About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, March 29, 2016

61. வேண்டாம் பதினாறு!

"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!"

இவ்வாறு தன்னையும் தான் கைப்பிடித்த நங்கை மீனாட்சியையும் வாழ்த்தியவர்களில் எவ்வளவு பேருக்கு இந்த வாழ்த்தின் பொருள் தெரியும் என்று நினைத்துப் பார்த்தான் சங்கர்.

திருமணத்துக்கு வந்திருந்த அவன் தந்தையின் நண்பர் தமிழ் அறிஞர் சுந்தரமுர்த்திக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று தோன்றியது.

திருமணச் சடங்குகள் முடிந்து சற்று ஒய்வு கிடைத்தபோது சுந்தரமுர்த்தியிடம் சென்று தன் ஐயத்தைக் கேட்டான் சங்கர்.

"'பதினாறும் பெற்று' என்று வாழ்த்துகிறார்களே, அந்தப் பதினாறு பேறுகள் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம்" என்றான்.

"பலருக்கு இவை என்னவென்று தெரியாது. பலர் இவற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உன்னுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன என்பது பற்றிச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

"காளமேகப் புலவரின் ஒரு கவிதையின் அடிப்படையில் சொல்கிறேன். 1.புகழ் 2.கல்வி 3.வீரம் 4.வெற்றி 5.நன்மக்கட்பேறு 6.துணிவு 7.செல்வம் 8.குறைவற்ற (அபரிமிதமான) உணவு 9.எல்லாவிதமான நலன்கள் (சௌபாக்கியம்) 10.சுகங்கள் 11.நல்லறிவு (விவேகம்) 12.அழகு 13.பெருமை (கௌரவம்) 14.அறம் 15.குலம் 16.நீண்ட ஆயுள்.

"இவற்றில் வீரம்-துணிவு, புகழ்-பெருமை போன்றவை ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றலாம். அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம். 'குலம்' என்பதற்கு 'குடும்பத்தின் நற்பெயர்' என்று பொருள் கொள்ள வேண்டும். என்ன, பதினாறு பேறுகளைப் பெற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் பேறுகள் எனக்குக் கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம்" என்றான் சங்கர்.

"நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாய். உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். என் சிறு வயதில், பதினாறு பேறுகள் என்பதற்குப் பதினாறு பிள்ளைகள் என்று விளையாட்டாகப் பொருள் சொல்வார்கள். புதிதாகக் கல்யாணம் ஆனவர்களை 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று யாராவது வாழ்த்தினால், உடனே கல்யாண மாப்பிள்ளை, 'சார்  அவ்வளவெல்லாம் தாங்காது. ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்தால் போதும்!' என்பார்.

"ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு பல குடும்பங்களில் 10,12 குழந்தைகள்  பிறப்பது சகஜம் என்பதால் இப்படி. இப்போது கூட நான் என்ன சொல்வேன் என்றால், வரமளிக்கும் கடவுள் உன்னிடம் 'உனக்கு 16 பேறுகள் வேண்டுமா, அல்லது ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டுமா?' என்று கேட்டால், ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டும் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்.

"நல்ல பிள்ளைகளைப் பெறுவதை விடச் சிறந்த பேறு வேறு ஏதும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால், நல்ல பிள்ளைகளைப் பெற்றால், அவர்கள் மூலம் மற்ற பேறுகள் தாமே நம்மைத் தேடி வந்தடையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நீ கடவுளிடம் எதாவது வேண்டிக் கொள்வதாக இருந்தால், 'நல்ல பிள்ளைகளைக் கொடு' என்றே  வேண்டிக் கொள்!" என்று முடித்தார் சுந்தரமூர்த்தி.

ஒரு ஆர்வத்தில் துவங்கிய பேச்சு நல்ல அறிவுரையில் முடிந்தது சங்கருக்கு மிகவும் திருப்தி அளித்தது,
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு 
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்:
எனக்குத் தெரிந்த வரையில், எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் இயல்புள்ள நல்ல மக்களைப் பெறுவதை விடச் சிறப்பான பேறு வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


 Read 'The Sixteen Riches' the English version of this story.  
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Friday, March 25, 2016

60. அவள் அப்படித்தான்!

"டேய் ரகு எப்படிடா இருக்கே? உன் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான் பாக்கறேன்! நீதான் என் கல்யாணத்துக்கு வரவே இல்லை!" என்றான் ராஜேஷ்.

"காரணம் உனக்குத் தெரியுமே!  வேலை விஷயமா டில்லிக்குப் போயிருந்தேன்னு! உன் மனைவி வந்திருக்காங்களா?"

"அதோ உன் மனைவியோட பேசிக்கிட்டிருக்கா பாரு! அவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவங்களாம்!"

"அப்ப, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதுதான்! அவங்க நம்மளைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாமளும் அவங்களைப் பத்திக் கொஞ்சம் பேசலாம். உன் மனைவி எப்படி?"

"எப்படின்னா? தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பா. கொஞ்சம் நகைப் பைத்தியம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள  ரெண்டு தடவை என்னை நகை வாங்க வச்சுட்டா!"

"உன்கிட்நிறையப் பணம் இருக்கும் போலிருக்கு!"

"நீ வேற! கடன் வாங்கித்தான் நகை வாங்கிக் கொடுத்தேன். என்ன வயத்தெரிச்சல்னா தங்கத்தோட விலை இப்பக் குறைஞ்சுடுச்சு. ஆனா நான் வாங்கின கடன் வட்டியோட சேர்த்து அதிகமாயிடுச்சு!"

"நீ கடன் வாங்கித்தான் நகை வாங்கினேங்கறது உன் மனைவிக்குத் தெரியுமா?"

"கடன் வாங்கியாவது நகை வாங்கணும்னு பிடிவாதம் பிடிச்சது அவதான்! அது சரி, உன் மனைவி எப்படி?"

"இந்த விஷயத்தில உன் மனைவிக்கு நேர்மாறுன்னுதான் சொல்லணும்! நான் பிசினஸுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கி அதுக்கு வட்டி கட்டிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்கு இது தெரிஞ்சதுமே தன்னோட நகை எல்லாத்தையும் கழட்டிக் குடுத்துட்டா. மொதல்ல கடனை அடையுங்க, நகைக்கு என்ன, நம்பகிட்ட பணம் சேர்ந்தப்பறம் வாங்கிக்கலாம்னு சொன்னா. நான் அசந்து போயிட்டேன். இப்ப கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருக்கேன். வட்டிச் சுமை குறைஞ்சதே பெரிய லாபமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா  பணம் சேர்த்து அவளுக்கு ஒரு நகையாவது வாங்கிக் கொடுக்கணும்."

"ரொம்பப் பெரிய விஷயம்டா இது. இப்படிப்பட்ட மனைவி கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம்தான். ம்... என் மனைவியும் மனசு மாறினா நல்லா இருக்கும். அது இருக்கட்டும். கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சே, அப்பாவாகிற முயற்சி எல்லாம் எந்த அளவுக்கு இருக்கு?"

"இன்னும் ஆறு மாசத்தில அப்பா ஆகி விடுவேன். உன் கதை எப்படி?"

"வாழ்த்துக்கள். நான் அப்பா ஆறதுக்கு இன்னும் வேளை வரலை."

"ஓ! கவலைப்படாதே! சீக்கிரமே உனக்கும் நல்லது நடக்கும்!"

"எங்கே? என் மனைவிதான் குழந்தைக்கு இப்ப என்ன அவசரம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காளே!"

"ஏண்டி அதுக்குள்ளே என்னடி குழந்தைக்கு அவசரம்?" என்றாள் ரஞ்சனி ராஜேஷ்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ஏழெட்டு மாசம் கழிச்சுத்தான் நான் கர்ப்பமானேன். இது உனக்கு அவசரமாப் படுதா?" என்றாள் அஞ்சலி ரகு.

"என்னைப் பாரு. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் குழந்தை வேணாம்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். வாழ்க்கையைக் கொஞ்ச நாள் அனுபவிக்கணும்டி. அது இருக்கட்டும். என்ன  கண்ணாடி வளையலையும் தாலிக்கொடியையும் தவிர வேற நகையையே காணும்?"

"எனக்கு நகை போட்டுக்கறதுல அதிகமா ஈடுபாடு கிடையாது" என்றாள் அஞ்சலி.

"கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாதுன்னு சொல்லு!" என்றாள் ரஞ்சனி.

அதன் பிறகு அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள்.

ரண்டு வருடங்கள் கழித்து இரண்டு ஜோடிகளும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டபோது, ரஞ்சனியின் உடலில் இன்னும் சில நகைகள் ஏறியிருந்தன, ராஜேஷின் கடன் சுமை ஏறி இருந்ததைப் போல்!

அஞ்சலியின் உடலில் நகைகள் எதுவும் இல்லை. அவள் இடுப்பில் ஒன்றரை வயதுக் குழந்தை இருந்தது. ரஞ்சனியின் நகைகளை விட அஞ்சலியின் குழந்தை அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பொருள்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் சிறப்பு. நல்ல குழந்தைகளைப் பெறுவது அத்தகைய வாழ்க்கைக்கு நல்ல அணிகலன் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Boon of Having Children' the English version of this story.  
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Saturday, March 19, 2016

59. ருக்மிணியின் திட்டங்கள்!

நகரத்தில் பிறந்து வளர்ந்து, பட்டப்படிப்பு படித்தவளான ருக்மணி ஒரு கிராமத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் தன்னை மணந்ததில் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. 

ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே, தன் மனைவியின் நாட்டம் பணத்தில்தான் இருந்தது என்பதைப் புரிந்து கொண்டபோது அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

"டவுன்ல பொறந்து வளர்ந்து காலேஜில படிச்சுட்டு ஏன் இந்தப் பட்டிக்காட்டுல வந்து வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?" என்று ஒரு நாள் ருக்மிணியே அவனிடம் கேட்டாள்.

"என்னைப் புடிச்சதினாலதான்னு சொல்லிடாதே! சந்தோசம் தாங்காம என் இதயம் நின்னு போயிடப் போகுது!" என்றான் பாலகிருஷ்ணன் விளையாட்டாக. ஆயினும் மனதுக்குள் அவள் அப்படிச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

"நான் அப்படியெல்லாம் பொய் சொல்ற ஆளு இல்லே! இது ஒரு பட்டிக்காடா இருந்தாலும், நீங்க ஒரு முதலாளி. சொந்த நிலத்தில பயிர் செஞ்சுக்கிட்டு வாழ்க்கையை நடத்தறவரு. டவுன்ல யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, மத்தவங்ககிட்ட கை கட்டி வேலை பாக்கற ஒரு ஆளைத்தான் கட்டிக்கிட்டிருக்கணும். அவரு பியூனா இருந்தாலும் ஜெனரல் மானேஜரா இருந்தாலும் அடிமைத் தொழில் பாக்கிறவராத்தான் இருந்திருப்பாரு."

இந்த மட்டும் தன்  தொழிலுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறாளே என்று நினைத்துக் கொண்டான் பாலகிருஷ்ணன்.

"ஆனா உங்க வருமானம் பத்தாது. விவசாயத் தொழில்ல வருமானம் அதிகரிக்கறத்துக்கும் வாய்ப்பு இல்லே! அதனால நான் ஏதாவது தொழில் செய்யலாம்னு இருக்கேன்."

"தொழிலா? இந்த ஊர்லயா? அதோட, தொழில்ல முதலீடு செய்யறதுக்கெல்லாம் என்கிட்டே பணம் இல்லையே!"

'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க போதும். இன்னும் ஒரு வருஷத்தில வட்டியோட திருப்பித் தரேன். அப்படி உங்களால முடியாதுன்னா எங்க அப்பாகிட்டே வாங்கிக்கறேன். என்ன, வட்டி அவருக்குப் போகும்!"

"பத்தாயிரம் ரூபா என்னால கொடுக்க முடியும். நாளைக்கே தரேன். ஆனா என்ன தொழில், எப்படிப் பண்ணப் போறேன்னு ஒண்ணுமே புரியல்லியே!"

"உலகத்திலேயே லாபமான தொழில் வட்டிக்குக் கடன் கொடுக்கறதுதான். இந்த ஊர்ல வட்டிக்குக் கடன் கொடுக்கறவங்க யாரும் இல்லை. வட்டிக்குக் கடன் வாங்க இந்த ஊர் ஜனங்களெல்லாம் பஸ் புடிச்சு டவுனுக்குத்தான் போறாங்கன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்கிட்ட கடன் வாங்கினா பஸ் கட்டணம் மிச்சம் ஆகும், நேரம் அலைச்சல் எல்லாம் கூட மிச்சம் ஆகும்."

"வட்டித் தொழில் மட்டும் வேண்டாம் ருக்மணி!"

"ஏன்?"

"எங்க பரம்பரையே கொடுத்துப் பழக்கப்பட்ட பரம்பரை. எங்கப்பா, தாத்தா எல்லாரும் மத்தவங்களுக்கு தாரளமா உதவி செஞ்சிருக்காங்க. உதவின்னு கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதில்லை. அப்படி இருக்கச்சே நீ வட்டிக்குக் கடன் குடுத்தா நம்ப குடும்பப் பெயரே அழிஞ்சுடும்."

"அதானே பார்த்தேன் உங்க பரம்பரையில சொத்துக்கள் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கேன்னு! கொடுத்துக் கொடுத்தே அழிச்சிருக்காங்க உங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும். அதான் நீங்க ஓட்டாண்டியா நிக்கறீங்க!"

"வாய்க்கு வந்தபடி பேசாதே ருக்மணி. நாம வசதியா வாழற அளவுக்கு நமக்கு சொத்து இருக்கு. அதுக்கும் மேல, இந்த ஊர்ல நம்ப குடும்பத்தும் பேர்ல ஒரு மரியாதை இருக்கு. இப்ப உன்னை யாராவது வழியில பாத்தாக் கூட 'மகராசி'ன்னு வாழ்த்துவாங்க."

"மகராசின்னு வாயால வாழ்த்தினா போதுமா? மகாராணியா வாழணும். அதுக்கு நிறையப் பணம் வேணும். உங்க வருமானம் எல்லாம் ரெண்டு வேளை சாப்பிடறதுக்குத்தான் பத்தும். நமக்குப் பொறக்கப் போற குழந்தைகளை நல்லாப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு நிறைய சொத்து சேர்த்து வைக்கணும். இதுக்கெல்லாம் ஏத்த வருமானம் வட்டித் தொழிலில்தான் கிடைக்கும்."

"வேண்டாம் ருக்மணி. இந்தத் தொழிலை நான் அனுமதிக்க மாட்டேன்."

"நீங்க அனுமதிக்கலேன்னா எங்க அப்பாகிட்ட பணம் வாங்கி, இந்த ஊர்லேயே எங்கேயாவது ஒரு குடிசையைப் போட்டுக்கிட்டு இந்தத் தொழிலை நடத்தத்தான்போறேன்!"

அதற்கு மேல் பாலகிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை.

ருக்மிணி தன் அப்பாவிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டபோது, அவர் இது போதாது என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க, ருக்மணியின் வட்டித் தொழில் விரைவிலேயே ஜாம் ஜாமென்று துவங்கியது.

ருக்மிணி எதிர்பார்த்தது போல், டவுனுக்குப் போய் கடன் வாங்கிய பலர் அவளிடம் கடன் வாங்கினார்கள். 1000, 2000 என்று சிறிய தொகையை மட்டும் கடனாகக் கொடுத்து, வட்டியும் அசலும் திரும்ப வர வர, அவள் முதலீடு சில மாதங்களிலேயே குட்டி போடத் தொடங்கியது.

வட்டியை ஒழுங்காகக் கொடுக்காதவர்கள், அசலைக் கொடுக்காதவர்கள் எல்லோரையும் ருக்மிணி அவர்கள் வீடு தேடிச் சென்று அவர்கள் மானம் போகும்படி உரத்த குரலில் கடுமையாகப் பேசினாள். அவளுடைய ஏச்சு அருவருக்கும் அளவுக்கு இருந்ததால், அதற்கு பயந்தே கடனாளிகள் பணத்தைக் காலத்தில் செலுத்தத் துவங்கினர்.

பாலகிருஷ்ணன் இதில் பட்டுக் கொள்ளாமல் இருந்தாலும், சிலர் அவனிடம் ருக்மிணி பற்றி அங்கலாய்த்தார்கள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் பதிலே சொல்லவில்லை. சில சமயம், "இந்த வியாபாரம் என் பெண்டாட்டி செய்யறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

ருநாள் அவன் நண்பன் காளிமுத்து அவனைத் தேடி வந்தான். "நடவுக்கு உங்கிட்ட வாங்கின ஐயாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றான்.

"அதுக்கென்ன அவசரம்? இன்னும் அறுவடை ஆகலியே! இப்ப ஏது உன்கிட்ட பணம்?" என்றான் பாலகிருஷ்ணன்.

"என்கிட்ட பணம் இல்லைதான். என் மச்சான்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்."

"எதுக்கு? நான் உன்னைப் பணம் கேட்டேனா?" என்றான் பாலகிருஷ்ணன்.

"நீ கேக்கல்ல. கேக்கவும் மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் சம்சாரம் வட்டிக்குப் பணம் குடுத்துக்கிட்டு இருக்கறச்சே, நான் வட்டி இல்லாத இந்தக் கடனை ரொம்ப நாள் வச்சுக்கறது நல்லாவா இருக்கும்? உன் சம்சாரத்துக்கு இந்தக் கடன் விஷயம் தெரிஞ்சு ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னால அதைப் பொறுத்துக்க முடியாது" என்றான் காளிமுத்து.

பாலகிருஷ்ணன் தன் இயலாமையை நினைத்து மனம் நொந்தான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

பொருள்:
குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ள மனைவி அமையாதவனால் தன்னை இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் முன் கம்பீரமாக நடக்க முடியாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
  

Read 'Rukmini's Plans' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்!

சுகுணாவுக்குப் பொதுவாக சாமியார்களிடம் அதிக ஈடுபாடு கிடையாது. அவள் கணவன் கார்த்திக், இதற்கு நேர்மாறாக, காவி உடையைக் கண்டாலே வணங்கி உபதேசம் கேட்பவன்.

ஆயினும், அவளுடைய பகுதிக்கு மெய்யானந்தர் என்ற சாமியார் வந்தபோது அவரைச் சந்திக்க சுகுணா ஆர்வம் காட்டினாள். 

இதற்குக் காரணம் மெய்யானந்தர் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்பவர் என்று பெயர் பெற்றிருந்ததுதான்.

மெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். 

சுகுணாவின் முறை வந்தபோது, அவள் எழுந்து, "சுவாமி, ஆண்களுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வனவாசம், துறவறம் என்று நான்கு நிலைகள் வகுக்கப்பட்டிருப்பது போல் பெண்களுக்கு ஏன் வகுக்கப்படவில்லை?" என்று கேட்டாள்.

"இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆண், பெண் இருவருக்கும் இந்த நிலைகளை வகுத்தால், இருவரும் தனி தனிப் பாதையில் போக விரும்பலாம். கணவன் வனவாசம் போக விரும்பும்போது, மனைவி இல்லறத்தில் தொடர விரும்பலாம்.

"இரண்டாவது காரணம் ஆண்கள் இந்த நான்கு நிலைகளைப் பின்பற்றுவதை எப்போதோ விட்டு விட்டார்கள். பெண்களுக்கு இவை வகுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பார்கள், விரதம் போன்ற விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பது போல். இதை நம் முன்னோர்கள் விரும்பவில்லையோ என்னவோ!

"மூன்றாவது காரணம் நம் சமுதாயம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயம்! நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது!"

சாமியாரின் சிரிப்பில் பக்தர்களும் பங்கு கொண்டனர்.

"அப்படியானால் என்போன்ற பெண்களுக்கு வீடுபேறு என்பதே கிடையாதா?" என்றாள் சுகுணா விடாமல்.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரிய பேறு இருக்கிறதே, அதை விடவா வீடுபேறு பெரியது?"

கூட்டம் மீண்டும் சிரித்தது.

"இதை நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை" என்றார் மெய்யானந்தர், புன்னகை மாறாமல். "உண்மையிலேயே, பெண்களுக்கு மகப்பேற்றை விடப் பெரிய பேறு எதுவும் இல்லை."

சுகுணா சற்றே ஏமாற்றத்துடன் அமர்ந்தாள்.

"என்னம்மா, நான் சொன்ன பதில் உனக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?" என்றார் மெய்யானந்தர் அவளைப் பார்த்து.

"ஆமாம்" என்றாள் சுகுணா.

கூட்டம் அதிர்ச்சியான முகபாவத்துடன் அவளை நோக்கியது.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரும்பேறு இருக்கிறது என்பதற்காக வீடுபேறு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆண்களைப் போன்று ஆசிரம நியதிகள் எதுவும் பெண்களுக்கு வகுக்கப்படாததால் பெண்கள் வீடுபேறு அடைவதற்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை."

"எதுவுமே செய்ய வேண்டாமா?" என்றாள் சுகுணா வியப்புடன்.

"வேண்டாம். கணவனையும் குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக் கொண்டால் போதும்! என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா?"

இதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று கூட்டம் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுகுணா மட்டும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் சாமியாரும் சேர்ந்து கொண்டார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பொருள்:
ஒரு பெண் தன் கணவனையும் குடும்பத்தையும் முறையாகப் பேணி வந்தால், அவள் தேவர்கள் வாழும் உலகை அடையும் பெரும் பேற்றைப் பெறுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'Suguna's Questions' the English version of this story.  
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Sunday, March 13, 2016

57. வீட்டில் பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்!

தனக்கு உதவியாளராக ரம்யா வந்து சேர்ந்தபோது, ராம்குமார் கொஞ்சம் சங்கடமாகத்தான் உணர்ந்தான்.

நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருக்கும் அவனுக்குத் தனி அறை உண்டு. 

அவன் அறைக்கு வெளியே முன்னறை போல் இருந்த இடத்தில் அவன் உதவியாளரின் இருக்கை. 

இதற்கு முன்னால் அவனுக்கு உதவியாளராக இருந்தவர்கள் ஆண்கள்தான். இப்போதுதான் முதல் முறையாக ஒரு பெண் வந்திருக்கிறாள்.

முதல் நாளே உணவு இடைவேளையின்போது அவன் அறைக்குள் உரிமையோடு வந்து, தான் கொண்டு வந்திருந்த தக்காளி சாதத்தை ராம்குமாரிடம் ரம்யா பகிர்ந்து கொண்டபோது, அவனால் மறுக்கவோ, 'அனுமதி பெறாமல் எப்படி உள்ளே வந்தாய்?' என்று அவளிடம் கோபித்துக் கொள்ளவோ முடியவில்லை.

"யார் செய்தது, உங்கள் அம்மாவா?" என்றான் ராம்குமார், ஒரு பேச்சுக்காக.

"அம்மாவா? நான்தான் சார் செய்தேன். அம்மா அவர்கள் வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்?"

"அப்படியானால் நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்?"

'இதென்ன கேள்வி?' என்பது போல் அவனை உற்றுப் பார்த்த ரம்யா, "என் கணவர் வீட்டில்தான்! வேறு எங்கே இருப்பேன்? எங்கள் இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லையே!" என்று சொல்லிச் சிரித்தாள்.

"ஐ ஆம் சாரி" என்று அசடு வழிந்த ராம்குமார், அவளைச் சரியாகப் பார்க்காமல் அவள் இளம் பெண் என்பதை வைத்து அவள் திருமணம் ஆகாதவள் என்று நினைத்து விட்ட தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான்.

"இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? எனக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே நீங்கள் என்னைச் சந்தித்திருக்க வேண்டும்!" என்றாள் ரம்யா.

ராம்குமார் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். 'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்? ஒரு மாதிரியானவளாக இருப்பாளோ? நான் சற்று விலகியே இருப்பது நல்லது' என்று நினைத்துக் கொண்டான்.

"ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் கல்யாணம் ஆனவள் என்று சொல்லி விடலாம். அவள் கழுத்தில்தான் விலங்கு இருக்குமே! ஆனால் ஒரு ஆணைப் பார்த்தால் அவர் கல்யாணம் ஆனவரா என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கல்யாணம் ஆனவராகத்தான் இருக்க வேண்டும்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"சொல்ல மாட்டேன். இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு டெக்னிக். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!"

ன்று மாலை வீட்டுக்கு வந்ததும், அவன் மனைவி கங்காவிடம் இது பற்றிக் கேட்டான் ராம்குமார். 

"ஒரு ஆண் திருமணம் ஆனவனா என்பதைக் கண்டு பிடிக்கப் பெண்களிடம் ஏதோ டெக்னிக் இருக்கிறதாமே, உனக்குத் தெரியுமா?"

"யார் சொன்னார்கள்?"

"ரம்யா என்று எனக்கு உதவியாளராக ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் சொன்னாள்."

"எனக்குத் தெரியாது. அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றாள் கங்கா. 

அவள் கோபமாகப் பேசியது போல் தோன்றியது. 'ஒரு வேளை ரம்யாவுடன் எனக்கு ஏதாவது தொடர்பு ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறாளோ?'

நாளைக்கு ரம்யா "உங்கள் மனைவி என்ன சொன்னார்கள்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்று அவன் கவலைப்பட்டான். ஆனால் ரம்யா இதுபற்றி அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

ம்யா அவனுக்கு உதவியாளராக வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. அவனிடம் இயல்பாகவும், சில சமயம் விளையாட்டாகவும் பேசினாலும், வேலையில் கருத்தாக இருந்தாள்.

அவன் முதலில் பயந்தது போல் அவள் ஆண்களுக்கு வலை வீசும் குணம் கொண்டவள் இல்லை என்று தெரிந்தது. சொல்லப் போனால், அவளிடம் ஒரு அலட்சியம் இருந்ததாகத் தோன்றியது.

'நீ என் மேலதிகாரி. அதனால் நீ சொன்னதை நான் செய்கிறேன். மற்றபடி நீ யாரோ, நான் யாரோ' என்பது போல்தான் நடந்து கொண்டாள் . இதை அலட்சிய மனப்பான்மை என்று சொல்வதை விட சுதந்திர மனப்பான்மை என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

ஒருமுறை அலுவலகத்தில் ஒரு ஊழியர் அவளிடம் ஏதோ தவறாகப் பேசியபோது ரம்யா செருப்பைக் கழற்றியதாகவும், அந்த ஊழியர் பயந்து ஒடி விட்டதாகவும் ஒரு செய்தி அவனுக்கு வந்தது.

ரம்யா இது பற்றி அவனிடம் எவும் சொல்லவில்லை. அவனும் அவளைக் கேட்கவில்லை. இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் மீது அவனுக்கு ஒரு மரியாதை வந்து விட்டதாகத் தோன்றியது.

அன்று மாலை வீட்டுக்குப் போனதும், மனைவியிடம், "கங்கா, உன்னிடம்  ஒன்று கேட்க வேண்டும். உனக்கு வேலைக்குப் போக விருப்பமா?" என்று ஆரம்பித்தான்.

அவள் முகத்தில் உடனடியாக ஒரு மகிழ்ச்சிக் களை வந்து உட்கார்ந்து கொண்டது.

"கல்யாணத்துக்கு முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டுதானே இருந்தேன்? நீங்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று சொன்னதால்தானே வேலையை விட்டேன்! படித்து விட்டு வீட்டில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே என்று நான் வருந்தாத நாள் இல்லை. நீங்கள் சரி என்று சொன்னால் உடனே ஒரு வேலை தேடிக் கொள்வேன்."

"ஐ ஆம் சாரி கங்கா" என்றான் ராம்குமார். (ரம்யா வேலைக்குச் சேர்ந்த அன்று, அவளிடம் 'ஐ ஆம் சாரி' என்று அவன் சொன்னதற்கு ரம்யா குறும்புத்தனமாக பதில் சொன்னது இப்போது அவன் நினைவுக்கு வந்தது).

"வெளியே வேலைக்குப் போனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைத்துத்தான் அப்படிச் சொன்னேன். தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பெண்கள் கையில்தான் இருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. அதனால் நீ வேலைக்குப் போவதற்கு இனிமேல் நான் தடை சொல்ல மாட்டேன்."

"தாங்க்ஸ் எ லாட். ஆனால் நான் ரம்யாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளைப் பார்த்துத்தான் நீங்கள் மனம் மாறி இருக்கிறீர்கள்!"

"அது எப்படி உனக்குத் தெரியும்?"

"ம்? இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த டெக்னிக். அது என்ன டெக்னிக் என்று நீங்கள் ரம்யாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!"

சிரித்துக் கொண்டே உள்ளே போனாள் கங்கா.

திருமணத்துக்குப் பிறகு அவள் இத்தனை உற்சாகமாகச் சிரித்ததை ராம்குமார் பார்த்ததில்லை!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பொருள்:
ஒரு பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைப்பதன் மூலம் அவளுடைய கற்பைக்  காப்பாற்ற முடியாது. ஒரு பெண் தன் மனத்திண்மையின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Ramkumar Relents' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












56. சுகமான சுமைகள்

அலாரம் அடித்தபோது சுமித்ரா எழுந்திருக்கவில்லை. அதற்கு ஐந்து நிமிடம் முன்பே எழுந்து பல் துலக்கப் போய் விட்டாள். தினமும் அலாரம் வைத்து எழுந்து பழகியதில் தானாகவே விழிப்பு வர ஆரம்பித்து விட்டது.

அலாரம் அடித்த சத்தம் கேட்டதும், இனி அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலேயே எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

'கடிகாரமே, இனிமேல் நீ எனக்காக இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் என்னை எழுப்ப வேண்டாம்!'

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவளுக்கு சமையல் அறையில் வேலை இருந்தது. கணவன், மாமியார், குழந்தைகளுக்குக் காலை உணவு, மதிய உணவு செய்து குழந்தைகளுக்கும், தனக்கும் மதிய உணவைக் கட்டி முடித்த பின் மாமியாரை மென்மையாக எழுப்பினாள்.

மாமியார் எழுந்ததும் தான் செய்து வைத்தவற்றை அவரிடம் சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பினாள் சுமித்ரா.

"ஏன் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டே?" என்றார் மாமியார்.

"இனிமே பஸ்ஸிலதான் போகணும். அதனால கொஞ்சம் சீக்கிரம்தான் கிளம்பணும்."

"ஏன் சரவணன் வர மாட்டானா?"

"அவனுக்கு நேரத்தை மாத்திட்டாங்க. அவன் இனிமே லேட்டாதான் கிளம்புவான். அதனால அவனோட போக முடியாது."

"அடப்பாவமே! ஏற்கனவே நீ நாள் முழுக்க உழைக்கறே! உனக்கு இன்னும் அதிகப்படி கஷ்டமா?"

"நீங்க இப்படிச் சொல்றதே ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை! எந்த மாமியார் இப்படி மருமகள் கஷ்டப்படறாளேன்னு நெனைப்பாங்க?"

சுமித்ராவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஏண்டி அழறே? உன் கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள்தான். சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்" என்றார் மாமியார், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து.

'நல்லவேளை! நான் அழுத காரணம் அத்தைக்குத் தெரியாது, சரவணனோடு என்னால் இனிமேல் ஏன் போக முடியாது என்பது தெரியாத மாதிரி!'

சரவணன் அவளுடைய நிறுவனத்தில் வேலை செய்பவன். அவளை விட ஒரு வயது சிறியவன். அவன் அவள் வீட்டு வழியேதான் அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்பதால் அவள் அவனுடனேயே ஸ்கூட்டரில் வரலாம் என்று சொன்னவன் அவன்தான். முதலில் சுமித்ரா தயங்கினாலும், அவள் கணவனும், மாமியாரும் வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

அலுவலகத்தில் சிலர் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியதை அவள் பொருட்படுத்தவில்லை. சரவணன் தனது ஒன்று விட்ட சகோதரன் என்றே அவள் மற்றவர்களிடம் சொல்லி இருந்தாள். சரவணனும் அவளை 'அக்கா' என்றே அழைத்து வந்தான்.

ஆனால் பல நாட்களுக்குப் பிறகு, நேற்று இந்த உறவில் ஒரு சிக்கல் விழுந்து விட்டது. 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, சில சமயம், அவர்கள் வழியில் உள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் காப்பி அருந்துவார்கள். நேற்று அதுபோல் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சுமித்ரா! நான் உன்னை விட ஒரு வயசுதான் சின்னவன். இந்த அக்கா தம்பி உறவெல்லாம் எதுக்கு?" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த சுமித்ரா, ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்து முடித்து விட்டு எழுந்தாள். பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு விடுவிடுவென்று வெளியேறினாள்.

பின்னாலேயே ஒடி வந்த சரவணன் "அக்கா, தப்பா நெனச்சுக்காதீங்க. ஐ ஆம் சாரி... " என்று பதற்றத்துடன் மன்னிப்புக் கேட்டதைப் பெருட்படுத்தாமல், "நாளையிலேருந்து நான் பஸ்ஸிலேயே போய்க்கறேன். நீ என் வீட்டுக்கு வராதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

'ஏதோ உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டான். கண்டித்துப் பேசினால், தன் தவறை உணர்ந்து பழையபடி ஆகி விடுவான்' என்று தோன்றினாலும், ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதித்த பிறகு அவனுடன் தொடர்ந்து நட்பாக இருப்பது சரி வராது என்று நினைத்து அவன் உறவைத் துண்டித்து விட்டாள் சுமித்ரா.

இப்போது மாமியார் அவளுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசியபோது சுமித்ரா அழுதது சரவணன் இப்படி நடந்து கொண்டு ஒரு நல்ல நட்பை அழித்து விட்டானே என்ற ஆற்றாமையால்தான்.

மாலை சுமித்ரா வீட்டுக்குத் திரும்பியபோது பள்ளியிலிருந்து திரும்பியிருந்த குழந்தைகள் அவளை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை விசாரித்து விட்டுக் கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள் சுமித்ரா.

"சாப்பிட்டீங்களா? உங்களுக்குக் கத்தரிக்கா சாம்பார் புடிக்காது. ஆனா வேற காய் இல்லாததால கத்தரிக்கா இல்லாம தனியா சாம்பார் எடுத்து வச்சிருந்தேன். அத்தை கிட்ட சொல்ல மறந்துட்டேன்."

"அதை விடு. நீ ஏன் சரவணனோட போகலே? அம்மா அவனுக்கு நேரம் மாத்திட்டதா சொன்னாங்க. உங்க கம்பெனியில ஷிஃப்ட் கிடையாதே?" என்றான் அவள் கணவன் ராகவன்.

சுமித்ராவுக்கு மீண்டும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. 

அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "எவ்வளவு நாளைக்கு அவனோட போக முடியும்? ஆஃபீஸில வேற சில பேரு தப்பாப் பேசறாங்க. நீங்க அடிக்கடி சொல்லுவீங்க இல்ல, நாம யாரையும் நம்பி இருக்கக் கூடாதுன்னு! அதனாலதான் இந்த ஏற்பாடு வேண்டாம்னு நிறுத்திட்டேன்."

"என்னவோ நடந்திருக்கு. சரி. எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சு நீ எங்கிட்ட சொல்லுவ. அப்ப தெரிஞ்சுக்கறேன்." 

"சரி. எழுந்திருங்க. என்னைப் புடிச்சுக்கிட்டு நடந்து பழகுங்க."

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு குணமாகிக் கொண்டு வந்த ராகவன் அவள் தோளில் கை வைத்தபடி நடந்தான்.

"நேத்தியை விட இன்னிக்கு நல்லா நடக்கிறீங்க!" என்றாள் சுமித்ரா, உற்சாகமாக.

"தினமும் காலையில சீக்கிரம் எழுந்து, எங்களுக்கெல்லாம் சமையல் செஞ்சு வச்சுட்டு, வேலைக்குப் போய்த் திரும்பிய உடனேயே எனக்கு நடைப் பயிற்சி கொடுக்க வந்துடறியே, உனக்குக் கொஞ்சம் கூடச் சோர்வே இல்லியா? என்றான் ராகவன் வியப்புடன்.

"இல்லை!" என்றாள் சுமித்ரா.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பொருள்:
தன்னை (தன் கற்பை)க் காப்பாற்றிக் கொண்டு, தன் கணவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டு, தன் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, மனம் தளராமல் வாழ்பவள் பெண். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Burdens pleasant to carry' the English version of this story.
  குறள் 57
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்