About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 1, 2018

204. தவற விட்ட செய்தி

மாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் மாத இலக்கில் பெரிய இடைவெளி இருந்தது. 

இரண்டு நாட்களுக்குள் எப்படி இலக்கை எட்டப் போகிறோம் என்று சேகர் யோசித்துக் கொண்டிருந்தபோது, இண்டர்காமில் கிளை நிர்வாகி அழைத்தார்.

இலக்கு எட்டாதது பற்றிப் பேசத்தான் அழைக்கிறார் என்று தெரிந்து சோர்வுடன் அவர் அறைக்குப் போனான் சேகர்.

அரை மணிக்குப் பிறகு இன்னும் அதிக சோர்வுடன் கிளை நிர்வாகியின் அறையில் இருந்து வெளியே வந்தான் சேகர். 

ஏதோ புதிதாக வேலைக்குச் சேர்ந்தவனுக்கு சொல்வது போல் உபதேசம் செய்து தீர்த்து விட்டார் கிளை நிர்வாகி.

தன் இருக்கைக்கு வந்ததும்தான் கைபேசியை மேஜையிலேயே வைத்து விட்டுப் போய் விட்டதை கவனித்தான் சேகர். எடுத்துப் பார்த்தான். புதிய செய்தியோ, அழைப்போ வந்ததாகத் தெரியவில்லை.

மதிய உணவுக்குப் பிறகு, பிற்பகல் முழுவதும் அலுவலகத் தொலைபேசியைப்  பயன்படுத்தி, பலருக்கு ஃபோன் செய்து பார்த்தான். இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக் கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

மாலை 5 மணிக்கு ஏமாற்றத்துடன் இருக்கையில் வந்து உட்கார்ந்தான் சேகர். 

கைபேசி அடித்தது. அவன் நண்பன் சுதர்சன்.

"என்னடா போய்ப் பாத்தியா?" என்றான் சுதர்சன்.

"யாரை?" என்றான் சேகர்.

"மெஸேஜ் அனுப்பியிருந்தேனே, பாக்கலியா?'

"என்ன மெஸேஜ்? எதுவும்  வரலியே? எப்ப அனுப்பின?"

"மத்தியானம் ஒரு மணிக்கு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கணும்னு சொன்னாரு. மூணு லட்சம் ரூபா பிரிமியம் கட்டுவேன்னு சொன்னாரு. நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால உனக்கு அவர் நம்பர் அனுப்பினேன்..."

சுதர்சன் பேசிக்கொண்டிருந்தபோதே சேகர், அவன் அனுப்பிய செய்தி மதியமே வந்திருப்பதைப் பார்த்தான்.

"சரி. நான் பாத்துக்கறேன்" என்று ஃபோனை வைத்தான்.

தான் இல்லாதபோது மேஜையில் இருந்த தன் கைபேசியில் புதிய செய்தியை யாரோ திறந்து பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் புதிய செய்தி வந்தது தனக்குத் தெரியாமல் போயிருக்கிறது.

நண்பன் அனுப்பியிருந்த நம்பருக்கு ஃபோன் செய்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"அதான் மத்தியானம் வந்து பேப்பர்லல்லாம் கையெழுத்து வாங்கிக்கிட்டு, செக் வாங்கிட்டுப் போயிட்டீங்களே? மறுபடி எதுக்கு ஃபோன் பண்றீங்க?" என்றார் அவர் சற்று எரிச்சலுடன்.

"என் ஃபிரண்ட் சுதர்சன் நான் வரதாத்தான் சார் சொல்லியிருப்பான். என் பேரு சேகர்."

"ஆமாம். சுதர்சன் கிட்ட சொன்னேன் பாலிசி எடுக்கணும்னு. அவர் உங்க கம்பெனியிலேந்து வருவாங்கன்னு சொன்னாரு. உங்க பேரையும் சொன்னாரு. அது எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா உங்க கம்பெனியிலேந்து வரதா சொல்லி, சுதர்சன் சொன்ன ஆள்னு சொல்லிக்கிட்டு மத்தியானம் ஒத்தர் வந்தாரு. ஃபோன் பண்ணிட்டுத்தான் வந்தாரு. இருங்க. கார்டு கூடக் கொடுத்தாரே! அவர் பேரு... தணிகாசலம்."

"சரி சார். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க" என்று சொல்லி ஃபோனை வைத்தான் சேகர். 

கோபம், ஆத்திரம், வருத்தம், இயலாமை எல்லாம் பொங்கிக் கொண்டு வந்தன. 

சேகர் கிளை நிர்வாகியின் அறைக்குப் போன சமயம், தணிகாசலம் பக்கத்து மேஜையில்தான் உட்கார்ந்திருந்தான். தன் கைபேசியில் செய்தி வந்ததும் எடுத்துப் பார்த்திருக்கிறான். 

சுளையாக ஒரு பாலிசி கிடைக்கும் என்பதால், தானே போய் அதை வாங்கியிருக்கிறான். திருட்டுப் பயல்.

தணிகாசலம் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது இது முதல் முறை இல்லை. 

வேறொரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஏற்கெனவே சந்தித்துப் பேசிய நபரின் விவரங்களை எப்படியோ தெரிந்து கொண்டு (திருடி), அவன் அவரைப் போய்ப் பார்த்து ஏதோ ஒரு கவர்ச்சிகரமான பாலிசியை அவரிடம் விற்ற சம்பவங்கள் நடந்து அவன் மீது புகார்கள் போயிருக்கின்றன.

ஆனால், அவற்றுக்கான ஆதாரம் இல்லை என்று கருதி, அலுவலகத்தில் அவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சேகர் விஷயத்தில் அவன் விளையாடியது இதுதான் முதல் முறை.

கைபேசியை மேஜை மீது வைத்து விட்டுச் சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான் சேகர். 

இலக்கை எட்டாத நிலையில், தானாக வந்த ஒரு வாய்ப்பையும் தணிகாசலம் தன்னை ஏமாற்றிப் பறித்துக் கொண்டதை நினைத்து தணிகாசலத்தின் மீது ஆத்திரம் வந்தது.

அவன் தணிகாசலத்தின் மீது புகார் சொன்னால், அலுவலகத்தில் அவனைப் பார்த்துத்தான் அனைவரும் சிரிப்பார்கள்.

தணிகாசலத்தை  என்ன செய்வது? 

என்னால் எதுவும் செய்ய முடியாது. கடவுள்தான் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 

தணிகாசலம் மோட்டார் சைக்கிளில் போகும்போது அவன் மீது லாரி மோதி, அவன் கை கால் உடைந்து மருத்துவமனையில் பல மாதங்கள் கிடந்து அவதிப்பட வேண்டும்!

 'சே! என்ன நினைப்பு இது?' என்று உடனே தோன்றியது.

கைபேசி அடித்தது. மனைவி.

ஃபோனை எடுத்தவுடனேயே, அழுது கொண்டே, "என்னங்க கழுத்தில போட்டிருந்த 8 பவுன் நகை போயிடுச்சு. ஒத்தன் பைக்கில வந்து அறுத்துக்கிட்டுப் போயிட்டான்!" என்று புலம்பினாள் அவள் .

சேகருக்கு அதிகம் ஏற்பட்டது, அதிர்ச்சியா, வருத்தமா, ஆத்திரமா என்று தெரியவில்லை.

"8 பவுன் நகையை ஏன் கழுத்தில போட்டுக்கிட்டுத் திரிஞ்சே? உனக்கெல்லாம் அறிவே வராதா? சரி. போலீசில் புகார் கொடுத்தியா?" என்றான் சேகர் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுடன்.

"இல்லீங்க. இப்பதான் நடந்தது. உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க உடனே வாங்க. உங்களோட போய்தான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கணும்."

மனைவி பேசி முடிக்கும் முன்பே, சேகர் இணைப்பைத் துண்டித்தான்.

கடவுளே! ஏன் இப்படி நடக்கிறது?

சில நிமிடங்கள் முன்பு தணிகாசலம் லாரியில் அடிபட வேண்டும் என்று தான் நினைத்தது நினைவுக்கு வந்தது.

இன்னொருவருக்குக் கெடுதல் நினைத்ததால்தான் இப்படி நடந்ததா? இதெல்லாம் என்ன கை  மேல் பலனா?

தலையில் கை வைத்தபடி என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சேகர்.

சில நிமிடங்களில் மீண்டும் கைபேசி அடித்தது. மனைவிதான்.

"என்ன? வரேன். அதுக்குள்ளே ஏன் ஃபோன் பண்றே?" என்று அவள் பேசும் முன்பே எரிந்து விழுந்தான் சேகர்.

"நீங்க வர வேண்டாம். நகை கிடைச்சுடுச்சு" என்றாள் மனைவி.

"எப்படி?" என்றான் அவன், நம்ப முடியாமல்.

"அவன் என் கழுத்திலேந்து நகையை அறுத்துக்கிட்டுப் போனதை தெருக்கோடி வீட்டு வாட்ச்மேன் பாத்திருக்காரு. அவரு மிலிட்டரிக்காரரு போலருக்கு. அவன் பைக்ல கிட்ட வரச்சே, குறுக்கே வந்து அவன் பைக்கை நிறுத்தி அவனைப் பிடிச்சுட்டாரு. அவன் நகையைப் போட்டுட்டு ஓடிட்டான். அவரு நகையை எங்கிட்ட கொடுத்துட்டாரு. நல்லவேளை போலீஸ் ஸ்டேஷன் போய் அலையறதெல்லாம் வேண்டாம். என்ன, அறுந்து போன செயினைப் பத்த வைக்கணும்..."

அதற்கு மேல் மனைவி பேசியது அவன் காதில் ஏறவில்லை.

கடவுளே! சில நிமிடங்களில் என்ன நடந்து விட்டது! ஒருவருக்கு மனதளவில்  கெடுதல் நினைத்ததற்கே உடனடி தண்டனை போல் நகை தொலைந்ததும், சில நிமிடங்களிலேயே அது திரும்பக் கிடைத்ததும்...

இது என்ன. மற்றவர்கள் நமக்கு எவ்வளவு கெடுதல் செய்திருந்தாலும், நாம் அவர்களுக்குக் கெடுதல் நினைக்கக் கூடாது என்ற எச்சரிக்கையா?

அவனுக்குப் புரியவில்லை. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

பொருள்:  
மறந்து போய்க் கூடப் பிறருக்குக் கேடு நினைக்கக்கூடாது. அவ்வாறு நினைப்பவனுக்குக் கேடு நிகழுமாறு அறம் எண்ணும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













2 comments: