About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, November 25, 2018

225. அழையா விருந்தாளி

பத்து நாள் உபவாசம் முடிந்து இன்று பதினோராவது நாள்.

பிரசன்ன பார்க்கவர் மெல்ல எழுந்தார். பத்து நாள் பட்டினி கிடந்த உடல், சோர்வினால் நிற்க முடியாமல் தள்ளாடியது. 

பிரசன்ன பார்க்கவர் ஒரு காலைத் தூக்கி மடக்கி, மறு காலின் முழங்காலுக்குப் பக்கவாட்டில் வைத்து அழுத்தியபடி, இரு கைகளையும் மேலே தூக்கிக் குவித்தபடி, விருட்சாஸனத்தில் நின்றார். முதலில் தள்ளாட்டம் அதிகமானது போல் தோன்றினாலும், சில வினாடிகளில் உடல் நிலை பெற்று அசையாமல் நின்றது.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்கு வந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தார் அவர். சற்றுத் தொலைவு நடந்து ஊருக்குள் வந்ததும், வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார்.

வீட்டின் தாழ்வாரத்தில் இலை போடப்பட்டு சிலர் சாப்பிட அமர்ந்திருந்தது வாசலிலிருந்து தெரிந்தது. உள்ளே சென்று, ஒரு ஓரத்தில் காலியாயிருந்த இலையில் அமர்ந்தார்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும், சற்றுத் தொலைவிலிருந்து பரபரப்பாக ஒடி வந்த ஒருவர்,"சாமி" என்று கூவியபடி பிரசன்ன பார்க்கவரின் காலில் விழப் போனார்.

அவரைத் தடுத்த பிரசன்ன பார்க்கவர், "நீங்கள் என்னை விடப் பெரியவர். நீங்கள் என் காலில் விழக் கூடாது" என்றார்.

"நான் வயசில பெரியவனா இருக்கலாம். ஆனா நீங்க ஒரு முனிவர். எத்தனையோ நாள் பசி, தூக்கம் இல்லாம தவம் இருந்திருக்கீங்க. பத்து நாளா நீங்க சாப்பிடாம, இருந்த  இடத்தை விட்டு அசையாம தவம் இருந்தீங்களே, அதுக்கு எவ்வளவு மனவலிமை வேணும்! அதனால நீங்க என்னை விடப் பல விதத்திலும் பெரியவர். நீங்க என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல. நான் பக்கத்தில கடைக்குப் போயிருந்தேன். நீங்க வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கிறதா ஒத்தர் வந்து சொன்னதும், ஓடி வந்தேன். நீங்க என் வீட்டில வந்து சாப்பிட்டது என்னோட புண்ணியம்" என்றார் அவர்.

"நீங்க வயசில பெரியவர்ங்கறதுக்காக நான் அப்படிச் சொல்லல. பசியைப் பொறுத்துக்கறதை விட, பசிச்சவங்களுக்குச் சோறு போடறது பெரிய தவம். அதை நீங்க செய்யறீங்க. தினம் பட்டினியா இருக்கற சில பேரைத் தேடிப் பிடிச்சு உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடறீங்க. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அவ்வளவு வசதியானவர் இல்லேன்னும் ஒரு தவம் மாதிரி இதை செஞ்சுக்கிட்டு வரீங்கன்னும் எனக்குத் தெரியும். பத்து நாள் உபவாசம் முடிஞ்சப்பறம், ஒரு உயர்ந்த மனிதர் வீட்டில சாப்பிடணும்னு நினைச்சுத்தான் உங்க வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்தேன்" என்றார் பிரசன்ன பார்க்கவர் சிரித்தபடி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பொருள்:  
தவ வலிமையினால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெரிதுதான். ஆனால் பசியால் வாடுபவர்க்கு உணவளித்து, பசியைப் போக்குபவரின் ஆற்றல் இன்னும் மேன்மை பொருந்தியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment