About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, November 19, 2018

223. உதவி செய்ய நிபந்தனை

"ஏண்டா, இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கி இருக்கக்கூடாது? கவர்ன்மென்ட் எஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைச்சிருக்குமே!" என்றான் சாம்பசிவம், தன் மகன் குணசீலனிடம்.

குணசீலன் பதில் சொல்லவில்லை.

ஆனால் சாம்பசிவத்தின் மனைவி நீலா மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தாள். "நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது? நடக்க வேண்டியதைப் பத்திப் பேசுங்க."

"பேசறதுக்கு என்ன இருக்கு?  வருஷத்துக்கு ஒண்ணரை லட்சம் ரூபா அவன் படிப்புக்குச் செலவழிக்கற  நிலைமையில நான் இல்ல" என்றான் சாம்பசிவம்.

"அப்ப அவனை அம்போன்னு விட்டுடப் போறீங்களா? எஜுகேஷன் லோன் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க."

சாம்பசிவம் யோசித்தான்.

நான்கு வருடங்கள் ஓடியதே தெரியவில்லைகுணசீலனின் படிப்பு முடிந்து, அவனுக்கு எஞ்சினீரிங் பட்டம் கிடைத்து விட்டது. காம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. ஓரிரு மாதங்களில் வேலையில் சேர வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.

"நாலு வருஷமா யாரோ ஒரு நண்பர் கிட்ட கடன் வாங்கிப் படிக்க வச்சதா சொன்னீங்களே தவிர, அது யாருன்னு சொல்லலியே? எனக்குத் தெரியாத அந்த நண்பர் யாரு? பள்ளிக்கூடத்துல உங்களோட படிச்சவர்னு சொன்னீங்களே தவிர அவர் பேரு கூட சொல்லலியே!" என்றாள் நீலா.

"இப்ப சொல்றேன்" என்ற சாம்பசிவம், தன் மகனிடம் திரும்பி, "குணசீலா! இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. அசலை மட்டும் மாசா மாசம் உன் சம்பளத்திலேந்து கொடுத்துடணும். உன் சொந்தச் செலவுக்கு வேண்டியது போக மீதியைக் கடனுக்குக் கொடுத்துடு. குடும்பச் செலவுக்கு என் சம்பளப் பணம் போதும். ரெண்டு மூணு வருஷத்திலே கடனை அடைச்சிடணும், சரியா?" என்றான்.

"கண்டிப்பா செய்யறேன் அப்பா. சம்பளம் வாங்கின அன்னிக்கே ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஆனா அந்த நல்ல மனுஷர் யார்னு சொல்லுங்க" என்றான் குணசீலன்.

"உன் அண்ணன் சிவகுமார்தான் பணம் கொடுத்து உதவினார்" என்றான் சாம்பசிவம், நீலாவிடம்.

"அது எப்படிங்க..." என்றாள் நீலா, நம்ப முடியாதவளாக.

"குணசீலன் படிப்புக்காக என் ஆபீஸ்ல கடன் கேட்டேன். இல்லேன்னுட்டாங்க. பாங்க்ல எஜுகேஷன் லோன் கேட்டப்ப, இல்லேன்னு வெளிப்படையா சொல்லாம, இழுத்தடிச்சாங்க. அப்புறம்தான் உன் அண்ணன் ஞாபகம் வந்தது.

"அவர் வேற ஜாதியில் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்னு உங்க வீட்டில அவரோட உறவை வெட்டி விட்டுட்டீங்க. நம் கல்யாணத்துக்குக் கூட அவரைக் கூப்பிடல. நான் அவரைப் பாத்தது கூட இல்ல. ஆனா வசதியா இருக்கார்னு நீ சொல்லி இருக்க.

"அவரைப் பாத்து என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு உதவி கேட்டேன். அவர் உடனே சரின்னு சொல்லிட்டார். நான் முதல் வருஷப் படிப்புச் செலவுக்கு மட்டும்தான் பணம் கேட்டேன், அடுத்த வருஷங்களுக்கெல்லாம், வேற எங்கேயாவது முயற்சி பண்ணலாம்னுட்டு. அவர்தான் நாலு வருஷத்துக்கும் தானே பணம் கொடுக்கறதாச் சொன்னார். வட்டி வேண்டாம், அசலை மட்டும், நம் பையன் அவன் சம்பளத்திலேந்து கொஞ்ச கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்னுட்டாரு. ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டாரு."

"என்ன நிபந்தனை?"

"அவர் பணம் கொடுத்ததை நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாது - உன்கிட்டயும், குணசீலன்கிட்டயும் கூட. அவரும் யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு."

"ஏன் அப்படி?"

"அவரு சொன்னாரு: 'மாப்பிள்ளை, உங்க கிட்ட உங்க பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல, எங்கிட்ட கடன் வாங்கித்தான் படிக்க வச்சீங்கன்னு எதுக்கு நாலு பேருக்குத் தெரியணும்? உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சா போதாதா?' அப்படின்னு. எப்படிப்பட்ட மனுஷன் பாத்தியா?" என்றான் சாம்பசிவம்.

   அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

பொருள்:  
ஒருவரிடம் பொருள் இல்லை என்பதைப்  பிறரிடம் கூறாமல், அவனுக்குக்  கொடுப்பது நல்ல குடியில் பிறந்தோரின் செயல்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















No comments:

Post a Comment