத்திலிருந்து செண்பகம் மீண்டு எழ ஏழு நாட்கள் ஆகி விட்டன. உடல்நிலை சரியானதும், முரளியின் மனைவி கீதா வந்து பார்த்தாள்.

உடல் நலம் பற்றி அவள் விசாரித்த பிறகு, "இந்த ஒரு வாரமும் அவருக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு போட்டு அவரைப் பார்த்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி" என்றாள் செண்பகம்.

"எங்கள் வீட்டில் அவர் எங்கே சாப்பிட்டார்? நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஓரிரு முறை காப்பி குடித்ததைத் தவிர எங்கள் வீட்டில் வேறு எதுவும் சாப்பிடவில்லையே!" என்றாள் கீதா.

"உங்கள் வீட்டில் சாப்பிடுவதாகத்தானே சொன்னார்?" என்றாள் செண்பகம்.

"சும்மா சொல்லியிருக்கிறார். உங்களுக்கு உடம்பு சரியில்லாததிலிருந்து உங்கள் வீட்டுக்காரர் ஒழுங்காகச் சாப்பிடவே இல்லை. டீக்கடையில் டீயையும் பன்னையும் சாப்பிட்டு வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பதாக இவர் சொன்னார். 'சங்கரன் முகத்தில் இப்படி ஒரு சோகத்தை நான் பார்த்ததில்லை. கண் கூடக் கலங்கியிருந்தது. ரகசியமாக அழுதிருக்கிறான் போலிருக்கிறது' என்று இவர் சொன்னார்."

செண்பகம் பிரமிப்புடன் கீதாவைப் பார்த்தாள். சங்கரனால் அழ முடியும் என்று கூட அவள் நினைத்ததில்லை. அதுவும் மனைவிக்காகச் சரியாகச் சாப்பிடாமல், கவலைப்பட்டு அழுதிருக்கிறான் என்றால்...

'அட பைத்தியக்காரரே! உங்களுக்கு என் மீது இவ்வளவு அன்பு இருக்கிறது என்று எனக்கு ஒரு கோடி காட்டியிருந்தால் நான் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்திருப்பேனே!'

கீதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். "...இப்போதுதான் இவர் என்னிடம் சொன்னார். நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டால் உங்கள் உடல் பலவீனமாகி விடும் என்பதற்காக அவர் ஆபரேஷன் செய்து கொண்டாராம்!... கடவுளே! உங்களுக்கு இது தெரியாது என்று இவர் சொன்னார். நான் உளறி விட்டேனே!"

செண்பகத்தின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. தான் அன்பு வைத்திருப்பவரின் துன்பத்தைத் தாள முடியாமல் வெளிப்படும் சிறிதளவு கண்ணீர் கூட  உள்ளிருக்கும் அன்பை வெளிப்படுத்தி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

   
Read 'Married for Five Years' the English version of this story. 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்