About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, November 17, 2019

297. பயிற்சியின் முதல் நாள்

"இவ்வளவு நேரம் இந்த ஆன்மிகப் பயிற்சி பற்றி விளக்கிச் சொன்னேன்.  இது மனத்தை அடக்கிச் செய்ய வேண்டிய பயிற்சி. இதற்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். நாளைக் காலை ஏழு மணிக்கு இந்தப் பயிற்சி தொடங்கும். இந்தப் பயிற்சிக்கு வரும்போது நீங்கள் எல்லோரும் குளித்து விட்டு வர வேண்டும். அதோடு வெறும் வயிற்றுடன் வர வேண்டும். இப்போது நீங்கள் போகலாம்."

சுவாமிஜி எழுந்து செல்ல, கூட்டம் கலைந்தது.   

றுநாள் காலை பயிற்சியில் பங்கேற்பவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். சரியாக ஏழு மணிக்கு சுவாமிஜி அங்கே வந்தார்.

"இப்போது பயிற்சியைத் தொடங்கப் போகிறோம்!" என்றவர், அனைவரையும் ஒருமுறை பார்த்து விட்டு, "எல்லோரும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டீங்க இல்ல?" என்றார் சிரித்துக் கொண்டே. 

அனைவரும் மௌனமாக இருந்தனர். சிலர் மட்டும் இல்லையென்று தலையாட்டினர்.  

"நல்லது. சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு தெரியும். யாராவது காப்பி மட்டுமாவது சாப்பிட்டீங்களா?"

ஒரு சில வினாடிகளுக்குப் பின் ஒருவர் மட்டும் தயக்கத்துடன் கையைத் தூக்கினார். 

"காப்பி சாப்பிட்டீங்களா?" என்றார் சுவாமிஜி.

"எதுவும் சாப்பிடாமத்தான் வீட்டிலேந்து கிளம்பினேன். வழியில ஒரு காஃபி ஷாப் திறந்திருந்தது. காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு சாப்பிட்டோம்...சாப்பிட்டேன்!" என்றார் அவர்.

"சாப்பிட்டோம்னு சொல்லிட்டு,  உங்களோட சேர்ந்து காப்பி சாப்பிட்ட மத்தவங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்னுட்டு சாப்பிட்டேன்னு சொல்றீங்க. நல்லது. இவரோட சேர்ந்து காஃபி ஷாப்ல காப்பி சாப்பிட்டவங்க யாரு?" என்றார் சுவாமி புன்னகை மாறாமல்.

தயக்கத்துடன் இன்னும் மூன்று பேர் எழுந்தனர்.

"நல்லது. எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு நேத்திக்கு நான் சொன்னேன். ஆனாலும் காஃபி ஷாப்பைப் பாத்ததும், காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு நாலு பேர் காப்பி சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க. நீங்க மூணு பேரும் போயிட்டு நாளைக்கு வாங்க. உங்க பயிற்சியை நாளைக்கு ஆரம்பிக்கலாம்" என்றார் சுவாமிஜி.

மூன்று பேர் அங்கிருந்து நகர முயல, காப்பி குடித்ததாக முதலில் ஒப்புக் கொண்டவர் போவதா, இருப்பதா என்ற குழப்பத்துடன் நின்றார்.

"ஒரு நிமிஷம்" என்றார் சுவாமிஜி, கிளம்பத் தொடங்கிய மூவரையும் பார்த்து. அவர்கள் நின்றனர். 

"இது உங்களை தண்டிக்கறதுக்காக இல்ல. இந்தப் பயிற்சிக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கியம்தான். ஆனா மனசைக் கட்டுப்படுத்தறது சுலபம் இல்ல. மனசைக் கட்டுப்படறதைத் தெரிஞ்சுக்கறதும் இந்தப் பயிற்சியோட நோக்கங்கள்ள ஒண்ணு. அதை நீங்க கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக்கிக்க முடியும். ஆனா யாராவது காப்பி குடிச்சீங்களான்னு நான் கேட்டப்ப, அவரு மட்டும்தான் குடிச்சேன்னு உண்மையைச் சொன்னாரு. ஆனா நீங்க மூணு பேரும் அப்புறமாத்தான் சொன்னீங்க. எல்லா அறங்கள்ளேயும் முக்கியமான அறம் உண்மை பேசறது. இந்த ஒரு அறத்தைக் கடைப்பிடிக்கறவங்களால மற்ற எல்லா அறங்களையும் கடைப்பிடிக்க முடியும். இந்த அறத்தைக் கடைப் பிடிக்காதவங்களால வேற எந்த அறத்தையும் பின்பற்ற முடியாது. இப்ப இந்த நாலு பேரைத் தவிர வேற யாராவது காப்பி, டீ மாதிரி பானங்கள் குடிச்சுட்டு வந்திருந்தா எழுந்து நிக்கலாம்."

ஒருவர் எழுந்து நிற்க அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் எழுந்து நின்றனர். 

"நல்லது. இன்னிக்கு பயிற்சி முடிஞ்சு போச்சு! உண்மையைச் சொல்லணும்கறதுதான் இன்றைய பயிற்சி. இதை எல்லோருமே அழுத்தமாப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இனிமே பயிற்சியை நாளைக்குத் தொடரலாம். யாராவது காப்பி குடிச்சுட்டு வந்தீங்களான்னு நாளைக்கு நான் கேட்க மாட்டேன். அதுக்கு அவசியம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ஏன்னா உண்மை பேசணும்கற அறத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சதுமே, கட்டுப்பாடா இருக்க முதல் படியை எடுத்து வச்சு, கட்டுப்பாடு என்ற இன்னொரு அறத்தையும் நீங்க எல்லாருமே பின்பற்ற ஆரம்பிச்சிருப்பீங்க!" என்று சொல்லி எழுந்து கொண்டார் சுவாமிஜி. 

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொருள்:
பொய்யாமை என்ற அறத்தை ஒருவன் தவறாமல் கடைப் பிடித்தால், பிற அறங்களை அவன் செய்வதும் நன்மை விளைவிக்கும். (பிற அறங்களைச் செய்யும்போது, உண்மைத் தன்மையுடன் செயல்படாவிட்டால் அத்தகைய அறங்களைச் செய்வது தீமை விளைவிக்கக் கூடும். பொய்யாமையைக் கடைப் பிடிப்பவன் பிற அறங்களைச் செய்யும்போது உண்மையாக நடந்து கொள்வான் என்பதால் அந்த அறங்களை அவன் சரியாகச் செய்து அவற்றின் நற்பலன்களைப் பெறுவான்.)
பொருட்பால்                                                                             காமத்துப்பால்















No comments:

Post a Comment