About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, March 27, 2019

247. துறவியுடன் ஒரு சந்திப்பு

"வாங்க. உட்காருங்க. என்னைப் பாக்கணும்னு சொன்னீங்களாமே!" என்றார் மடத்தலைவர் ராமானந்தர்.

'நான் உங்க மடத்தோட ரொம்ப நாளா தொடர்புள்ளவன்" என்றார் ராமசுந்தரம்.

"அப்படியா? நான் உங்களை இதுக்கு முன்னால பாத்ததில்லையே!"

"நான் உங்களைப் பார்க்கணும்னு முயற்சி செஞ்சதில்லை. உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பல. உங்களை நான் பலமுறை பாத்திருக்கேன். கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சதில்லை."

"உங்க மனப்பான்மை ரொம்ப உயர்ந்தது. பாராட்டறேன்."

"ஆனா உங்க மானேஜருக்கு என்னை நல்லாத் தெரியும்" என்ற ராமசுந்தரம், சற்றுத் தயங்கி விட்டு, "ஏன்னா, நான் உங்க மடத்துக்கு நிறைய நன்கொடை கொடுத்திருக்கேன்" என்றார்.

"அப்படியா? ரொம்ப நன்றி. உங்களை மாதிரி தாராள மனசு உள்ளவங்க செய்யற உதவியாலதான் எங்களால நிறையப் பணிகளைச் செய்ய முடிகிறது" என்றார் ராமானந்தர்.

"என்னைப் பத்தி உங்க மானேஜர் உங்க கிட்ட சொல்லியிருப்பாரே?"

"பண விவகாரங்களைப் பத்தி யாரும் எங்கிட்ட பேசறதில்ல. யார் எவ்வளவு கொடுத்தாங்க, எவ்வளவு செலவாகுதுன்னெல்லாம் எனக்குத் தெரியாது. அதுக்கு ஒரு டிரஸ்ட் இருக்கு. அவங்கதான் பாத்துக்கறாங்க. இவ்வளவு பணம் இருக்கு, அதை இப்படி செலவு செய்யலாமான்னு அப்பப்ப யோசனை கேட்பாங்க. அவ்வளவுதான்."

"ஓ  அதனாலதான் இப்படி நடந்திருக்கு!" என்றார் ராமசுந்தரம்.

"என்ன நடந்தது?" என்றார் ராமானந்தர். ராமசுந்தரம் மடத்தலைவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அருகில் வேறு யாரும் இல்லை.

"போன வாரம் உங்க மடத்தில ஒரு விழா நடந்ததே!"

"அது விழா இல்லை. சேவா சமர்ப்பணம். நாங்க செய்யற சேவைகளைப் பத்திப்  பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொதுமக்களை இது மாதிரி சேவைகளில் ஈடுபடச் செய்யறதுக்காகவும், சேவையில் ஈடுபட்டவங்களை எல்லார் முன்னேயும் பெருமைப்படுத்தறதுக்காகவும், வருஷா வருஷம் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தறோம்."

"சரி. அதைத்தான் நான் விழான்னு சொன்னேன். அந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். வெளிப்படையா சொல்றேனே! நிறைய நன்கொடை கொடுத்தவங்கறதுக்காக முன்வரிசையில் உக்கார வைப்பாங்கன்னு பாத்தேன். ஆனா முதல் பத்து வரிசைகள் ரிசர்வ் செய்யப்பட்டவைன்னு சொல்லி, என்னைப் பின்னால போய் உக்காரச் சொன்னாங்க. நான் கோவிச்சுக்கிட்டு அந்த நிகழ்ச்சியில கலந்துக்காமயே போயிட்டேன்."

ராமானந்தர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார். "நீங்க சொன்னபடி அது ஒரு விழாவா இருந்தா உங்களை முன்வரிசையில் உக்காத்தி வச்சிருக்கலாம். இது சேவையில் ஈடுபட்டவர்களைப் பெருமைப்படுத்தறதுக்கான நிகழ்ச்சிங்கறதால சேவையில் ஈடுபட்டவர்களும், சேவையினால பலன் அடைஞ்ச சில பேரும்தான் முன் வரிசையில உக்காந்திருந்தாங்க. இது அவங்க மேடைக்கு வந்து தங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்க உதவியா இருக்குணுங்கறதுக்காக நான் செஞ்ச ஏற்பாடுதான். உங்களுக்கு மன வருத்தம் இருந்தா, அதுக்கு நான்தான் பொறுப்பு."

ராமசுந்தரத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "அப்படின்னா, நன்கொடை கொடுக்கறதுக்கெல்லாம் மதிப்பே கிடையாதா?" என்றார்.

"நிச்சயம் உண்டு. நீங்க சொன்னப்பறம்தான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருது. நிதி உதவி செஞ்சவங்களைப் பெருமைப்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச் சொல்றேன். இதை நாங்க செய்யாதது எங்க தப்புதான். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்."

ராமசுந்தரம் டக்கென்று நெகிழ்ந்து, "சாமி! நீங்க பெரியவர். நன்றி மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க" என்றார்.

"உங்களைப் பத்தி சொல்லுங்களேன்" என்றார் ராமானந்தர்.

"சாமி. நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில கடைசிப் பையனாப் பொறந்தேன். எனக்கு நாலு அண்ணன், ஒரு அக்கா இருக்காங்க. சின்ன வயசில வறுமையில் கஷ்டப்பட்டதால, இந்த உலகத்தில பணம் இருந்தாதான் வாழ்க்கைன்னு அப்பவே புரிஞ்சுக்கிட்டு, எப்படியாவது பணம் சம்பாதிக்கணும்னு ஒரு வெறியோட இருந்தேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு, முப்பது வயசுக்குள்ள ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். அப்புறம் இந்த 10 வருஷத்திலே இன்னும் பெரிசா முன்னுக்கு வந்து நல்ல வசதியோடு இருக்கேன். நான் சுயமா முன்னுக்கு வந்ததில எனக்குப் பெருமை உண்டு. தப்பா சாமி?"

"தப்பே இல்ல. நீங்க நிச்சயமா உங்களைப் பத்திப் பெருமைப்பட்டுக்கலாம். ஆமாம், உங்க அண்ணன்கள், அக்கால்லாம் எப்படி இருக்காங்க?" என்றார் ராமானந்தர்.

"அவங்க கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. என்னை மாதிரி அவங்க முயற்சி எடுத்து முன்னுக்கு வரலியே!"

"அவங்களுக்கு நீங்க ஏதாவது உதவி செய்யறீங்களா?"

"நான் எதுக்கு உதவி செய்யணும்? எனக்கு யார் உதவி செஞ்சாங்க? நான் பணக்காரன் ஆனதும் அவங்க எங்கிட்ட நெருங்கி வந்தாங்க. உதவி கேப்பாங்கன்னு நினைச்சு அவங்களை வெட்டி விட்டுட்டேன்."

"நீங்க செஞ்சது சரிதானா?"

"என்ன தப்பு இதில?"

"தப்புன்னு எதுவும் இல்ல. பொதுவாவே கஷ்டப்படறவங்க கிட்ட இரக்கம் காட்டறதும், அவங்களுக்கு உதவறதும் எல்லா மனுஷங்களும் செய்ய வேண்டியது. நாங்க செய்யற சேவை கூட இந்த வகைதான். மத்தவங்களுக்கு உதவறது இருக்கட்டும். நம் கூடப் பிறந்தவங்க கிட்ட இரக்கம் காட்டி நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்கு செய்ய வேண்டாமா?"

ராமசுந்தரம் பதில் சொல்லாமல் இருந்தார்.

"இப்ப நீங்களே பாத்தீங்க. எங்க சேவா சமர்ப்பணத்தில உங்களுக்கு முன் வரிசையில இடம் கிடைக்கல, சேவை செஞ்சவங்களுக்குத்தான் இடம் கிடைச்சதுன்னு. இந்த உலகத்தில வாழப் பணம் வேணும். ஆனா இந்த உலகத்தில ஒரு பகுதியா இருக்கற எங்க மடத்திலேயே மத்தவங்க கிட்ட கருணையோட செயல்படறவங்களுக்குத்தானே இடம் கொடுக்கறோம்? அப்ப, சொர்க்கம், விண்ணுலகம் இதிலெல்லாம் இடம் கிடைக்க அன்பு, கருணை, சேவை மனப்பான்மை இதெல்லாம் வேணும்  இல்லையா?"

ராமானந்தர் சொல்வதை யோசித்துப் பார்ப்பது போல் ராமசுந்தரம் மௌனமாக இருந்தார்.

"யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கே ஒரு தெளிவு வரும். நீங்க எப்ப வேணும்னாலும் என்னை வந்து பாக்கலாம்" என்று ராமசுந்தரத்துக்கு விடை கொடுத்தார் ராமானந்தர்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள்:  
பொருள்  இல்லாதவர்களால் இந்தப் பூவுலகில் நல்ல வாழ்க்கை வாழ முடியாது. அது போல் அருள் இல்லாதவர்களுக்கு விண்ணுலகம் கிட்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்







4 comments:

  1. திருக்குறள் கதைகள் அன்று சாவி எழுதியது நினைவுக்கு வருகிறது. உங்களின் இன்றைய பணியும் பாராட்டுதலுக்கு உரியது.

    கதைகள் கருத்தாழம் உள்ளவை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. இது நாள் வரை உங்கள் வலைத்தளம் என் கண்ணில் படவே இல்லை....இன்று கண்ணில் பட்டு வந்து படித்த முதல் பதிவு இது... மிகவும் தெளிவான நடையில் நல்ல கருத்தை சொல்லி சென்ற விதம் பாராட்டுகுரியது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete