About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, March 25, 2019

246. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு...

நான் கிளை மேலாளராக இருந்த வங்கிக்கு 
10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. இப்போது நான் வங்கியின் மண்டல மேலாளர்.

கிளை மேலாளரிடம் சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், "இந்த ஊர்ல 'அருள் தேநீர் விடுதி'ன்'னு ஒரு டீக்கடை இருந்ததே, அது  இருக்கா?" என்றேன்.

"இருக்கு. அது இப்ப 'அருள் ஹோட்டல்'னு பெரிய ஹோட்டல் ஆயிடுச்சு."

"ஓ! அப்படியா?" என்றேன் மகிழ்ச்சியுடன்.

"உங்களுக்கு எப்படி சார் தெரியும்? நீங்க இங்க மானேஜரா இருந்தப்பவே அந்த ஹோட்டல் இருந்ததா என்ன?" என்றார் கிளை மேலாளர்.

"அந்தப் பையன் - அவன் பேரு என்ன - மருது, அவனுக்கு நான்தான் டீக்கடை ஆரம்பிக்க யோசனை சொல்லி பாங்க்ல கடன் கொடுத்தேன்" என்றேன்.

"அப்படியா?" என்றார் கிளை மேலாளர்.

"நாம சில வாடிக்கையாளர்களைப் பாக்கப் போகறப்ப அங்கேயும் போயிட்டு வரலாம்" என்றேன் நான்.

"சரி சார்."

நாங்கள் அருள் ஹோட்டலுக்குப் போனபோது கல்லாவில் அமர்ந்திருந்த பருமனான நபரை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்த பிறகுதான் அவன் மருது என்று தெரிந்து கொண்டேன். 10 வருடம் முன்பு நோஞ்சானாக இருந்த பையன் எப்படி மாறி விட்டான்!

கிளை மேலாளரைப் பார்த்ததும் மருது இலேசாகச் சிரித்தான். என்னை அடையாளம் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

"என்ன மருது? எப்படி இருக்கீங்க?" என்று கேட்ட கிளை மேலாளர் என்னைக் காட்டி, "சார் யாருன்னு தெரியுதா?" என்றார்.

"தெரியலியே!" என்றான் மருது என்னைப்  பார்த்து விட்டு. "ஹோட்டலுக்கு தினம் நூறு பேரு வராங்க. எல்லாரையும் எப்படி ஞாபகம் வச்சுக்கறது?"

எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

"இவர் உங்க ஹோட்டலுக்கு வந்துட்டுப் போன கஸ்டமர் இல்ல. இங்க மானேஜரா இருந்தவரு. உங்களுக்கு லோன் கொடுத்து இந்த ஹோட்டலை ஆரம்பிக்க உதவினவரே இவருதான்!" என்றார் கிளை மேலாளர்.

"ஓ! இப்ப ஞாபகம் வருது. நிறைய வருஷம் ஆச்சுல்ல. அதான் மூஞ்சி மறந்துடுச்சு" என்றான் மருது சாதாரணமாக. "அதான் கடனைத் திருப்பிக் கட்டிட்டேனே!" என்றான் உடனேயே

"நாங்க இங்க கடனைத் திருப்பிக் கேக்க வரல" என்றார் கிளை மேலாளர் சற்று எரிச்சலுடன். ஆனால் மருது அவர் பேசியதைக் கேட்கவில்லை. அவனிடம் வந்து ஏதோ சொல்ல முயன்ற ஹோட்டல் ஊழியர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வயதான ஊழியர் அவனிடம் பயந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த ஊழியர் பேசிக் கொண்டிருந்தபோதே, சற்றும் எதிர்பாராமல் மருது அவர் கன்னத்தில் அறைந்தான். "ஏண்டா, எண்ணெய் தீந்து போச்சுன்னு இப்ப வந்து சொல்ற? இதுக்குத்தான் உனக்கெல்லாம் தண்டச் சம்பளம் கொடுத்து வச்சிருக்கேனா? போடா. இப்பவே போய் வாங்கிட்டு வா. பத்து நிமிஷத்துல எண்ணெயோடு வரணும். இல்லேன்னா உன்னையே வடையாத் தட்டிடுவேன். ஓடு!" என்று அவர் கையில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திணித்தான்.

கிளை மேலாளருக்கு நான் சைகை காட்ட, நாங்கள் இருவரும் வெளியே வந்தோம்.

"நன்றி கெட்ட பய! கடன் கொடுத்து அவன் தொழில் தொடங்க உதவினவர்னு உங்ககிட்ட கொஞ்சம் கூட நன்றி இல்ல. ஹோட்டல் நடத்தறான். ஒப்புக்கு 'காப்பி சாப்பிடறீங்களா?'ன்னு கூடக் கேக்கல. அது ஏன்? நாம ரெண்டு பேரும் நின்னுக்கிட்டிருக்கோம். நம்மளை உக்காரக் கூடச் சொல்லல. அவன் உக்காந்தே பேசிக்கிட்டிருக்கான். சீட்டை விட்டு எழுந்திருக்கல. வணக்கம் கூடச் சொல்லல. நாகரிகம் இல்லாதவன்!" என்று பொரிந்து தள்ளினார் கிளை மேலாளர்.

"அவன் நம்மை மதிக்காதது, நாகரிகம் இல்லாம நடந்துக்கிட்டது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயம் இல்ல. அவன்கிட்ட வேலை செய்யற அந்த வயசானவரை மரியாதை இல்லாம பேசி, கன்னத்தில அறைஞ்சு... சே!"

"விடுங்க சார். இவங்கல்லாம் இப்படித்தான் இருப்பாங்க. இவனைப் பாக்க வந்தது நமக்கு டைம் வேஸ்ட்."

"நான் அவனைப் பாக்க வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு" என்றேன் நான்.

"என்ன காரணம் சார்?"

"இந்தப் பையன் மருது இந்த ஊர்ல ஒரு டீக்கடையில் வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். அப்ப இந்த ஊர்ல அந்த ஒரு டீக்கடைதான். வேற ஹோட்டலோ, டீக்கடையோ கிடையாது. அந்த முதலாளி இவனை ரொம்பக் கொடுமைப் படுத்துவான். கண்டபடி திட்டுவான், அடிப்பான். ஒரு தடவை இவன் கையில பாய்லரிலேந்து வெந்நீரை எடுத்து ஊத்திட்டான். இதையெல்லாம் பாத்து, இவன் மேல பரிதாபப்பட்டுத்தான் இவனை டீக்கடை ஆரம்பிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தி, கடன் கொடுத்தேன். ஆரம்பத்தில அவனுக்கு நம்பிக்கை இல்ல. பயந்தான். இந்த ஊர்ப் பெரிய மனுஷங்க ரெண்டு பேர் கிட்ட சொல்லி, அவங்களை விட்டு அவனுக்கு தைரியம் சொல்லச் சொன்னேன். நம்ப கஸ்டமர் ஒத்தர்கிட்ட சொல்லி, டீக்கடை ஆரம்பிக்க சின்னதா ஒரு இடத்தில் ஷெட் கட்டி அவனுக்குக் குறைஞ்ச வாடகைக்குக் கொடுக்க ஏற்பாடு செஞ்சேன்."

"அப்படியா?" என்றார் கிளை மேலாளர் வியப்புடன்.

"ஆமாம். 'அருள் தேநீர் விடுதின்னு பேர் வச்சது நான்தான். அவன் முதலாளிகிட்ட இல்லாத  அருள், கருணை மாதிரி குணங்கள் இவன்கிட்ட இருக்கணும்னு நெனைச்சுத்தான் அப்படிச் செஞ்சேன். ஆனா இன்னிக்கு அவன் அந்த ஊழியர்கிட்ட நடந்துக்கிட்டதைப் பாத்தப்ப இவன் தப்பான வழியில போறானேன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்படறேன். எனக்கு என்ன ஆச்சரியம்னா, இவன் தான் பட்ட கஷ்டங்களோட வலி எப்படி இருக்குங்கறதையே மறந்துட்டு மத்தவங்களுக்கு அதே மாதிரி கஷ்டத்தைக் கொடுக்கறதுதான்!" என்றேன் நான் ஏமாற்றத்துடன்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

பொருள்:  
அருள் இல்லாமல், தவறான செயல்களைச் செய்து வருபவர்கள், உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து விலகி, தாங்கள் பட்ட துன்பங்களையும் மறந்தவர்களாக இருப்பார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















2 comments:

  1. மருது மாதிரிதான் வாழ்வில் பல பேரை பார்த்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. கருத்தைப் பதிவிட்டதற்கு நன்றி.

      Delete