About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, September 28, 2018

203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்

செல்வம் இறந்ததும், அண்ணன் சொத்தையும் தான் நிர்வகிக்கலாம் என்று மூர்த்தி நினைத்தான். ஆனால் அவன் அண்ணி லட்சுமி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 

செல்வம் இருந்தவரை வீட்டை விட்டு வெளியே வராதவள், கணவன் இறந்ததும், வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு ஆட்களை அதிகாரம் செய்து வேலை வாங்க ஆரம்பித்தாள்.

"உங்களால நிலத்தையெல்லாம் பாத்துக்க முடியாது அண்ணி. நீங்க வீட்டில இருங்க. நான் பாத்துக்கறேன்" என்றான் மூர்த்தி.

"வேணாம் தம்பி, உங்க நிலத்தை நீங்க பாத்துக்கங்க. என் நிலத்தை நான் பாத்துக்கறேன்" என்றாள் லட்சுமி சுருக்கமாக.

அதற்குப் பிறகு மூர்த்தி அவளுக்கு இடைஞ்சல்கள் செய்ய ஆரம்பித்தான். லட்சுமி, தன் வீட்டுத் திண்ணையிலிருந்து இறங்காமலேயே, தன் ஆட்கள் மூலம் எல்லாவற்றையும் சமாளித்தாள்.

ஒருமுறை, இரவு நேரத்தில், அவள் வயலிலிருந்து, தண்ணீரைத் தன் வயலுக்குத் திருப்பி விட்டான் மூர்த்தி. ஆட்கள் வந்து சொன்னதும், "தலையாரியைக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டுங்க!" என்றாள் லட்சுமி.

லட்சுமியின் ஆட்கள் தலையாரியை அழைத்துப் போய்க் காட்டியதும், தலையாரி மூர்த்திக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டான்.

"இதெல்லாம் பத்தாது அம்மா. ஒரு வார்த்தை சொல்லுங்க. அவரு வயலுக்குத் தண்ணியே வராம செஞ்சுடலாம், நாம செஞ்சோம்னு யாராலயும் நிரூபிக்க முடியாது" என்றான் அவளுடைய ஆள். 

"அதெல்லாம் வேணாம். அபராதம் கட்டின அவமானம் போதும். இனிமே வாலாட்ட மாட்டாரு" என்றாள் லட்சுமி.

ஆனால் மூர்த்தி அடங்கவில்லை. அபராதம் கட்டிய அவமானம் அவன் கோபத்தை இன்னும் கிளறியது. பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தான்.

நிலம் அறுவடைக்குத் தயாராயிருந்தபோது, நள்ளிரவில் லட்சுமியின் வயலில் இருந்த கதிர்களுக்கு மூர்த்தி தீ வைத்தான். யாரோ பார்த்து நெருப்பை அணைத்ததுடன், மூர்த்தியையும் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள்.   

இரவில் லட்சுமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவளுக்குத் தகவல் சொன்னார்கள்.

"நெருப்பை அணைச்சுட்டீங்கள்ள? அதோட விடுங்க. நெருப்பை அணைச்சவரைப் பாத்து நான் நன்றி சொல்லணும்" என்றாள் லட்சுமி.

"இத்தனை நாளா மூர்த்தி உங்களுக்கு செஞ்சதுக்கெல்லாம் இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டான். போலீசுக்குத் தகவல் சொல்லப் போறோம். அவனை ஆறு மாசமாவது உள்ள தள்ளிடுவாங்க!" என்றார் ஊர்க்காரர் ஒருவர்.

"போலீஸ் எல்லாம் வேண்டாம். அதான் எதுவும் நடக்கலியே. விட்டுடுங்க" என்றாள் லட்சுமி.

"என்னம்மா, இப்படிச் சொல்றீங்க? தப்புப் பண்ணினவன் தண்டனை அனுபவிக்க வேண்டாமா?"

"அவரு மட்டுமா தண்டனை அனுபவிப்பாரு? அவரு ஜெயிலுக்குப் போனா, அவரு பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் கஷ்டப்பட மாட்டாங்க? புருஷன் இல்லாத குடும்பத்தோட கஷ்டம் எனக்குத் தெரியுங்க. வேண்டாம், அவரை விட்டுடுங்க!" 

"நீ பேருக்கேத்தாப்பல மகாலட்சுமி மாதிரியே இருக்கம்மா. படிக்காட்டாலும், இவ்வளவு அறிவோடு இருக்கியே!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

"அறிவெல்லாம் ஏதுங்க எனக்கு? நம்பளால மத்தவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நினைக்கறேன். அதைத்தவிர எனக்கு எதுவும் தெரியாதுங்க" என்றாள் லட்சுமி. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.

பொருள்:  
தனக்குத் தீமை செய்தவர்களுக்குத் தீமை செய்யாதிருத்தலே சிறந்த அறிவு என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment