About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, August 5, 2018

193. ஹலோ டாக்டர்

அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், அவருடைய மருத்துவமனையில்  எப்போதுமே கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். 

குழந்தைகளுடன் இருந்த பெண்கள், முதியவர்கள், உடல் நலக் குறைவால் சோர்வடைந்திருந்தவர்கள் ஆகியோர் தவிப்புடன் அமர்ந்து தங்கள் முறைக்குக் காத்திருந்தனர்.

சுந்தரத்தின் முறை வந்தபோது அவர் உள்ளே போனார். அவர் டாக்டருக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவருக்கு இருந்த இலேசான காய்ச்சலுக்கு டாக்டர் ஒரு நிமிடத்துக்குள் மருந்து எழுதிக் கொடுத்து விட்டார்.

ஆனால் சுந்தரம் உடனே வெளியே செல்லவில்லை. டாக்டரிடம் வேறு சில விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார். அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடங்கலினால் மருத்துவமனைக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிக் கேட்டார். தங்கள் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருப்பதால் தங்களுக்குப் பிரச்னை இல்லை என்றார் டாக்டர்.

"நீங்க ஆஸ்பத்திரி நடத்தறீங்க. வருமானம் வருது. ஜெனரேட்டர் வாங்கி வச்சுக்கலாம். என்னைப் போல் குறைஞ்ச வருமானம் உள்ளவங்க என்ன செய்யறது?" என்றார் சுந்தரம்.

"கஷ்டம்தான்" என்றார் டாக்டர், கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி. 'ஏன், உங்க பிள்ளைங்கதான் நிறைய சம்பாதிக்கறாங்களே, நீங்க இன்வர்ட்டர் வாங்கி வச்சுக்கலாமே!' என்று அவர் கேட்க நினைத்தாலும், பேச்சை வளர்த்த விரும்பவில்லை.

பிறகு சுந்தரம் வேறு சில பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்த டாக்டர் "சார்! வெளியில நிறைய பேர் வெயிட் பண்றாங்க. நாம அப்புறம் பேசலாமே" என்றார்.

"ஆமாம், ஆமாம்" என்று சுந்தரம் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க யத்தனித்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. "நேத்து அம்மன் கோவில் வழியாப் போய்க்கிட்டிருந்தேன். திருவிழாவுக்கு நன்கொடை கொடுத்தவங்க பேரையெல்லாம் மைக்ல சொல்லிக்கிட்டிருந்தாங்க. நீங்க கூட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கீங்க போலிருக்கே!" என்றார் சுந்தரம்.

"ஆமாம்" என்று டாக்டர் மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

கோவில் திருவிழா ஏற்பாடுகளைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசி விட்டுத்தான் எழுந்தார் சுந்தரம். அறைக்கதவை அடையும் வரை பேசிக் கொண்டே சென்றவர், கதவைப் பாதி திறந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினார்.

அடுத்தாற்போல் உள்ளே செல்ல வேண்டியவர் எழுந்து வந்து அறைக்கதவருகே நின்றார். சுந்தரம் அவருக்கு வழி விடாமல் மேலும் ஓரிரு நிமிடங்கள் டாக்டரிடம் பேசி விட்டுத்தான் வெளியே போனார்.

வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் சுந்தரத்தைப் பார்த்து, "சார்! ஒரு நிமிஷம்" என்று அழைத்தான். அவர் அருகில் வந்துதும் அவரிடம், "ஏன் சார், இவ்வளவு பேர் உடம்பு சரியில்லாதவங்க, வயசானவங்க, பொம்பளைங்க, குழந்தைங்கன்னு இங்க மணிக்கணக்கா உக்காந்துக்கிட்டிருக்கோம். உங்களுக்கு முன்னால போனவங்கள்ளாம் ரெண்டு மூணு நிமிஷத்துல வெளியில வந்துட்டாங்க. நீங்க பத்துப் பதினைஞ்சு நிமிஷம் உள்ள உக்காந்து பேசிட்டு வந்திருக்கீங்க. உங்க உடம்பு கூட நல்லாத்தான் இருக்கு. நீங்க டாக்டர் கிட்ட அரட்டை அடிக்கறதுக்காக, இத்தனை பேரையும் இப்படிக் கஷ்டப்படுத்தியிருக்கீங்களே, இது நியாயமா?" என்றான்.

சுந்தரம் அவனை முறைத்து விட்டு வெளியேறினார்.

அவர் காத்திருந்தவர்களைக் கடந்து வெளியே சென்றபோது, டாக்டரைப் பார்க்கப் பொறுமையுடன், அசௌகரியத்தைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்களின் கண்கள் அவரைக் கோபத்துடன் பார்த்தன. சில குழந்தைகள் தங்கள் அழுகையால் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.

பொருள்:  
ஒருவன் பயனற்ற சொற்களைப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைக் காட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















2 comments: