
"என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம்? என்ன வேணும், சொல்லு!" என்றார் தேவராஜ்.
"பூங்குளம் சாமியைப் பத்தி உனக்குத் தெரியுமில்ல?"
"ஆமாம், நீதான் அவரோட சிஷ்யனாச்சே! அவர் பெரிய சித்தர், மகான்னெல்லாம் நீ சொல்லி இருக்க. அதுக்கு மேல வேற எதுவும் எனக்குத் தெரியாது. சொல்லு."
"அவர் நம்ம ஊருக்கு வரப் போறாரு."
"அப்படியா? சந்தோஷம். சொல்லு."
"உனக்குத் தெரியும். அவரைத் தங்க வைக்க என் வீட்டில வசதி பத்தாது. அதனால, உன் வீட்டில அவரைத் தங்க வச்சுக்க முடியுமா?"
"ஓ! அதுக்கென்ன? மாடியில இருக்கற ரூம்ல அவர் தங்கிக்கலாம். ஆனா..."
"என்ன இழுக்கற? ஏதாவது அசௌகரியம் இருந்தா சொல்லிடு!" என்றார் பழனி.
"எனக்கு அசௌகரியம் எதுவும் இல்ல. கோவில், பக்தி இதிலெல்லாம் அதிகமா ஈடுபடற பெரிய மனுஷங்க சில பேர் நம்ம ஊர்ல இருக்காங்க. அவங்க வீடுகள் பெரிசா இருக்கு. அவங்கள்ளாம் இருக்கறப்ப, ஆன்மீக விஷயங்கள்ள அதிக ஈடுபாடு இல்லாத என் வீட்டில அவர் தங்கறது முறையா இருக்குமான்னுதான் யோசிச்சேன்."
"நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். இந்த ஊர்ல இருக்கற எல்லாப் பெரிய மனுஷங்களுக்குமே ஊர்ல சில பேர்கிட்ட விரோதம் இருக்கு. அதனால அவங்க யார் வீட்டிலேயாவது சாமி தங்கினார்னா, சாமியைப் பாக்கணும்னு நினைக்கிற சில பேர் அங்கே வர மாட்டாங்க. இந்த ஊரிலேயே யார்கிட்டேயும் விரோதமில்லாம, எல்லார்கிட்டேயும் நல்ல உறவோடு இருக்கறது நீ ஒத்தன்தான். அதோட, உனக்குக் குடிப் பழக்கமோ, மத்தப் பழக்கங்களோ கிடையாது. அதனால உன் வீட்டில சாமி தங்கினா, எல்லாரும் வந்து பாப்பாங்க. அவரும் சந்தோஷமா இருப்பாரு."
"போதும்ப்பா. விட்டா, என்னையே சாமியாரா ஆக்கிடுவ போலருக்கே!" என்றார் தேவராஜ்.
"அப்படி ஆகறதா இருந்தா சொல்லு. நானே உன் முதல் சிஷ்யனா ஆயிடுவேன்!" என்றார் பழனி.
பிறகு இருவரும் பூங்குளம் சாமி தங்குவதற்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசினர்.
பழனி விடைபெற்றுக் கிளம்பியபோது, தேவராஜ் அவரிடம், "நான் ஏதாவது சரியா நடந்துக்காம, அதனால சாமி மனசு புண்படும்படியா ஆயிடக் கூடாதுங்கறதுதான் என்னோட கவலை" என்றார்.
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். சாமி ரொம்ப எளிமையானவர். அவர் தங்கப் போறது நாலு நாள்தான். எல்லாத்துக்கும் மேல, நீ தப்பா எதுவும் செஞ்சுட மாட்ட!" என்றார் பழனி.
சாமியார் வந்து நான்கு நாட்கள் தேவராஜ் வீட்டில் தங்கி இருந்து விட்டுக் கிளம்பிப் போய் விட்டார். அவரை வழியனுப்பி வைத்த பிறகு, பழனி தேவராஜின் வீட்டுக்கு வந்தார்.
"என்ன பழனி? சாமிக்கு எல்லாம் திருப்தியா இருந்ததா?" என்றார் தேவராஜ்.
"திருப்தியா இருக்கறதாவது? போகும்போது சாமி எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? 'என்னை எதுக்கு இந்த ஊருக்கு வரச் சொன்னே?'ன்னு கேட்டார்!" என்றார் பழனி.
தேவராஜ் திடுக்கிட்டவராக, "ஏன், அவர் அப்படிச் சொல்ற அளவுக்கு நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா என்ன?" என்றார்.
"அவர் சொன்னதை அப்படியே சொல்றேன் கேளு. 'நான் இந்த ஊர்க்காரங்களுக்கு ஏதோ உபதேசம் பண்ணணும்னு, நீ என்னை இங்க வரவழைச்சே! ஆனா, அதுக்கு அவசியமே இல்லையே! நாலு நாள் தேவராஜ் வீட்டில தங்கி இருந்து, அவர் பேசறது, நடந்துக்கறது இதெல்லாம் பாத்தப்ப, எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா? இந்த ஊர்க்காரங்க இந்த தேவராஜைப் பாத்து நடந்துக்கிட்டாங்கன்னாலே போதுமே! அதுக்கு மேல, அவங்களுக்கு என்ன உபதேசம் வேணும்? நாங்கள்ளாம் தாடி வச்சுக்கிட்டு, முடி வளத்துக்கிட்டு, காவி கட்டிக்கிட்டு சாமியார்னு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஆனா இந்த தேவராஜ், இந்த வேஷங்கள்ளாம் போடாமயே, எங்களையெல்லாம் விட உயர்வான குணத்தோடயும், மனப்பக்குவத்தோடயும் இருக்காரு.' இதான் அவர் சொன்னது. நான் ஒரு வார்த்தை கூடக் கூட்டிச் சொல்லல!" என்றார் பழனி.
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
பொருள்:
உலகம் பழிக்கும் தீய ஒழுக்கங்கள் இல்லாமல் ஒருவர் வாழ்ந்தால், அவருக்கு மொட்டை அடித்துக் கொள்ளுதல், நீண்ட முடி வளர்த்தல் போன்ற துறவிகளுக்கான புற அடையாளங்கள் தேவையில்லை.