About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, January 10, 2016

45. நல்ல மனம் வாழ்க

"சம்பளப் பணத்தைப் பங்கீடு செய்து விட்டாயா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த ஒரு லட்சம் ரூபாயில் பங்கீடு செய்தது போக 80,000 ரூபாய் மீதி இருக்கிறது. இதை எங்கே முதலீடு செய்யலாம்?" என்றாள் வாணி.

தாமோதரன் சிரித்தான், மனைவி விளையாட்டாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்ததால். கல்யாணம் ஆன புதிதில் இதே கேள்வியை எகத்தாளமாகக் கேட்டு அவன் மனதைப் புண்படுத்தியவள்தான் வாணி. 

இன்று பத்து வருடக் குடும்ப வாழ்க்கையில் தாமோதரனையும், வாழ்க்கையின் உண்மைகளையும் புரிந்து கொண்டபின் அவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.

"கலாவுக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்னாயே?"

"கடைசித் தேதியை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்."

"கவலைப்படாதே! பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டேன்"

"நீங்கள் பணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். பணத்தை என்னிடம் கொடுங்கள். இன்றே பள்ளிக்குப் போய்க் கட்டி விடுகிறேன். கையில் இருந்தால் செலவாகி விடும்."

"இன்றுதான் பணம் கைக்கு வரும். என் கைக்கு வந்தவுடன் உன் கைக்கு மாற்றி விடுகிறேன். பணத்தைப் பாதுகாப்பதில் நீதான் கைகாரியாயிற்றே!"

"நேற்று முரசு தொலைக்காட்சியில் 'கை கை மலர்க்கை' என்று ஒரு பழைய பாட்டு போட்டார்கள். பாடல் முழுவதும் 'கை' 'கை' என்று வரும். அந்தப் பாட்டை எழுதியது நீங்கள்தானா?"

"ஆமாம் என்று சொல்லி விடுவேன். அப்புறம் அந்தப் பாட்டுக்கு வந்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்பாய்! எதற்கு வம்பு? அந்தப் பாட்டை எழுதிய பெருமை வாலிக்கே இருக்கட்டும்!"

மாலையில் தாமோதரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே "பணம் கைக்கு வந்ததா?" என்று கேட்கவில்லை வாணி. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் கூடக் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் பெண் கலா திடீரென்று நினைவு வந்தவளாக, "அப்பா! எங்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போகிறோம். ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமாம். ஆனால் போக வேண்டும் என்று கட்டாயம் இல்லை" என்றாள்.

"கட்டாயம் இல்லையாம்! நம் பொருளாதார நிலையை உணர்ந்து பேசுகிறாள் பாருங்கள் உங்கள் பெண்" என்றாள் வாணி.

"பொதுவாகக் குழந்தைகளைக் குறை சொல்லும்போதுதான் கணவனோ மனைவியோ 'உன் பிள்ளை,' 'உன் பெண்' என்று சொல்வார்கள். நீ நம் குழந்தையைப் புகழும்போதே 'உங்கள் பெண்' என்கிறாயே! உனக்குப் பெரிய மனது!" என்றான் தாமோதரன்.

"நான் இப்படிச் சொல்லாவிட்டால் எனக்குப் பெரிய மனது என்று நீங்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டீர்களே!" என்றாள் வாணி. "அது இருக்கட்டும். கட்டாயம் இல்லை என்றால் கலா உல்லாசப் பயணம் போக வேண்டாம் இல்லையா?" என்றாள் தொடர்ந்து.

தாமோதரன் சற்று  நேரம் மௌனமாக இருந்து விட்டு "இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் மகாபலிபுரம் போகலாம்" என்றான்.

"அய்யா ஜாலி!" என்று குதித்தாள் கலா.

"பிக்னிக்கா? புளியோதரை, தயிர்சாதம் எல்லாம் தயார் செய்து விடட்டுமா?" என்றாள் வாணி.

"எதற்கு? நாம்தான் உயர்தர ஓட்டலில் விருந்து சாப்பிடப் போகிறோமே!" என்றான் தாமோதரன்.

கலா உறங்கியதும் வாணி கேட்டாள் "என்ன, பணம் கைக்கு வந்ததா?"

"வந்தது. ஆனால் உடனே கை மாறி விட்டது."

"என் கைக்கல்லவா மாறி இருக்க வேண்டும்?"

"ஆமாம். ஆனால் உன் தங்கைக்குப் போய் விட்டது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"இன்று என் அலுவலகத்துக்கு  சரவணன் வந்திருந்தார்."

"யார்? சாந்தி வீட்டுக்காரரா?"

"சாட்சாத் உன் தங்கை சாந்தியின் கணவர் சரவணன்தான். பின்னே சிவபெருமானின் பிள்ளை சரவணனா என்னிடம் வந்து கடன் கேட்கப் போகிறார்?"

"கடன் கேட்டாரா?"

"அவர்கள் பையனுக்கும் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டி இருக்கிறதே! அவனுடைய பள்ளியில் இன்றுதான் கடைசி நாளாம். கலாவுக்குப் பணம் கட்டத்தான் இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறதே?"

"உடனே கடன் வாங்கிய பணத்தை நீங்கள் அவரிடம் தூக்கிக் கொடுத்து விட்டீர்களாக்கும்?"

"தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு அவ்வளவு ஒன்றும் கனமான தொகை இல்லையே அது!"

வாணி மௌனமாக இருந்தாள்.

"தன் கைக்கு வர வேண்டிய பணம் தங்கைக்குப் போய் விட்டதே என்று யோசிக்கிறாயா?"

"இல்லை. இதையே நீங்கள் உங்கள் தங்கைக்குக் கொடுத்திருந்தால் என்னால் இதை இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!"

தாமோதரன் வியப்புடன் வாணியைப் பார்த்தான்.

வாணி இலேசாகச் சிரித்து விட்டு, "சரி கலாவுக்குப் பணம் கட்ட என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.

"அதுதான் நீயே சொல்லி விட்டாயே! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"

ஞாயிறன்று மகாபலிபுரத்தில் கலா மிகவும் உற்சாகமாக இருந்தாள். 'கண்ணனின் வெண்ணெய் உருண்டை' என்று அழைக்கப்படும் மெல்லிய அடித்தளத்தின் மீது பல நூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பெரிய பாறையைப் பார்த்து வியந்தாள்.

"எப்படி அப்பா! ஏதோ ஒட்ட வைத்த மாதிரி இவ்வளவு சிறிய அடித்தளத்தின் மீது எப்படி இந்த கனமான பாறை நிற்கிறது? அதிசயமாக இருக்கிறதே!" என்றாள்.

"இது என்ன அதிசயம்? ஒல்லிப் பிச்சானாக  இருக்கும் உன் அப்பா எவ்வளவு கனமான பாறையையும் தன் சுண்டு விரலில் தாங்குவார்!" என்றாள் வாணி.

"அதற்குக் காரணம் இந்த ஒல்லிப்பிச்சானை ஒரு கனமான குண்டுப் பிச்சான் தாங்கிக் கொண்டிருப்பதுதான்!" என்றான் தாமோதரன்.

"என்னையா குண்டுப்பிச்சான் என்கிறீர்கள்? அந்தப் பாறையைத் தூக்கி உங்கள் மேல் போட்டு விடுவேன்!" என்றாள் வாணி.

ஆனால் தாமோதரன் மேல் வந்து விழுந்தது அவள் வீசிய சிறு கூழாங்கல்தான்!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பொருள்:
இல்வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், அறத்தின் வழியில் செல்வதாகவும் இருக்குமானால், அதுதான் அதன் பண்பு. இல்வாழ்க்கையின் பயனும் அதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'An Ode to a Kind Heart' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Saturday, December 26, 2015

44. செல்வம் 'சேர்த்த' செல்வம்

'முப்பந்தைந்து வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இப்போதுதான் அரசு வேலைக்கு உத்தரவு வந்தாற்போல் இருக்கிறது. அடுத்த வாரம் ஒய்வு பெறப் போகிறேன்!'

இரவில் தூக்கம் பிடிக்காதபோது தன் உத்தியோக வாழ்க்கையை அலசிப் பார்த்தான் செல்வம். வேலைக்கு உத்தரவு வந்தபோது 'உன் பெயருக்கு ஏற்றாற்போல் நீ இனி செல்வம்தான்' என்றனர் சுற்றி இருந்தவர்கள். சிலர் அப்போதே அவன் மேல் பொறாமை கொள்ள ஆரம்பித்தனர். சரியான வேலை இன்றி தாய், தம்பிகள், தங்கைகள் என்று பெரும் குடும்பத்தை வைத்துத் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவர்கள் 'எதிர்பார்த்த' வாழ்க்கை அவனுக்கு வருவதற்கு முன்பே அப்படி ஒரு பொறாமை!

ஆனால் அவன் வாழ்க்கை மற்றவர்கள் பொறாமைப்படும்படி இல்லை. காரணம் அவன் வேலையை வேலையாகச் செய்தான், வியாபாரமாக இல்லை. அவனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்தனர். அவன் மேலதிகாரிகளுக்கும், உடன் பணியாற்றியவர்களுக்கும் அவன் சங்கடமாக இருந்தான். அதனால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டான். ஆனால் செல்வம் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் செய்த வேலைக்குத்தான் மாதாமாதம் சம்பளம் வந்து கொண்டிருந்ததே!

வசதியான வாழ்க்கை வாழலாம் என்று ஆரம்பத்தில் கனவு கண்ட அவன் தம்பி தங்கைகள் அவன் மனநிலையை உணர்ந்து அடங்கிப் போனார்கள். அவன் அம்மா கூட 'பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாயே!' என்று சிலமுறை அவனிடம் குறைப்பட்டுக் கொண்டாலும், 'என் மகன் நேர்மையானவன்!' என்று பெருமை கொண்டாள்.

தம்பி தங்கைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செல்வம் செய்து முடித்தபோது, இடையில் அவன் தாய் மேற்கொண்ட திருமண முயற்சிகளை அவன் ஊக்குவிக்கவில்லை. 

முப்பத்தாறு வயதில் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான். வறுமையான குடும்பத்திலிருந்து வந்த வள்ளி, அரசு ஊழியரை மணம் செய்து கொண்டு வசதியாக வாழலாம் என்ற கனவுடன் வந்தாள். ஆரம்பத்தில் வாழ்க்கை அவளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், நல்ல கணவன் கிடைத்தானே என்று ஆறுதல் அடைந்தாள்.

செல்வத்துக்கு மலைப்பாக இருந்தது. சுமாரான வருமானத்தை வைத்துக் கொண்டு எத்தனை செய்து விட்டேன்! தம்பி தங்கைகள் படிப்பு, திருமணம், மாமன் என்ற முறையில் தங்கைகளின் குழந்தைகளுக்கும் பெரியப்பா என்ற 'அந்தஸ்தில்' தம்பி குழந்தைகளுக்கும் செய்த செலவுகள், அம்மாவின் மருத்துவச் செலவு, தனது ஒரே மகளையும் படிக்க வைத்துத் திருமணம் செய்வித்தது, உரிமையுடன் உதவி கேட்ட உறவினர்களுக்கும், 'இவனிடம் கேட்கலாமா?' என்று தயங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தன் சக்திக்கு மீறிச் செய்த உதவிகள்!

'சொந்த வீடு இல்லை, சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. நான், மனைவி, தொண்ணுறு வயது அம்மா ஆகிய மூவருக்கும் சிறிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாதா?'

சாப்பிட உட்கார்ந்தபோது வள்ளி கேட்டாள். "ஏங்க அடுத்த வாரம் ரிடையர் ஆகப் போறிங்க இல்லே?"

'இனிமேல் வருமானம் போதாதே, என்ன செய்யப் போறீங்க? வேறே எங்கயாவது வேலைக்குப் போகப் போறீங்களா? வேலைக்கு யார் கிட்டயாவது சொல்லி வச்சிருக்கீங்களா?' என்று கேட்கப் போகிறாளா?

"ஆமாம். அதுக்கு என்ன?" என்றான் செல்வம். அவள் பதிலை ஊகித்ததில் குரலில் கொஞ்சம் எரிச்சல் வெளிப்பட்டது.

"இத்தனை வருஷமா ஆஃபீஸ், குடும்பம்னு பறந்துக்கிட்டிருந்தீங்க. ஒரு வேளை கூட நிம்மதியா சாப்பிட்டதில்லை. இனிமேயாவது பொறுமையா, நிம்மதியா சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடுங்க!"

செல்வத்தின் கண்களில் நீர் தளும்பியது. இன்னும் என்ன சந்தோஷம் வேண்டும் வாழ்க்கையில்?

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


பொருள்:
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, பகிர்ந்து உண்பதை வழியாகக் கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The 'Wealthy' Selvam' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











Friday, October 9, 2015

43. ஐந்தில் அடங்கும் ஆறு

"அப்பா! வீட்டுச் செலவு ரொம்ப அதிகமா ஆகுது. அதனால, அடுத்த மாசத்திலேருந்து பட்ஜெட் போட்டு செலவு பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றான் முகுந்தன்.

"நல்லவேளை! செலவு அதிகமா ஆகுதுன்னு நீ ஆரம்பிச்சதும், எங்கே ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுக்கலாம்னு சொல்லப் போறியோன்னு பயந்துட்டேன்!" என்றார் ராமசாமி.

"அம்மா என்னை ஒரு சாப்பாட்டு ராமனா வளர்த்துட்டாங்கன்னு நீங்கதான் அடிக்கடி சொல்வீங்களே! அப்படி இருக்கச்சே, நான் ஏன் சாப்பாட்டைக் குறைச்சுக்கறதைப் பத்திப் பேசப் போறேன்?" என்றான் முகுந்தன்.

தந்தை மகன் என்ற உறவைத் தாண்டி, நண்பர்கள் போல் பேசிக் கொள்வது அவர்கள் இயல்பு.

"ஆமாம், இன்னிக்குத்தானே முதல் தேதி? இந்த மாசத்திலேருந்தே பட்ஜெட் போடலாமே?" என்றார் ராமசாமி.

"இல்லப்பா. பட்ஜெட் போடறத்துக்கு முன்னால, எந்தெந்த வகையில எவ்வளவு செலவு ஆகுதுன்னு பாக்கணும். இந்த மாசம் ஆகிற செலவுகளைக் குறிச்சு வச்சுக்கிட்டா, அதை வச்சு, எந்த வகைகள்ள செலவைக் குறைக்கலாம்னு பார்த்து, அடுத்த மாசம் பட்ஜெட் போடலாம். அதனால, இன்னியிலிருந்து  செலவுகளைக் குறிச்சு வச்சுக்கணும் நீங்க!"

"ஏண்டா, எத்தனையோ வருஷமா செலவுகளைக் குறிச்சு வச்சுக்கன்னு நான் உன்கிட்டே சொல்லிக்கிட்டே வரேன். அதை நீ காதிலேயே  போட்டுக்கல. இப்ப, 'செலவுகளைக் குறிச்சு வச்சுக்க'ன்னு நான் சொன்னதை என்கிட்டேயே  திருப்பிச் சொல்றியா?"

"இல்லப்பா!.." என்று இழுத்தான் முகுந்தன்.

"சரி. எல்லார் செய்யற செலவையும் நான் குறிச்சு வச்சுக்கணும் அவ்வளவுதானே?"

"ஆமாம்ப்பா. நீங்கதான் எதையும் விடாம, எல்லாத்தையும் கவனமா எழுதி வைப்பீங்க."

"சரி. ஒரு புது நோட்டு கொடு" என்று ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார் ராமசாமி.

அந்த மாதக் கடைசியில், "அப்பா! அந்த செலவுக் கணக்கு எழுதின நோட்டைக் காட்டுங்க" என்றான் முகுந்தன்.

தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ராமசாமி, "கொஞ்சம் இரு!" என்றார்.

"நோட்டை என்னிடம் கொடுத்து விட்டு, நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாமே!" என்றான் முகுந்தன்.

"இதோ" என்று மடிக் கணினியை அவன் புறம் திருப்பினார் ராமசாமி. செலவுக் கணக்குகள் எக்ஸல் என்னும் மென்பொருள் வடிவத்தில் எழுதப்பட்டிருந்தன. செலவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் எவ்வளவு செலவு என்று காட்டியது கணினித் திரை.

"ஓ! எக்ஸல்லிலேயே போட்டுட்டீங்களா? புது நோட்டு கேட்டு வாங்கினீங்களே, எதுக்கு?"

"ஸ்ரீராமஜயம் எழுதறதுக்கு! நீ முதல்லே செலவுகளைப் பாரு!"

முகுந்தன் பட்டியலைப் பார்த்தான். "என்னப்பா இது? குலதெய்வம் கோவில் திருவிழான்னு ஐநூறு ரூபாய் போட்டிருக்கு!"

 "நியாயமாப் பாத்தா, குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு நாம எல்லோரும் நேரில் போயிருக்கணும். அப்படிப் போயிருந்தா, ஐயாயிரம் ரூபாயாவது செலவழிஞ்சிருக்கும். அது இயலாததனால, ஐநூறு  ரூபா பணம் மட்டும் அனுப்பி வச்சேன்."

"என்னப்பா, இந்தக் காலத்திலே போய் குலதெய்வம் அது இதுன்னுக்கிட்டு?"

"ஏண்டா, உலகம் மாறிடுச்சுங்கறதுக்காக வானத்திலே இருக்கிற சூரியன், சந்திரன், நட்சத்திரம் எல்லாம் மாறிடுதா? அதுபோல்தான் நாம செய்ய வேண்டிய கடமைகளும் எப்பவும் மாறாது!"

"கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டியது கடமையா? வணங்கினால் போதாதா?"

"போதும். ஆனா, ஒவ்வொருத்தரும் தங்களோட வசதிக்கேத்தபடி காணிக்கை செலுத்தினாத்தான் கோவில்களை எல்லாம் பராமரிக்க முடியும். வருஷத்துக்கு ஐநூறு ரூபா கோவிலுக்குக் காணிக்கையாக் கொடுக்கறது நம்மளை மாதிரி இருக்கறவங்களால முடியாதது இல்லையே?"

"சரி. ஒத்துக்கறேன். இது மாதிரி வேறே கடமைகள் இருக்கா?"

"இருக்கு. குடும்ப வாழ்க்கையில் இருக்கறவங்க ஐந்து அறநெறிகளைப் பின்பற்றணும். முதலாவது,  காலஞ்சென்ற நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வது. இரண்டாவது, தெய்வத்தை வணங்குவது.  . மூன்றாவது, தம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது. நான்காவது, உறவினர்களை ஆதரிப்பது. ஐந்தாவது, நம் குடும்பத்தைப் பேணிக்  காப்பது. 

"மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருக்கிற மாதிரி, மனித வாழ்க்கையிலும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து கிளைகளாக விரிந்திருக்கின்றன. இந்த ஐந்து கிளைக் கடமைகளையும் நிறைவேற்றுவதுதான் அறத்தின் ஆறு (வழி) என்று பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். 

"இந்த வரிசையில, நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைதான் முதல்ல இருக்கு. நமக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் கடைசி இடத்தில்தான் இருக்கு!"

"அப்ப, இனிமே ஒவ்வொரு மாசமும் பட்ஜெட் போடும்போது, நம்மளோட செலவுகளைத் தீர்மானிக்கறத்துக்கு முன்னால, முதல் நான்கு கடமைகளுக்குச் செலவழிக்க வேண்டியது ஏதாவது இருக்குமான்னு பாக்கணும்."

"கரெக்ட்.  உதாரணமா அடுத்த மாசம் என் அப்பா அதாவது உன்னோட தாத்தாவோட திதி (இறந்த தினம்) வருது. அதுக்கு என்ன செய்யணும்னு யோசிச்சு பட்ஜெட்டில பணம் ஒதுக்கணும்."

"சரிப்பா. அடுத்த மாச பட்ஜெட்ல முதல் அயிட்டமா தாத்தா திதிக்கான செலவை எழுதிடறேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
.

பொருள்:
மூதாதையர்கள், தெய்வம், விருந்தினர்கள், உறவினர்கள், தனது குடும்பம் என்ற ஐந்து வகையினரையும் ஆதரித்துப் போற்றுதல் என்ற அறநெறியைப் பின்பற்றுவது நம் தலையாய கடமையாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Budgeting Exercise' th
e English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Thursday, July 23, 2015

42. ஒன்று, இரண்டு, மூன்று

"ஏம்ப்பா நாளைக்கு ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. நாளைக்குப் போய் லீவு கேக்கறியே! இன்னொரு நாளைக்கு எடுத்துக்கக் கூடாதா?"

"நாளைக்குத்தானே சார் எங்கப்பாவுக்கு நான் திதி கொடுக்கணும்? அதனாலதான் சார் நாளைக்கு லீவு கேக்கறேன்."

"என்னப்பா, இந்தக் காலத்தில போய் திதி, தவசம்னு எல்லாம் பேசிக்கிட்டு!"

"பிறப்பு, இறப்பு எல்லாம் காலத்துக்குத் தகுந்தாப்பல மாறுவது இல்லையே சார்! இறந்து போனவங்களுக்குத் திதி கொடுக்கறதும் அப்படித்தான்."

"சரி. திதி கொடுக்கறதுன்னா என்ன செய்வே?"

"ஐயரைக் கூப்பிட்டு மந்திரம் சொல்லி என் அப்பாவுக்கும் அவரோட மூதாதையர்களுக்கும் ஆகாரம் படைப்போம்."

"ஆகாரம் படைப்பியா? இறந்து போனவங்க வந்து சாப்பிடுவாங்களா?"

"இல்லை சார். அவங்களுக்குப் பிரதிநிதியா ரெண்டு மூணு ஏழைப்பட்டவங்களை உபசரித்து உக்காத்தி வச்சு, அவங்களுக்குப் படைப்போம்."

"ஓ! அது உங்க மூதாதையருக்குப் போய்ச் சேர்ந்திடுமாக்கும்?"

"நிச்சயமா சார்!"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"

"நம்பிக்கைதான் சார்."

"நம்பிக்கை மட்டும் போதுமா? இறந்து போனவங்க வேறே ஏதோ ஒரு உலகத்திலே இருக்காங்கன்னு வச்சுக்கிட்டாலும், இங்கே யாரோ சிலர் சாப்பிடறது அவங்களுக்கு எப்படிப் போய்ச் சேரும்?"

"எப்படின்னு தெரியாது சார். ஆனா போய்ச் சேரும்."

"ஒரு விஷயம் எப்படி நடக்கும்னு தெரியாம அது நடக்கும்னு எப்படி நம்பறது?"

"சார். நம்ம ஆஃபீஸிலேருந்து கொல்கத்தால இருக்கிற ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ் அனுப்பறேன். அது எப்படி கொல்கத்தாவுக்குப் போய்ச் சேருதுன்னு எனக்குத் தெரியாது. அந்த விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஃபேக்ஸ் நிச்சயமாப் போயிடும்னு தெரியும். அது போலத்தான் சார் இதுவும்."

"சரிப்பா. உன்னோட நம்பிக்கையை நான் தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா இறந்து போனவங்க எங்கேயோ இருக்காங்கன்னு என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியவில்லை."

"'மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை' ன்னு வாலி எழுதி எம். எஸ்.வி அருமையா இசை அமைச்ச ஒரு பாட்டு இருக்கு சார்!"

"நான் எம்.எஸ்,வியோட ரசிகன்கறதனால என்னை இப்படி மடக்கறியா? சரி. திதி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?"

"பன்னிரண்டு, ஒரு மணி ஆகி விடும் சார்."

"அப்ப மத்தியானம் ஆஃபீசுக்கு வரலாம் இல்லே?"

"மன்னிச்சுக்கங்க சார். திதி முடிஞ்சதும் நான் ஒரு அநாதை இல்லத்துக்குப் போய் அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுத்து விட்டு, அவங்க சாப்பிட்டதும் அவங்களோட கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவேன் சார். இதெல்லாம் முடிய சாயந்திரம் ஆயிடும்."

"இது வேறயா? பெரிய ஆளுதான்ப்பா நீ. உன்னோட சம்பளத்தில இதெல்லாம் பண்ண முடியுதா?"

"இந்த உலகத்தில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் மூணு கடமை இருக்கு சார். அதைதான் நான் செஞ்சுக்கிட்டு வரேன்!"

"அது என்ன மூணு கடமை?"

"முதல் கடமை, தங்கள் வாழ்க்கையைத் துறந்து மற்றவர்களுக்காக உழைக்கிற சேவை மனப்பான்மை கொண்ட துறவிகளுக்கு, இரண்டாவது ஆதரவு அற்றவர்களுக்கு, மூன்றாவது  காலம் சென்ற நமது மூதாதையர்களுக்கு."

"நீ சொன்ன மூணு கடமைகள்ள முதல்ல வருவது துறவிகளுக்குச் செய்ய வேண்டியது. ஆனா நீ செய்யப் போற கடமைகள் ரெண்டாவதும் மூணாவதும்தானே? முதல் கடமையை நீ செய்யறதில்லையா?"

"செய்வேன் சார். நான் சொன்ன அநாதை ஆசிரமத்தை நடத்தராறே அவரு கல்யாணம் பண்ணிக்காம தன்னோட வாழ்க்கையைத் துறந்து ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு நான் என்ன பெரிய உதவி செய்ய முடியும்? அவரை நேரில பார்த்து அவரோட சேவையைப் பாராட்டி விட்டு என்னால முடிஞ்ச ஒரு சின்ன தொகையை நன்கொடையாக் கொடுத்து விட்டு வருவேன். ராமர் பாலம் கட்ட அணில் மண் 'சுமந்து' போய்க் கொடுத்தது மாதிரி. முதல் கடமையை என்னால இந்த அளவுக்குத்தான் சார் செய்ய முடியும்."

"நீ ரொம்ப கிரேட் அப்பா. உன் கிட்டே நான் நிறையக் கத்துக்க வேண்டியிருக்கு. ஆமாம். நீ இதையெல்லாம் எங்கிருந்து கத்துக்கிட்டே?"

"சின்ன வயசிலேருந்து நான் தினம் படிச்சுக்கிட்டு வர ஒரு புத்தகத்திலிருந்து சார்."

"அப்படியா? அது என்ன புத்தகம்?"

"திருக்குறள்."
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.


பொருள்:
தன்னலம் இல்லாமல் பிறருக்காக உழைக்கிற துறவு மனப்பான்மை கொண்டவர்கள், ஆதரவற்றவர்கள், இந்த உலகத்தை விட்டுப் போய் விட்ட மூதாதையர்கள் ஆகியோருக்கு இல்லற வாழ்க்கை நடத்துபவன் துணையாக நின்று உதவ வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Three Duties' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால் 











Wednesday, July 22, 2015

41. அன்றும் இன்றும்

ரகுராமன் சம்பளப் பணத்தை மனைவி சுசீலாவிடம் கொடுத்தான்.

"அதே தொகை, அதே பங்கீடு!" என்றாள் சுசீலா.

"என் சம்பளத் தொகையை என்னால் அதிகரிக்க முடியாது. பங்கீடு செய்வதில் வேண்டுமானால் சில மாற்றங்கள் செய்யலாம்" என்றான் ரகுராமன்.

"என்ன மாற்றம்? வீட்டுச் செலவுக்கான தொகையைக் குறைத்து விட்டு, தர்மம் கொடுக்கும் தொகையை அதிகப் படுத்துவதா?" என்றாள் சுசீலா கேலியாக.

"உன்னால் வீட்டுச் செலவைக் குறைத்துக் கொள்ள முடிந்தால் அப்படிச் செய்யலாம்!" என்றான் ரகுராமன் விட்டுக் கொடுக்காமல்.

"ஆமாம், சம்பாதிப்பதில் பத்து சதவீதம் தர்மத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?"

"அப்படி ஒன்றும் இல்லை. வருமான வரிக்குத்தான் குறிப்பிட்ட சதவீதம் என்று விதித்திருக்கிறார்கள். தர்மத்துக்கு, பத்து சதவீதத்துக்கு அதிகமாகவும் கொடுக்கலாம்!"

"உங்கள் சிந்தனையே எனக்குப் புரியவில்லை. உங்கள் வருமானத்தில் பத்து சதவீதத்தை தர்மத்துக்குக் கொடுக்கிறீர்கள், சரி. அதை ஏன் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொடுக்கிறீர்கள்?"

"ஒரு பிரிவு அநாதை இல்லங்களுக்கு. ஒரு பிரிவு முதியோர் இல்லங்களுக்கு. இன்னொரு பிரிவு நான் பின்பற்றும், சமூகச் சேவைகள் செய்து வரும் ஸ்வாமிஜியின் மடத்துக்கு."

"மூன்று பேருக்கும் பிய்த்துப் பிய்த்துக் கொடுப்பதை விட யாராவது ஒருவருக்குக் கொடுக்கலாமே!"

"என் வருமானம் அதிகமாக இருந்தால் மூன்று பேருக்கும் ஆளுக்குப் பத்து சதவீதம் கொடுப்பேன். என்னால் கொடுக்க முடிந்தது பத்து சதவீதம்தான் என்பதால் அதை மூன்றாகப் பிரித்துக் கொடுக்கிறேன்."

"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்."

"முன்காலத்தில் மனித வாழ்க்கை நான்கு நிலைகளில் இருந்தது. பிரம்மச்சரியம், இல்லறம், சுகங்களைத் துறந்து காட்டில் போய் வசிக்கும் வானப்பிரஸ்தம், துறவறம் என்று. இவர்களில் இல்லறத்தில் இருப்பவர்களுக்குத்தான் வருமானம் உண்டு. அதனால் இல்லறத்தில் இருப்பவர்கள்தான் மற்ற மூன்று நிலையில் இருப்பவர்களுக்கும் உதவி வந்தார்கள். அது அவர்கள் கடமை கூட.

"ஆனால் இப்போது இந்த நான்கு நிலை வாழ்க்கை முறை நம்மிடையே இல்லை. இல்லறம் மட்டும்தான் அப்படியே இருக்கிறது. பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், துறவறம் ஆகிய மூன்றும் இல்லை. ஆனால் இவை வேறு வடிவில் இருக்கின்றன.

"பிரம்மச்சாரிகளுக்குப் பதிலாக அநாதை இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். வானப்பிரஸ்தத்துக்குப் பதிலாக முதியோர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வாழும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். துறவிகளுக்குப் பதிலாகத் தங்கள் வாழ்க்கையைத் துறந்து சமூக சேவைக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், மதத் தலைவர்களும் இருக்கிறார்கள். நான் போலிச் சாமியார்களை இங்கே சேர்க்கவில்லை. அவர்கள் செய்வது வியாபாரம் என்பதால் அவர்களையும் இல்லறத்தில் இருப்பவர்களாகத்தான் கருத வேண்டும்! எனவேதான் இந்த மூன்று வகையினருக்கு என்னால் முயன்ற உதவியைச் செய்து வருகிறேன்."

ரகுராமன் சொல்லி முடித்ததும், முதல் முறையாக அவனை வியப்புடனும் மதிப்புடனும் பார்த்தாள் சுசீலா. "ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"என் அப்பா சொன்னார்."

"உங்கள் அப்பாவுக்கு யார் சொன்னார்கள்?"

"ஒரு பெரியவர்."

"பெரியவரா? யார் அந்தப் பெரியவர்?"

"அவர் பெயர் திருவள்ளுவர்!" என்றான் ரகுராமன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்:
இல்லறத்தில் இருப்பவர்கள் (பிரம்மச்சரியம், வானப்ரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என்ற) மற்ற மூன்று நிலைகளிலும் இருப்பவர்கள் அறவழியில் தங்கள் வாழ்க்கையை நடத்த உதவ வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Then and Now' th
e English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Tuesday, July 21, 2015

40. ஒரு முறை

ஒரு பெரிய நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்த சந்திரசேகர் திறமையான நிர்வாகி என்பதுடன் நேர்மையானவர், ஊழியர்களிடம் கண்டிப்போடு கனிவையும் காட்டுபவர் என்றும் பெயர் பெற்றவர். எந்த ஊழியரும் அவரை அணுகித் தனது பிரச்னை பற்றிப் பேசலாம். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வார்.

ஒய்வு பெற இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் அவருக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டது.

அவருக்குக் கீழ் பணி புரியும்  பெண் அதிகாரி சரளா அவர் அறையில் அமர்ந்து அவருடன் அலுவலக விஷயமாகப் பேசி விட்டு அவர் அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, சந்திரசேகர் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவளைப் பின்புறத்திலிருந்து கட்டித் தழுவினார். அதிர்ச்சி அடைந்த சரளா தன்னை விடுவித்துக் கொண்டு, "என்ன சார் இது?" என்றாள்.

"ஐ ஆம் சாரி. ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டேன்!" என்றார் சந்திரசேகர். அவருக்கே தான் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்று புரியவில்லை. பல காலமாக அவள் மீது தன் அடிமனதில் இருந்த சபலம்தான் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

"ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவளிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது போலிருக்கிறது உங்களுக்கெல்லாம்!" என்றாள் சரளா அதிர்ச்சியும் கோபமும் அடங்காமல்.

"அப்படி இல்லை. என்னை அறியாமல் இப்படி நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்."

"அது அவ்வளவு சுலபம் இல்லை. இதற்கு நீங்கள் நிச்சயம் பதில்  சொல்ல வேண்டி இருக்கும். நாளை எம்.டி. வருகிறார் இல்லையா? அவரிடம் முறையிடப் போகிறேன்."

சந்திரசேகர் செய்வதறியாமல் நின்றார்.

அன்று இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. 'இத்தனை வருடங்களாக நல்லவர், நேர்மையானவர், நியாயமாக நடப்பவர், பண்பாளர் என்றெல்லாம் பெயர் எடுத்தது இதற்குத்தானா? நாளை உண்மை தெரிந்தால் என்ன ஆகும்?

'எம்.டியின் முகத்தில் எப்படி விழிப்பது? மற்ற ஊழியர்களை எப்படி எதிர்கொள்வது? மனைவி, மகன், மகளுக்கெல்லாம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?

'கடவுளே! ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்? உடலில் ஏதோ ஒரு ஹார்மோன் சட்டென்று அளவுக்கு அதிகமாக ஊறியதால் இப்படிச் செய்து விட்டேனா?'

தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தார். ஆனால் எப்படிச் செய்து கொள்வதென்று தெரியவில்லை.  நேரம் கழித்துக் களைப்படைந்து கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. எல்லா ஊழியர்களும் கூடி நிற்க, எம்.டி. பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க, சரளா அவரைச் செருப்பால் அடிக்கிறாள். அதைப் பார்த்து எம்.டியும் மற்றவர்களும் கை தட்டுகிறார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தார். அதற்குப் பிறகு தூக்கம் வரவில்லை.

மறுநாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கினார் சந்திரசேகர். எம்.டி.யுடனான கலந்துரையாடல், மற்ற அலுவல்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டிருந்தபோது மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. 'எப்போது குண்டு வெடிக்கப் போகிறதோ?'

எம்.டி. கூடக் கேட்டார். "என்ன மிஸ்டர் சந்திரசேகர், உடம்பு சரியில்லையா? டல்லாக இருக்கிறீர்களே?"

"ஆமாம்" என்றார் சந்திரசேகர் சுருக்கமாக.

பொதுவாக எம்.டி. அந்தக் கிளை அலுவலகத்துக்கு வரும்போது சில ஊழியர்களைத் தனியே சந்தித்துப் பேசுவார். சந்திரசேகர் அப்போது அறைக்குள் இருப்பதில்லை.

"நீங்களும் இருங்கள்" என்று எம்.டி. பலமுறை சொன்னபோதும், "இல்லை. நான் இல்லாதபோதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். என் மீது அவர்களுக்கு ஏதாவது குறை இருக்கலாம். அதை உங்களிடம் அவர்கள் சொல்லட்டும். கம்பெனியின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது" என்று சொல்லி இருக்கிறார்.

அவருடைய இந்தப் பண்பான அணுகுமுறை அவர் மீது எம்.டி.க்கும் , ஊழியர்களுக்கும் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது. ஆயினும் இதுவரை அவர் மீது எந்த ஊழியரும் குறை கூறியதில்லை.

ஏன் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கினோம் என்று இப்போது அவர் நொந்து கொண்டார். 'இதனால் சரளாவுக்கு எம்.டி.யிடம் தனியே பேசும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொடுத்து விட்டேனே! நான் எம்.டியின் பக்கத்தில் இருந்தால் என் மீது புகார் சொல்ல சரளாவுக்கு தைரியம் வராது!'

அன்றும் சில ஊழியர்கள் எம்.டி.யிடம் தனியாகப் பேசி விட்டு வந்தனர். பெரும்பாலானோர் இந்த சந்தர்ப்பத்தை எம்.டி.யுடன் தங்களை நெருக்கமாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

அவர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அவற்றை அவரிடமே சொல்லி விடுவார்கள். எம்.டி.யிடம் சொல்ல அவர்களுக்குக் குறை இருக்காது. இன்றுதான் முதல் முதலாக ஒரு ஊழியர் அவர் மீது குறை சொல்லப் போகிறார்!

சரளா எம்.டி. அமர்ந்திருந்த அறைக்குள் நுழைவதை வெளியே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர். குண்டு வெடிக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன! சில மணித் துளிகளைப்  பல மணிகளாக அவர் கழித்தபின் சரளா வெளியே வந்தாள்.

தனக்கு அழைப்பு வரும் என்று சந்திரசேகர் காத்திருந்தார். மேலும் சில ஊழியர்கள் எம்.டி.யைப் பார்த்துப் பேசி விட்டு வந்தனர். 'எல்லோரையும் பார்த்து முடித்து விட்டு அப்புறம் என்னிடம் பேசப் போகிறாரோ?'

ஒரு வழியாக ஊழியர்கள் சந்திப்பு முடிந்தது.

"சார் எம்.டி. உங்களை வரச் சொல்கிறார்" என்று அறிவித்தான் பியூன்.

அடுத்த சில நிமிடங்களில் தன் கௌரவம், தன்மானம், பதவி, அதிகாரம், வாழ்க்கை எல்லாம் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனவோ என்று பதைபதைத்தபடி உள்ளே போனார் சந்திரசேகர். 

எம்.டி. அவரிடம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். 'கிளம்புவதற்கு முன் குண்டை வீசி விட்டுப் போகலாம் என்று இருக்கிறாரோ?'

ஆனால் எம்.டி. ஊருக்குக் கிளம்பும் வரை அவரிடம் இது பற்றி  எதுவும்  பேசவில்லை.

எம்.டி. கிளம்பிச் சென்று சில நிமிடங்கள் கழித்து சரளா அவர் அறைக்குள் வந்தாள்.

'உட்காருங்கள்" என்றார் சந்திரசேகர் தீனமான குரலில்.

ஆனால் சரளா உட்காரவில்லை.

"சார். உங்கள் மீது நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். இந்த அலுவலகத்தில் எல்லோருமே உங்களைக் கடவுள் மாதிரி நினைத்துப் போற்றுகிறார்கள். இந்த அளவுக்கு ஊழியர்களிடம் மதிப்பு, மரியாதை, எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இவற்றைச் சம்பாதித்து வைத்திருக்கும் வேறு யாராவது எந்த நிறுவனத்திலாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

"ஆனால் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த நீங்கள், நேற்று என்னிடம் நடந்து கொண்ட விதத்தால், என் கால் செருப்புக்கும் கீழே போய் விட்டீர்கள் (சந்திரசேகருக்குத் தான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது!) எம்.டி.யிடம் உங்களைப் பற்றிப் புகார் செய்யலாம் என்றுதான் நினைத்தேன்.

"நான் அப்படிச் செய்திருந்தால், இத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் நேர்மை, பண்பு ஆகியவற்றால் ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கட்டி உருவாக்கிய உங்கள் நற்பெயர், கௌரவம் எல்லாம் ஒரு நொடியில் தரை மட்டமாகி இருக்கும். அடிப்படையில் நல்ல மனிதரான உங்களுக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை.

"ஆனால் உங்களிடம் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு முறை உங்கள் அறைக்கு வரும்போதும் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து என் மனதைப் படபடக்கச் செய்யும். உங்களுக்கும் மனச் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.

"அதனால் என்னை பெங்களூர் கிளைக்கு மாற்றும்படி எம்.டி.யிடம் கேட்டிருக்கிறேன். காரணம் எதுவும் சொல்லவில்லை. என் மாற்றல் உத்தரவு வரும் வரை உங்களிடம் இது பற்றிப் பேச வேண்டாம் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று நடந்ததை மறந்து விட்டுப் பார்த்தால், நீங்கள் என்னிடம் பண்போடும், கனிவோடும், கருணையோடும் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக என் நன்றி."

சரளா அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அறையை விட்டு வெளியேறினாள். சந்திரசேகருக்கு அவள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.


பொருள்:
ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அறவழியில் நடப்பது மட்டுமே. செய்யக் கூடாதது கெட்ட பெயரை உண்டாக்கும் செயல்களையே.

Read 'After the Slip' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






Monday, July 20, 2015

39. போலிகள் ஜாக்கிரதை!

சோமசுந்தரம் பல வருடங்களாக ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அவர் கடையில் ஒரு பொருள் வாங்கினால் அது ஒரிஜினலாக இருக்கும் என்ற பெயர் இருந்ததால் அவரிடம் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தனர்.

அவரது வியாபாரம் சிறிய முதலீட்டில் நடைபெற்றதாலும், லாப சதவீதம் குறைவு என்பதாலும் அவருக்கு சுமாரான வருமானமே கிடைத்து வந்தது. உண்மையாகக் கணக்குக் காட்டி விற்பனை வரி, வருமான வரி ஆகிய வரிகளை முறையாகக் கட்டி வந்தார். இதுவும் அவர் குறைவான வருமானத்துக்கு ஒரு காரணம்.

ஆயினும் சோமசுந்தரம் தனது சீரான வியாபாரம் குறித்தும், பெரிய விற்பனையாளர்கள் கூட அவர் பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்குத் தனக்கு இருக்கும் நற்பெயர் குறித்தும் மனத் திருப்தியுடனேயே இருந்தார்.

ஒருமுறை அவரது பழைய நண்பர் வீரமுத்து அவர் கடைக்கு வந்தார். நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்ததால் இருவரும் பல விஷயங்கள் பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு வியாபாரம் பற்றித் திரும்பியது. சோமசுந்தரத்தின் வியாபாரம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த பின் வீரமுத்து சொன்னார்: "என்னப்பா பிழைக்கத் தெரியாதவனா இருக்கியே? இத்தனை வருஷமா வியாபாரம் செஞ்சதுக்கு நீ இந்த ஏரியாவில ஒரு பெரிய கட்டடத்தையே வாங்கியிருக்கணும். ஆனா நீ இன்னும் வாடகை இடத்துல இருந்துக்கிட்டு பெட்டிக்கடை மாதிரி நடத்திக்கிட்டிருக்கே. பிளாட்ஃபாரத்தில வியாபாரம் செய்யறவங்க கூட கிடுகிடுன்னு முன்னுக்கு வந்துடறாங்க. நீ இன்னும் இப்படியே இருக்கியே!"

"என்ன செய்யறது? அதிகமா முதலிடு செய்ய என்கிட்டே பணம் இல்லே. வர லாபம் குடும்பச் செலவுக்குத்தான் சரியா இருக்கு. ஆனா எனக்கு இதில ஒண்ணும் வருத்தம் இல்லை. எனக்கு மார்க்கெட்டில நல்ல பேரு இருக்கு. வர வருமானம் எனக்குப் போதும்."

"உன் லாபத்தை சுலபமா அதிகரிக்க நான் ஒரு வழி சொல்றேன்" என்று வீரமுத்து தனது யோசனையைச் சொன்னார்.

"அதெல்லாம் வேண்டாம்ப்பா. டியூப்ளிகேட் பார்ட் எல்லாம் வித்தா என் பேர் கெட்டுப் போயிடும். என்னோட நல்ல பெயர்தான் எனக்கு இருக்கிற ஒரே சொத்து" என்றார் சோமசுந்தரம்.

"நீ பல பார்ட்களை விக்கறே. நான் சொல்றது ஒரு பார்ட்டைப் பத்தித்தான். இந்த பேரிங்கைப் பத்தி மட்டும்தான். உன் மொத்த பேரிங் விற்பனையில ஒரு பத்து சதவீதம் டியூப்ளிகேட் பேரிங்கைக் கலந்து வித்துடு. பேரிங் எல்லாம் அடிக்கடி உடையறது சகஜம்தான். சரியா ஆயில் போடாதது, வண்டியை ஒழுங்கா ஒட்டாதது மாதிரி காரணங்களால கூட பேரிங் உடையும்.

"பேரிங் உடைஞ்சா பெரும்பாலும் அதை யாரும் பெரிசுபடுத்த மாட்டாங்க. அதோட இந்த டியூப்ளிகேட் பேரிங் எல்லாம் உனக்கு பில் இல்லாமலேயே சப்ளை பண்ண நான் ஏற்பாடு செய்யறேன். நீயும் பில் கேட்காத கஸ்டமர்களாகப் பாத்து இந்த பேரிங்குகளைத் தள்ளி விட்டுடு. வாங்கறது, விக்கறது ரெண்டுமே கேஷ். ஒங்கிட்ட ரிகார்டே இருக்காது.

"யாராவது வந்து பேரிங் உடைஞ்சு போச்சேன்னு கேட்டா அது உன் கடையில வாங்கினது  இல்லேன்னு அடிச்சுச் சொல்லிடு. நூத்தில  ஒண்ணு ரெண்டு பேர்தான் அப்படி வந்து கேட்பாங்க. பில் கொண்டு வாங்க, மாத்தித் தரேன்னு சொன்னா போயிடுவாங்க. பில் வாங்கினமா இல்லையான்னே நிறைய பேருக்கு ஞாபகமே இருக்காது."

சோமசுந்தரம் "அதெல்லாம் வேண்டாம்ப்பா!" என்று முதலில் மறுத்தார். வீரமுத்து விடாமல் அவரிடம் பேசியதைத் தொடர்ந்து 'கொஞ்ச நாள் செஞ்சுதான் பாப்பமே! என்ன ஆயிடப் போவுது? ஏதாவது பிரச்னை வரும் போலத் தெரிஞ்சா உடனே நிறுத்திடலாம். நாம என்ன அக்ரிமென்ட்டா போடப் போறோம்?' என்று நினைத்து "சரி" என்றார்.

சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்து  இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. வீரமுத்து சொன்னது போல் வருமானம் அதிகரித்தது. பிரச்னை எதுவும் வரவில்லை.

ஒரு நாள் ஒரு உடைந்த பேரிங்கைக் கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் வந்தார். "சார், இதை உங்க கடையிலதான் வாங்கினேன். ஒரு வாரத்துக்குள் உடைஞ்சு போச்சு. மெக்கானிக் இது டியூப்ளிகேட்னு சொல்றாரு" என்றார்.

சோமசுந்தரம் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு, பேரிங்கைக் கையில் வாங்கி உற்றுப் பார்த்தார். "ஆமாம். இது டியூப்ளிகேட் பேரிங்தான். ஆனா இது எங்க கடையில வாங்கினது இல்லையே. நாங்க ஒரிஜினல்தான் விக்கறது" என்றார்.

"இல்லை சார். நான்தான் வாங்கினேன். உங்க கடையிலதான் வாங்கினேன்."

"சரி. பில் குடுங்க. மாத்திக் கொடுக்கிறேன்."

"நீங்க பில் குடுக்கவே இல்லையே!"

"சாரி சார். நாங்க பில் இல்லாம விக்கறது இல்லை" என்றார் சோமசுந்தரம்.

வந்தவர் போய் விட்டார்.

இதற்குப் பிறகு சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பதை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்திருந்தார். வேறு யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் அவற்றை விற்கத் தொடங்கினார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு, அவருக்கு பார்ட்கள் சப்ளை  செய்யும் மும்பை நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரிடம் அடிக்கடி பேசும் அதிகாரிதான் பேசினார். ஆனால் இந்த முறை, ''எப்படி இருக்கிறீர்கள்?' என்ற விசாரிப்புகள் இல்லாமல் பேச்சைத் துவங்கினார்.

"மிஸ்டர் சோமசுந்தரம். நீங்கள் இருபது வருடங்களாக எங்கள் பொருட்களை விற்று வருகிறீர்கள். இதுவரை நம் இருவரிடையேயும் எந்தப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நீங்கள் டியூப்ளிகேட் பாகங்கள் விற்பதாக எங்களுக்கு ஒரு புகார் வந்தது.

"உங்களிடம் பில் இல்லாமல் பேரிங் வாங்கிய ஒருவர் பேரிங் உடைந்ததைப் பற்றி உங்களிடம் புகார் செய்தபோது, நீங்கள் அது  உங்கள் கடையில் வாங்கியதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் இது பற்றி எங்களிடம் புகார் செய்தபோது, முதலில் நாங்கள் அதை நம்பவில்லை. பிறகு அந்தப் புகார் உண்மையா என்று விசாரிப்பதற்காக எங்கள் ஆட்கள் சிலரை அனுப்பி  உங்கள் கடையில் இருந்து பேரிங் வாங்கச் செய்தோம். அவர்களில் இரண்டு பேருக்கு பில் இல்லாமல் நீங்கள் ட்யூப்ளிகேட் பேரிங் கொடுத்திருக்கிறீர்கள்."

"சார். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் என் கடையில் வேலை செய்யும் ஆட்கள் யாராவது இதைச் செய்திருக்கலாம். நான் விசாரிக்கிறேன். இதை உடனே நிறுத்தச் செய்கிறேன்..."

"தேவையில்லை மிஸ்டர் சோமசுந்தரம். நாங்கள் தீர விசாரித்து விட்டோம். உங்களுக்கு இந்த டியூப்ளிகேட் பேரிங்குகளை சப்ளை செய்வது யார், ஒரு மாதத்துக்கு எத்தனை பேரிங் வாங்குகிறீர்கள் என்ற எல்லா விவரங்களையும் நாங்கள் சேகரித்து விட்டோம். இன்றிலிருந்து நீங்கள் எங்கள் நிறுவனத்தின்  டீலர் இல்லை. இது பற்றி எங்களிடமிருந்து முறையான கடிதம் உங்களுக்குத் தபாலில் வரும். ஏற்கெனவே நாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள உங்கள் டீலர் டெபாசிட் தொகையை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்."

"சார். தெரியாமல் தவறு  செய்து விட்டேன். இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். இனி இந்தத் தவறு நேராது. இருபது வருடங்களாக நான் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறேன்..."

"என் தனிப்பட்ட வருத்தம் அதுதான் சார். இருபது வருடங்களாக நீங்கள் காப்பாற்றி வந்த நேர்மையை இரண்டே மாதங்களில் தொலைத்து விட்டிர்களே! உங்களோடு இத்தனை வருடங்கள்  பழகியவன் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குட் லக்."

உரையாடல் முடிந்தது. உரையாடல் மட்டும்தானா?

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.


பொருள்:
அறநெறியில் செயல்படுவதன் மூலம் வருவதுதான் இன்பம். அறத்துக்கு மாறாகச் செயல்பட்டால்   நன்மையும் கிடைக்காது, நற்பெயரையும் இழக்க நேரிடும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்