About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, July 19, 2015

38. ரிஷிபத்தினி

"தன்மயி" என்று அழைத்தார் சத்வர்.

"வந்தேன் ஸ்வாமி."

"நான் யாகசாலைக்குக் கிளம்புகிறேன்."

"ஸ்வாமி, ஏதும் உண்ணாமல் நாள் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் யாகம், யோகம் என்று உடலை வருத்திக் கொள்கிறீர்கள். இரவில் கொஞ்சம் பச்சைக் காய்களை உண்டு விட்டுச் சற்று நேரம் உறங்குகிறீர்கள். தூண் போல் இருந்த உங்கள் உடம்பு துரும்பாக இளைத்து விட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது."

"உடலை வருத்தி யாகம் செய்தால்தானே உயர்நிலையை  அடைய முடியும்? நீ என் உடல் வாடுவதை உணர்வது போல் பகவானும் உணர்வார். அப்போது அவர் என் முன் தோன்றி எனக்கு அருள் புரிவார். அப்புறம் நான் சொர்க்கம் புகுவேன். நீயும் என்னுடன் வருவாய். நம் இருவரையும் இந்திரன் மாலை மரியாதைகளோடு வரவேற்பான்."

முனிவர் கிளம்பி விட்டார்.

தன்மயி சுறுசுறுப்பானாள். பானையில் இருந்த அரிசியைக் கொஞ்சம் எடுத்து அந்த மண் குடிலில் இருந்த பல பொந்துகளிலும் போட்டாள். எறும்புகள் சாப்பிடும். எலிகள் கூடச் சாப்பிடும். சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே!

உலையில் கொஞ்சம் அரிசி வைத்தாள். அரிசி களைந்த நீரைக் கொல்லைப்புறம் போய் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தொட்டியில் கொட்டினாள்.

சாதம் வடித்ததும், முதலில், வடித்த கஞ்சியை எடுத்துக் கன்றுக்கு வைத்தாள். பின்பு சாதத்தில் கொஞ்சம் எடுத்துப் பின்புறம் ஒரு மேடையில் காக்கைக்காக வைத்தாள்.

சாதப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது அவளை எதிர்பார்த்து ஒரு பூனையும், நாயும் காத்திருந்தன. இரண்டுக்கும் தனித் தனியாக இரண்டு இடங்களில் தரையில் சாதத்தை வைத்தாள். அவை அதை ஆவலோடு உண்ணத் தொடங்கின.

காலியான பாத்திரத்தை, கழுவும் தொட்டியில் வைத்து விட்டு வெளியே வந்தாள். கணவர் சாப்பிட மாட்டார் என்பதால் அவளும் சாப்பிடுவதில்லை. சாதம் வடித்ததே காக்கைக்கும், பூனைக்கும், நாய்க்கும்தான்!

வாசலில், பக்கத்தில் இருந்த குடில்களிலிருந்து சில பெண்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். தன்மயி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையை அசைத்தாள். அவர்கள் அவளுக்கு சைகை மூலம் நன்றி தெரிவித்து விட்டுத் தோட்டத்தில் விளைந்திருந்த காய்கனிகளைப் பறித்துக் கொண்டார்கள்.

தன்மயிக்கும் முனிவருக்கும் எந்தக் காய்கள் எவ்வளவு வேண்டும் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியும். அவற்றை மட்டும் விட்டு விட்டு மீதமிருப்பவற்றிலிருந்து தங்கள் வீட்டுத் தேவைக்கான காய்கனிகளைப் பறித்துக் கொள்வார்கள்!

மாமரக் கிளை ஒன்றிலிருந்து ஒரு பழத்தைக் கடித்துக் கொண்டிருந்த அணில் ஒன்று அவளைப் பார்த்து விட்டுத் தன் வாலை வேகமாக மரக்கிளையின் மீது அடித்தது.

தன்மயி உள்ளே  வந்தாள். பூஜையறையில் அமர்ந்து ஸ்தோத்திரங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

"தன்மயி!"

தன்மயி திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள். முனிவர் அதற்குள் திரும்பியிருக்க மாட்டார். அதுவும் இது அவர் குரல் இல்லையே! வேறு யார் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடப் போகிறார்கள்? பிரமையாக இருக்குமோ?

"தன்மயி!"

குரல் முன் பக்கத்திலிருந்தல்லவா வருகிறது? தன்மயி தன் முன்பிருந்த கடவுள் படத்தைப் பார்த்தாள். பத்ரி நாராயணரின் உருவப் படத்தில் சிறிய அசைவு தெரிந்தது. மின்னல் போல் ஒரு ஒளிக்கீற்றும் தோன்றி மறைந்தது .

'பத்ரி நாராயணரா பேசுகிறார்?'

"ஆமாம்" என்றது பத்ரி நாராயணரின் திருவுருவப் படம், அவள் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பதுபோல்!

"பத்ரி நாராயணா!" என்றாள் தன்மயி, நம்ப முடியாமல். "அங்கே என் கணவர் உங்கள் தரிசனத்துக்காக யாகம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் முன் தோன்றுகிறீர்களே!"

"நீ செய்வதும் யாகம்தான். நீ வாழும் அற வாழ்க்கையே ஒரு யாகம்தான். உன் கணவருக்கான கடமைகளைச் செய்கிறாய். நீ சாப்பிடாமல் இருந்தாலும் உணவு சமைத்துப் பிற உயிர்களுக்கு வழங்குகிறாய். உன் தோட்டத்தில் விளையும் காய்கனிகளை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறாய். நாள் தவறாமல் நீ செய்யும் அறம் நீ கேட்காமலேயே பெரும் பயனை உனக்கு வழங்கும்."

"எனக்கென்று எதுவும் வேண்டாம் நாராயணா! எல்லாப் பிறவிகளிலும் நான் என் கணவரோடு இணைந்து இருக்க வேண்டும். அவ்வளவுதான் நான் வேண்டுவது."

"அது மட்டும் நடக்காது, தன்மயி!"

"ஏன் பரந்தாமா?"

"நீ தினமும் தொடர்ந்து செய்து வந்த அறத்தின் பயனாக இனி உனக்குப் பிறவி கிடையாது."

"என் கணவருக்கு?"

"அவன் தேவலோகத்தையல்லவா வேண்டுகிறான்? அவன் விருப்பப்படி அவனுக்கு தேவலோகம் கிடைக்கும். அங்கே சிறிது காலம் உல்லாசமாக வாழ்ந்து விட்டு அவன் கர்மங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்க வேண்டியதுதான்."

"அவருக்கும் பிறவி இல்லாமல் செய்ய முடியாதா?"

"அவன் விரும்புவதைத்தானே நான் கொடுக்க முடியும்?"

"நான் அவருடனேயே இருக்க விரும்பினால்?"

"அது இந்தப் பிறவியில் மட்டும்தான் சாத்தியம். உனக்கு மறுபிறவி இல்லை. உன் கணவனுக்கு மறுபிறவி உண்டு. அதனால் உங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும். இது குறித்து நீ வருந்தத் தேவையில்லை இந்தப் பாசம், பிணைப்பு இதெல்லாம் இந்தப் பிறவியில் மட்டும்தான் உனக்கு இருக்கும். உன் கடமைகளை நீ தொடர்ந்து செய்து வா."

தான் கண்ணைத் திறந்து கொண்டே கனவு கண்டோமா, அல்லது களைப்பால் கணநேரம் உறங்கிப் போய் அதில் கனவு வந்ததா என்று தன்மயியால் தீர்மானிக்க முடியவில்லை.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


பொருள்:
ஒருவன் நாள் தவறாமல் அறச்செயல்களைச் செய்து வந்தால் அச்செயல்கள் அவனுக்கு மறு பிறவி இல்லாமல் செய்யும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Saint's Spouse'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


























Saturday, July 18, 2015

37. பல்லக்குத் தூக்கிகள்!

"டிரைவர்! எங்கே போயிட்டே? கார் ரெடியா?"

"ரெடிம்மா. எங்கே போகணும்?"

"பியூட்டி பார்லருக்கு."

"போகலாம்மா."

ரம்யா பியூட்டி பார்லரில் இருந்த இரண்டு மணி நேரமும் டிரைவர் பாஸ்கர் சற்று நேரம் காரில் உட்கார்ந்து தினத்தந்தி படித்தும், சற்று நேரம் தூங்கியும், வெளியே சற்று உலாவியும், ஒரு சிங்கிள் டீ, இரண்டு சிகரெட் குடித்தும் பொழுதைக் கழித்தான்.

ஒரு வழியாக ஒப்பனைகள் முடிந்து ரம்யா வந்து காரில் ஏறினாள். சில ஆயிரம் ரூபாய்கள் செலவழித்திருப்பாள் என்று தோன்றியது.

"வீட்டுக்குத்தானே?"

"இல்லை. என் ஃபிரண்ட் காவ்யா வீட்டுக்குப் போ!" என்று உத்தரவிட்டாள் ரம்யா. 'ஒப்பனை செய்து கொண்ட முக லட்சணத்தைத் தோழியிடம் காட்ட வேண்டுமாக்கும்!' பாஸ்கர் எரிச்சலுடன் காரைக் கிளப்பினான்.

சென்ற மாதம் வரை பாஸ்கர் பிரதீப்புக்குத்தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தான். இந்த மாதத்திலிருந்து பிரதீப்பின்  நிறுவனத்தில் அவனுக்கென்று தனியே ஒரு காரும் அதை ஓட்ட கம்பெனி செலவில் ஒரு டிரைவரும் கொடுத்து விட்டார்கள்.

அதிலிருந்து பாஸ்கர் பிரதீப்பின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கார் ஓட்ட வேண்டியதாகி விட்டது. குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பரமும், அதிகாரமும் பாஸ்கருக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வீட்டு நாயைக் காரில் அழைத்துச் செல்ல வேண்டிய கொடுமை!

அன்று இரவு அவன் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய  போது ரம்யா அவனிடம், "பாஸ்கர்! நாளைக்குக் காலையில் பொம்மிக்கு வெடெர்னரி டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது. சீக்கிரமே வந்து விடு" என்றாள்.

அவன் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்ல அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. பொம்மி என்ற நாயை மாதாந்தர மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அவன் சீக்கிரமே வேலைக்கு வர வேண்டுமாம்! கொடுமை இல்லையா இது?

வீட்டுக்குப் போனபோது மனைவி மிகவும் உற்சாகமாக இருந்தாள்.

"என்ன விஷயம். இவ்வளவு சந்தோஷமா இருக்கே?"

"கோவிலுக்குப் போயிருந்தேன்."

"எப்பவும் போறதுதானே?"

"இன்னிக்குக் கோவில்ல ஒத்தரு கதை சொன்னாரு. அதைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்ன சொன்னாரு அப்படி?"

"பாவ புண்ணியங்களைப் பத்திப் பேசினாரு. சில பேரு வசதியா வாழறதுக்கும் சில பேரு கஷ்டப் படறதுக்கும் அவங்க போன ஜென்மத்திலியேயும் இந்த ஜென்மத்திலேயும் செஞ்ச நல்லது கெட்டதுதான் காரணமாம். சில பேரு ரொம்ப அதிர்ஷ்டசாலிகளா இருக்காங்கன்னா அவங்க போன ஜென்மத்தில செஞ்ச நல்ல காரியங்கள்தான் காரணமாம். அது மாதிரி சில பேரு கஷ்டப்படறதுக்குக் காரணம் அவங்க போன ஜென்மத்தில செஞ்ச தீவினைகள்தான் காரணமாம்" என்றாள் மனைவி.

"அப்படீன்னா நாமெல்லாம் போன ஜென்மத்தில பாவம் பண்ணி இருக்கமா?" என்றான் பாஸ்கர் எரிச்சலுடன்.

"நாம என்ன அந்த அளவுக்குக் கஷ்டப்படறமா என்ன?" என்றாள் மனைவி.

'ஆனா பொம்மி மட்டும் போன ஜென்மத்தில நெறையப் புண்ணியம் பண்ணி இருக்கணும்!' என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


பொருள்:
அறம் செய்வதால் என்ன பலன் விளையும் என்று எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. பல்லக்கில் உட்கார்ந்து போகிறவனையும், அதைத் தூக்கிச் செல்பவனையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Palnquin Bearers' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











Friday, July 17, 2015

36. இன்றே செய்க!

நாகராஜனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. ஆசை என்பது பொருத்தமான வார்த்தை இல்லை. ஆனால் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நாகராஜன், 'எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை' என்றுதான் சொல்வார்.

தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. தன்னுடைய கல்வியறிவு, பண்பாடு, முன்னேற்றம் இவற்றுக்கெல்லாம் தான் படித்த பள்ளிதான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்ற நன்றி உணர்வு அவருக்கு எப்போதுமே உண்டு. அந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாகப் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போனபோது, தான் படித்த பள்ளிக்குச் சென்றார். அப்போது அங்கே தலைமையாசிரியராக இருந்தவரைச் சந்தித்துத் தன்னை ஒரு பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது தலைமையாசிரியர்  ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அந்தப் பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் கிடையாது. ஆனால் பதினொன்றாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் கல்விக் கட்டணம் உண்டு.

மிகக் குறைந்த கட்டணம்தான் என்றாலும் அங்கே பத்தாவது வரை படித்த மாணவர்கள் பலருக்கு அந்தக் கட்டணத்தைக் கூடக் கட்டிப் படிக்கும் வசதி இல்லை என்பதால் பலர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுவதாகச் சொன்ன தலைமை ஆசிரியர், அவரைப் போன்ற பழைய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அளித்தால், அதை வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் போட்டு அதிலிருந்து வரும் வட்டி மூலம் சில ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அதிலிருந்து பெறலாம் என்றார். தன்னால் முடிந்ததைச் செய்வதாகச் சொல்லி விட்டு நாகராஜன் ஊர் திரும்பினார்.

தான் தொடர்பு வைத்திருந்த பள்ளித் தோழர்களை அணுகி இது பற்றிப் பேசினார். அவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தன் சொந்த முயற்சியில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார். அவரது பொருளாதார நிலை ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தே இருந்தார். மாதாமாதம் ஒரு சிறு தொகை சேமித்துப் பார்த்தார். அது போதாது என்று தெரிந்தது.

இந்நிலையில் அவரது ஒரே மகனின் படிப்பு முடிந்து அவனுக்கு மிக நல்ல வேலை கிடைத்தது. சில மாதங்கள் கழித்து, வேலையில் அவன் நிலைபெற்ற பிறகு அவனிடம் தன் ஆசையைச் சொன்னார்.

"அப்பா! நான் இப்பதான் வேலையில் சேர்ந்திருக்கேன். என்னால இப்ப எதுவும் செய்ய முடியாதே!" என்றான் அவன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். நீ இப்ப உன் சொந்தக் கால்ல நிக்கறே. நான் ரிடையர் ஆனதும் வரும் பி.எஃப் பணம் எனக்கும் உன் அம்மாவுக்கும் போதும். இதைத் தவிர, நான் வாலண்டரி பி.எஃப்ல கொஞ்சம் பணம் போட்டுட்டு வந்திருக்கேன். அதில ஒரு அஞ்சு லட்ச ரூபாய் வரும். அதை நான் என் பள்ளிக்கூடத்துக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுல உனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" என்றார் அவர்.

"அப்பா. அது உங்க சேமிப்பு. நீங்க எப்படி வேணும்னா பயன்படுத்திக்கங்க. உங்க சேமிப்புப் பணம் எதையும் நான் எதிர்பார்க்கலே! காலம் முழுக்க உங்களைப் பாத்துக்கறது என்னோட பொறுப்பு" என்றான் மகன்.

"எதையும் நல்லா யோசனை பண்ணிச் செய்யுங்க!" என்றாள் அவர் மனைவி.

நாகராஜன் அலுவலகத்தில் பேசித் தனது வி.பி.எஃப் சேமிப்பில் இருந்த ஐந்து லட்சத்து சொச்சத்தைப் பெற்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னபோது அவர் மகிழ்ந்து, அன்றைய கட்டணங்களின் அடிப்படையில் ஐந்து லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பில் போட்டால், அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து நான்கு மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்த முடியும் என்றார். அடுத்த நாள் பாங்க்கில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து அனுப்புவதாகச் சொன்னார் நாகராஜன் .

அன்று இரவு நாகராஜனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் நினைவு திரும்பியதும், நாகராஜன் மகனிடம் முதலில் கேட்டது பாங்க் டிராஃப்ட் எடுப்பதைப் பற்றித்தான்.

"அதற்கென்ன அப்பா? நீங்கள் குணமாகி வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான் அவர் மகன்.

"நல்ல காரியங்களைத்  தள்ளிப் போடக் கூடாது. நான் ஏற்கெனவே ரொம்ப டிலே பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நான் செக்குல கையெழுத்துப் போடறேன். நீ பாங்க்கில போய் டிடி வாங்கி இன்னைக்கே கூரியர்ல அனுப்பிடு!" என்றார் .

"சரி."

டிடி எடுத்து அதைப் பள்ளிக்கு கூரியரில் அனுப்பி விட்டதாக அன்று பிற்பகல் அவரிடம் சொன்னான் அவர் மகன். அதைக் கேட்டதுமே அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. உடல் நிலை சரியாகி விட்டது போல் இருந்தது.

அன்று இரவு நாகராஜன் மருத்துவமனையில் இறந்து போனார்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நற்செயல்களைச் செய்ய வேண்டும். ஒருவர் மறைந்த பிறகு கூட, அவர் செய்த நற்செயல்கள் அவருக்கு அழியாத புகழைத் தரும்.

Read 'Do it Today' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Thursday, July 16, 2015

35. துறவியின் முடிவு

ஆத்மானந்தா தனது மூத்த சீடர்களான அருளானந்தா, அன்பானந்தா ஆகிய இருவரையும் தனியே அழைத்தார்.

"எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிறகு இந்த மடத்துக்குத் தலைமை தாங்கி நமது ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய, பொருத்தமான ஒரு நபரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மடத்தில் இருக்கும் துறவிகளுக்குள் நீங்கள் இருவரும்தான் மூத்தவர்கள். அதனால்தான், உங்களிடம் இதை முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களை அழைத்தேன். எனக்குப் பிறகு இந்தப் பீடத்தின் தலைமைப் பதவிக்குப் பரமானந்தாவை நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

இருவருமே பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.
அன்று இரவு, ஆத்மானந்தரை அன்பானந்தா தனியாகச் சந்தித்தார். "ஸ்வாமி, உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

"சொல், அன்பானந்தா!"

"நீங்கள் என்னுடைய குரு. உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன். ஆயினும், உங்களுக்கு வாரிசாக, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவனான என்னை நியமிக்காமல், எனக்குப் பின்னால் இந்த மடத்தில் சேர்ந்த பரமானந்தரை நியமித்தது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"அன்பானந்தா, வயது, அனுபவம் இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுப்புகளைக் கொடுப்பதற்கு, இது அரசாங்க அலுவலகம் இல்லை. என் முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி விட்டு ஏன் இப்படிக் கேட்கிறாய்?"

"என்னிடம் என்ன குறை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான்."

" 'பரமானந்தரிடம் என்ன விசேஷத் தகுதி இருக்கிறது?' என்று கேட்காமல், 'என்னிடம் என்ன குறை?' என்று நீ கேட்பதிலிருந்து, உன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நீ நினைக்கிறாய் என்று தெரிகிறது. உன்னிடம் இருக்கும் முதல் குறை ஆசை."

"முதல் குறையா? அப்படியானால், என்னிடம் நிறையக் குறைகள் இருக்கின்றனவா?"

"பார்த்தாயா? உன்னிடம் பல குறைகள் இருப்பதாக நீயே நம்புகிறாய்! இரண்டு குறைகள் இருந்தால் கூட, முதல், இரண்டாவது  என்று சொல்லலாமே! சரி. ஆசை என்ற இந்தக் குறை உன்னிடம் இருப்பதை நீ ஒப்புக் கொள்கிறாயா?"

"நான் ஆசை உள்ளவன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இந்த மடத்தின் தலைவர் என்ற பதவி உனக்கு வேண்டும் என்ற ஆசையினால்தானே என்னிடம் வந்திருக்கிறாய்?"

"சரி. வேறு என்ன குறைகள் கண்டீர்கள் என்னிடம்?"

"உனக்கு இந்தப் பதவியின் மீது ஆசை. அது உனக்குக் கிடைக்காமல், பரமானந்தனுக்குக் கிடைக்கப் போகிறது என்பதால், அவன் மீது பொறாமை!"

"இதவும் உங்கள் ஊகம்தானே?"

"ஒருவரின் பேச்சு, செயல்கள் இவற்றிலிருந்து, அவரது மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்கலாமே! நீயும் ,அருளானந்தனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இந்த மடத்தில் சேர்ந்தவர்கள். அருளானந்தனுக்கு ஏன் இந்தப் பதவியைக் கொடுக்கவில்லை என்று நீ கேட்கவில்லை. உனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கூடக் கேட்கவில்லை! பரமானந்தனுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்றுதானே கேட்கிறாய்? அதனால்தான், பொறாமை என்று சொன்னேன்."

அன்பானந்தா மௌனமாக இருந்தார்.

"அன்பானந்தா, உன்னிடம் குற்றம் காண்பதற்காக நான் இவற்றைச் சொல்லவில்லை. இந்தக் குறைகள் உன்னிடம் சமீபத்தில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன. நான் என் வாரிசாக யாரை நியமிக்கப் போகிறேன் என்று சொல்வதற்கு முன், உன் மனதில் இந்த ஆசை இல்லாமல் கூட இருந்திருக்கலாம். உன்னிடம் இந்த இரண்டு குறைகளுடன் தொடர்புடைய இன்னும் இரண்டு குறைகள் இல்லை. அது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்."

"அவை என்ன குறைகள், குருவே?"

"தான் விரும்பியது கிடைக்கவில்லை என்றால், ஒரு மனிதனுக்குக் கோபம் வரும். கோபத்தினால், பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்களைச் செய்வான். நீ அமைதியாக இருப்பது உனக்குக் கோபம் இல்லை என்று காட்டுகிறது. நான் உன்னிடம் குறைகள் இருப்பதாகச் சொன்னபோது, உனக்கு வருத்தம் ஏற்பட்டதே தவிரக் கோபம் வரவில்லை. நீ துறவு நிலையில் நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஆசை ஏற்பட்டால், அதிலிருந்து பொறாமை, கோபம், கோபத்தினால் பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்றவை தொடரும். அதனால், நீ ஆசையைக் கைவிட வேண்டும். துறவியான உனக்குப் பற்றற்று இருப்பது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை."

"நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், குருவே! என் குறையை நான் உணர்கிறேன். பரமானந்தருக்கு நீங்கள் தலைமைப் பதவி கொடுப்பது பற்றி எனக்கு வருத்தம் இல்லை" என்று எழுந்தார் அன்பானந்தா.

"கொஞ்சம் இரு, அன்பானந்தா. நீ இவ்வளவு சீக்கிரம் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு உன்னை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் பரமானந்தருக்குத் தலைமைப் பொறுப்பை அளிக்கப் போவதில்லை."

"அருளானந்தருக்கு அளிக்கப் போகிறீர்களா? அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான்."

"உன்னுடைய மனமுதிர்ச்சியைப பாராட்டுகிறேன். பரமானந்தருக்கு இந்தப் பதவி இல்லை என்றதும், 'ஒருவேள எனக்குக் கிடைக்குமோ?' என்று ஒரு கணம் கூட நினைக்காமல், அருளானந்தரின் பெயரைச் சொல்கிறாயே!"

"இல்லை, குருவே. நீங்கள் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தாலும், நான் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆசையை அடக்குவதில், நான் இன்னும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்."

"நீயும் அருளானந்தனும் நல்ல சீடர்கள்தான். உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் தலைமைப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும். பரமானந்தனுக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்னால், அதை நீங்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று பார்க்கத்தான் அப்படிச்  சொன்னேன். அருளானந்தன் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. என் முடிவை அமைதியாக ஏற்றுக்கொண்டு விட்டான். அதனால், அருளானந்தனுக்குத்தான் இந்தப் பதவியைக் கொடுக்கப் போகிறேன். சிறிது காலம் கழித்து, உன்னை நமது மடத்தின் இன்னொரு கிளைக்குத் தலைவராக அனுப்பி விடுகிறேன்."

"நன்றி, குருவே. ஆனால், அருளானந்தரின் கீழ் பணி புரிய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது என்னை இன்னும் பக்குவப்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் அவருக்கு உதவியாக, அவர் விரும்பும் வரை, இங்கேயே பணி புரிகிறேன்" என்றார் அன்பானந்தா.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.


பொருள்:
பொறாமை, ஆசை, கோபம், பிறர் மனம் புண்படப் பேசுதல் ஆகிய நான்குக்கும் இடம் கொடுக்காமல் நடந்து  கொள்வதே அறம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



Read 'The Monk's Decision' the English version of this story.
குறள் 36
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Wednesday, July 15, 2015

34. படிப்பது ராமாயணம்!

அன்னதானம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. ராமலிங்கத்துக்குப் பெருமை தாங்கவில்லை.

"இந்த ஊர்ல உங்களை விட்டா இது மாதிரி நல்ல காரியங்கள் செய்ய வேறு யார் இருக்காங்க?" என்றார் கோவில் பூசாரி.

"பணம் சம்பாதிக்கிறதே அதை நல்ல வழியில் செலவழிக்கணும் என்கிறதுக்காகத்தானே? ஆத்தா குடுக்கறா. அதில கொஞ்சம் எடுத்து நான் மத்தவங்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!"

பெருமையுடன் பக்கத்தில் நின்ற மனைவியைப் பார்த்தார்.

"எல்லாரும் என்னை அன்னபூரணின்னு சொன்னதைக் கேக்க ரொம்பப் பெருமையா இருந்ததுங்க!" என்றாள் மரகதம்.

"பாத்தியா பூசாரி? காசு செலவழிச்சு எல்லா ஏற்பாடும் பண்ணி அன்னதானத்தை நடத்தினது நான். ஆனா, பளபளன்னு ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்து பத்து நிமிஷம் என் பக்கத்தில நின்னு வேடிக்கை பாத்துட்டு, எங்க வீட்டு அம்மா அன்னபூரணினு பேரை வாங்கிட்டுப் போயிடறாங்க!" 

"அப்ப, நான் ஒண்ணுமே பண்ணலையாக்கும்?" என்று பொய்க் கோபத்துடன் அங்கிருந்து விலகிச் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டாள் 'அன்னபூரணி. 'பூசாரியும் ஒரு  கும்பிடு போட்டு விட்டு, விடை பெற்றுக் கொண்டார்.

இதற்காகவே காத்திருந்தது போல், எங்கிருந்தோ விரைந்து அவர் அருகில் வந்து நின்றான் அவரது ஆள் வெள்ளையன்.

"என்னடா வெள்ளையா, எங்கே போயிட்டே? அன்னதானத்தின்போது உன்னைக் காணுமே? பண்ணையிலே ஏதாவது பிரச்னையா?" என்று விசாரித்தார் ராமலிங்கம். 

"பண்ணையிலே இல்லை, ஐயா" என்று ஆரம்பித்தவன், குரலைத் தாழ்த்திக் கொண்டு, "ஏங்க, பண்ணை வீட்டுக்கு யாரையாவது வரச் சொல்லியிருந்தீர்களா?" என்றான்.

"இல்லையே!" என்ற ராமலிங்கம், சட்டென்று நினைவு வந்தவராகக் கையைச் சொடக்கிக் கொண்டார். "ஐயையோ! அன்னதானத் தேதி ஞாபகம் இல்லாம, இன்னைக்கு அந்தப் பிரமீளாவை வரச் சொல்லியிருந்தேனே! வந்திருந்தாளா?"

"ஆமாங்க. நீங்க வர மாட்டீங்கன்னு நான் சொல்லியும், அந்தப் பொம்பளை போகாம ரெண்டு மணி நேரம் உக்காந்துட்டுத்தான் போச்சு. 'அவரு வந்தாலும் வராட்டாலும், நான் ஒப்புக் கொண்ட நேரத்துக்கு இருந்துட்டுத்தான் போகணும்'னு சொல்லுது."

"இதைச் சொல்லி, வேலை செய்யாமலேயே எங்கிட்ட பணம் வாங்கிடணும்னு பாக்கறா போலிருக்கு. ஆனா, நான் பணம் கொடுத்துத்தான் ஆகணும். இல்லாட்டா, மார்க்கெட்டுல என் பேரைக் கெடுத்துடுவா!" என்று சிரித்தார் ராமலிங்கம். "ஆகக்கூடி, உன்னை அன்னதானத்துக்கு வர முடியாம, அவளுக்குக் காவலா அங்கேயே உக்காரும்படி பண்ணிட்டா! சரி. சாப்பாடு மீதி இருக்கும். நீ உள்ள போய்ச் சாப்பிடு" என்றார்.

வெள்ளையன் உள்ளே போகத் திரும்பிய உடனேயே, அருகில் யாரோ தொண்டையைச் செருமுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார்.

மரகதம்! 

சற்று தூரத்தில் தள்ளி நின்றிருந்த இவள் எப்போது இங்கே வந்தாள்? தான் வெள்ளையனுடன் பேசியதைக் கேட்டிருப்பாளோ?

அவள் முகத்தைப் பார்த்தார். அவளுடைய முகக்குறிப்பிலிருந்து எதுவும் தெரியவில்லை. அவளாகக் கேட்டாலே ஒழிய இதைப்பற்றி அவளிடம் கேட்கக் கூடாது. இனிமேல் யாரிடமாவது பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.

மரகதம் இரண்டு மூன்று முறை தொண்டையைச் செருமி விட்டு, நெஞ்சிலிருந்த கோழையை வாய்க்குக் கொண்டு வந்து மணல் தரையில் காறித் துப்பினாள்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற


பொருள்:
மனதில் எந்தத் தவறான எண்ணங்களும் இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம். மற்றவை, ஆரவாரத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.




Read 'Ramalingam's Pride' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Tuesday, July 14, 2015

33. இங்கே இப்படித்தான்!

"இப்பல்லாம் அரசாங்க வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்புன்னு ஆயிடுச்சு. சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி உனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். நம்பள மாதிரி சாதாரணக் குடும்பங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய அதிர்ஷ்டம். நல்லபடியா, பார்த்து நடந்துக்க" என்று அருணின் தந்தை அவனுக்கு புத்தி சொல்லி அவனை வேலைக்கு அனுப்பி வைத்தார்.

அவன் அம்மா அவனைத் தனியாகக் கூப்பிட்டு, "டேய் அருண்! நீதி, நேர்மைன்னு சொல்லி உங்கப்பா தன்னோட வாழ்க்கையை வீணடிச்சுட்டாரு. நீயாவது புத்திசாலித்தனமா நடந்துக்க!" என்று அறிவுரை செய்து அனுப்பினாள்!

அலுவலகத்துக்குச் சென்று வேலை உத்தரவைக் காட்டி அருண் வேலையில் சேர்ந்தான். அவனை ஒரு இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

பக்கத்து சீட்டில் இருந்த நடராஜன் நடுத்தர வயதுக்காரர். ஆனால் அருணிடம் மிகவும் நட்பாகப் பழகினார். "பொதுவா பல அரசு அலுவலகங்கள்ள எல்லா ஊழியர்களும் உட்கார இடம் இருக்காது. உன்னை மாதிரிப் புதுசா வேலைக்குச் சேர்கிறவர்களுக்கு நிரந்தர சீட் கிடைக்க ரெண்டு மூணு வருஷம் கூட ஆகும். அது வரையில் மியூஸிகல் சேர் மாதிரி யாராவது லீவில போறவங்க சீட்டில மாத்தி மாத்தி உட்கார வேண்டியதுதான். ஆனா நம்ம ஆஃபீஸ் அப்படி இல்லை. அந்த விதத்தில நீ அதிர்ஷ்டக்காரன்தான்!" என்றார்.

ஒரு வாரம் வரை அருணுக்கு என்ன வேலை, யார் மேலதிகாரி என்றே தெரியவில்லை. பிறகு ஒருநாள் ஒரு அதிகாரி அவனைத் தன் அறைக்கு அழைத்து அவன் தன் இலாகாவில்தான் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவன் அவர் அறையில் இருந்தபோது அங்கே வந்த பியூனிடம், "செல்வம். இவரு என்னோட செக்‌ஷன்லதான் வேலை செய்யப் போறாரு. பாத்துக்க" என்றார்.

அதற்குப் பிறகும் அவனுக்கு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் மாலையில் ஒரு அதிசயம் நடந்தது. பியூன் செல்வம் கையில் ஒரு பட்டியலுடனும் சில ரூபாய் நோட்டுக்களுடனும் வந்து, பட்டியலைப் பார்த்து விட்டு அவன் கையில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான்.

"என்னங்க இது?" என்றான் அருண்.

"அதான் ரகு சார் சொன்னாரே, நீங்க அவரு செக்‌ஷன்ல வேலை செய்யப் போறதா?"

"அதுக்கு?"

"நான் போய் மீதிப் பேருக்கெல்லாம் பட்டுவாடா பண்ணணும். சார்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க" என்று சொல்லி நடராஜனைக் கை காட்டி விட்டு செல்வம் போய் விட்டான்.

"என்ன சார் இது?" என்றான் அருண் நடராஜனிடம்.

"இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா? அதுதான் பூஜை பண்ணிப் பிரசாதம் கொடுத்துட்டுப் போறாரு!" என்றார் நடராஜன், சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் சில நோட்டுக்கள் இருந்தன.

"பூஜையா?"

"தம்பி. இந்த ஆஃபீஸ்ல என்ன வேலை செய்யறோம்னு உனக்குத் தெரியும்ல? தினமும் நூறு இருநூறு பேரு வந்துட்டுப் போற ஆஃபீஸ் இது. டெய்லி கலெக்‌ஷனைச் சேர்த்து வச்சு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லோருக்கும் விநியோகம் பண்ணுவாங்க. அதைத்தான் பிரசாதம்னு சொன்னேன். யாருக்கு எவ்வளவுங்கறதுக்கெல்லாம் கணக்கு இருக்கு! அதிகாரிகளுக்கு நிறைய வரும். நீ புதுசுங்கறதினால உனக்குக் கம்மியாதான் வரும்."

"என்ன சார் நடக்குது இங்கே? இவ்வளவு வெளிப்படையாவா?"

"நமக்குள்ளதானப்பா?"

"நான் இன்னும் வேலை செய்யவே ஆரம்பிக்கலியே?"

"அதைப் பத்தி என்ன? உனக்குத்தான் செக்‌ஷன் அலாட்  பண்ணிட்டாங்களே! உனக்கும் பங்கு கொடுக்கச் சொல்லி உன்னோட ஆஃபீஸர் சொல்லி இருப்பாரு!"

"ஓ! நான் அவர் ரூம்ல இருந்த போது இந்த செல்வத்துக்கிட்ட என்னைப் பத்திச் சொன்னாரு. இதுக்குத்தானா அது?"

அப்போது செல்வம் திரும்பவும் அங்கே வந்தான்.

அருண் அவரை அழைத்தான். "செல்வம் அண்ணே! இங்கே வரீங்களா?"

"என்ன? கம்மியா இருக்கா? அதையெல்லாம் உங்க ஆஃபீஸர் கிட்ட கேட்டுக்கங்க!"

"அதில்லை. எனக்கு இந்தப் பணம் வேண்டாம். இன்னிக்கு மட்டும் இல்ல, என்னிக்குமே வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.

"அவசரப்படாதே தம்பி" என்றார் நடராஜன். "இந்த ஆஃபீஸில பணம் இல்லாம எதுவுமே நடக்காது. இங்கே யாரும் பணம் வாங்காமயும் இருக்க முடியாது. மற்ற இடங்கள்ள நேர்மையா இருந்தவங்கள்ளாம் இந்த ஆஃபீஸுக்கு வந்த பிறகு மாறி இருக்காங்க. நான் கூட அப்படித்தான். உனக்கென்ன கஷ்டம்? நீ யார்கிட்டேயும் பணம் கேட்கப் போறதில்லே! யாரோ வசூல் பண்ணி உனக்கு ஒரு பங்கு வச்சுக்கன்னு உன் சீட்டுக்கு வந்து கொடுக்கறாங்க!"

"இல்லை சார். எந்த இடத்தில இருந்தாலும் என்னோட இயல்புப்படி நேர்மையாத்தான் இருப்பேன். இது என் அப்பா எனக்குச் சொல்லித் தந்தது" என்றான் அருண்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.


பொருள்:
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் செய்யும்  செயல்கள் அறச் செயல்களாகவே இருக்க வேண்டும். ('இந்த இடத்தில் இதெல்லாம் சரியாக வராது' என்று காரணம் சொல்லி, அறத்திலிருந்து வழுவக் கூடாது.)


இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.



Read 'Arun Gets a Job' the English version of this story.
குறள் 34
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Monday, July 13, 2015

32. கைக்கு எட்டியது...

"டேய் மச்சி, கொஸ்ச்சின் பேப்பர் லீக் ஆயிடுச்சுடுடா!" என்று குதித்துக் கொண்டே வந்தான் சதீஷ்.

"என்னடா சொல்றே?" என்றான் அரவிந்த்.

"ஆமாண்டா. ரொம்ப சீக்ரட். அம்பது பேருக்குத்தான் லீக் ஆன பேப்பர் கெடச்சுருக்கு -  இன்க்ளூடிங் மீ!".

"எப்படிடா? கவர்ன்மென்ட் சும்மா இருக்காதே!"

"நாளைக்குப் பரீட்சை. அவங்களுக்கு இன்னும் விஷயமே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கி இருக்கேன். நீ ஐநூறு ரூபா கொடுத்துடு."

"டேய் இதெல்லாம் வேண்டாண்டா! நாமதான் நல்லாப் படிச்சுக்கிட்டிருக்கோமே! இந்தக் குறுக்கு வழி எல்லாம் எதுக்கு?"

"உனக்குப் பணம் கொடுக்க இஷ்டம் இல்லேன்னா விட்டுடு. பேப்பரை உனக்கும் காட்டறேன். ஜிராக்ஸ் எடுக்க வேண்டாம். ரிஸ்க்."

"டேய்! நான் பணத்துக்காகச் சொல்லல்லே! இது மாதிரி குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்னு உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். ஒரு வேளை இந்த லீக் ஆன பேப்பரே போலியா இருந்தா? அல்லது பரீட்சையில் வேறே பேப்பர் வந்தா?"

"அதெல்லாம் வராது. இதுதான் வரப் போவுது. இதுக்கு மட்டும் ப்ரிபேர் பண்ணினா போதும்!"

"எனக்கு வேண்டாம். உனக்கும்தான் சொல்றேன். நாம ஏற்கனேவே படிச்சதை ரிவைஸ் பண்ணினாலே போதும். இதை நம்பி நீ ஏற்கனவே படிச்சதை ரிவைஸ் பண்ணாம கோட்டை விட்டுடாதே!"

சதீஷ் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை.

"இது எப்படி ஐயா நடந்தது?" என்றார் டைரக்டர் கோபமாக. 

"அது இன்வெஸ்டிகேட் பண்ணினாதான் சார் தெரியும். நாளைக்கு எக்ஸாம். இப்ப நம்மால ஒண்ணும் பண்ண முடியாது."

"ஏன் பண்ண முடியாது? புதுசா வேற கொஸ்ச்சின் பேப்பர் ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?"

"கொஸ்ச்சின் பேப்பர் ஒரு மணி நேரத்தில ரெடி பண்ணிடலாம். ஆனா பிரின்ட் பண்ணி எல்லா சென்ட்டருக்கும் அனுப்ப வேண்டாமா?"

"மொத்தம் எத்தனை சென்ட்டர் இருக்கு?"

"737 சென்ட்டர்."

"எல்லா சென்ட்டரிலும் இன்டர்நெட் கனெக்‌ஷனும் பிரின்ட்டரும் இருக்கு இல்ல?"

"இருக்கு... ஆனா..."

"சீஃப் எக்ஸாமினர்கிட்ட சொல்லி ஒரு மணி நேரத்துல புது பேப்பர் ரெடி பண்ணச் சொல்லுங்க. அத்தனை சென்ட்டரிலும் இருக்கிற எக்ஸாமினர்களுக்கும் பேப்பரை ஈமெயிலில் அனுப்பி அவங்களுக்கு விவரமா இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துடுங்க. அவங்களுக்கு எத்தனை காப்பி தேவையோ அத்தனை காப்பி சென்ட்டரில் இருக்கற பிரின்ட்டர்ல பிரின்ட் எடுக்கச் சொல்லுங்க. பிரின்ட்டர் ஒர்க் பண்ணல, பேப்பர் இல்லை இது மாதிரி பிரச்னை இருந்தா அவங்க சொந்தப் பொறுப்பில வெளிய போய் பிரின்ட் எடுக்கலாம். ஆனா, அது நாளைப் பரீட்சைக்கான பேப்பர்னு யாருக்கும் தெரியக் கூடாது.

"ரெண்டு மூணு இடங்களைத் தவிர, சென்ட்டர்லேயே வேலை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். பிரின்ட் எடுக்க யாராவது உதவியாளரைப் பயன்படுத்தினா அது வேறே ஏதோ பரிட்சைக்கான பேப்பர் என்கிற மாதிரி எண்ணத்தை உருவாக்கணும். இன்னி ராத்திரிக்குள்ளே எல்லா பேப்பரையும் ரெடி பண்ணி கவர்ல போட்டு சீல் பண்ணி அவங்க பொறுப்புல வச்சுக்கணும். செலவு முன்னே பின்னே ஆனால் பரவாயில்லை. பில்லை நமக்கு அனுப்பினா, நான் பாஸ் பண்ணி விடுவேன்னு சொல்லுங்க. இந்தப் பேப்பர் எங்கேயாவது லீக் ஆனா எக்ஸாமினர்தான் பொறுப்பு என்று கடுமையாச் சொல்லிடுங்க. ஏன் இப்படிச் செய்யறோம்னு காரணம் சொல்ல வேண்டாம். கேட்டா, புதுசா ஒரு ப்ரோஸீஜரை டெஸ்ட் பண்ணிப் பாக்கறோம்னு சொல்லுங்க. யாருக்காவது ஏதாவது சந்தேகமோ பிரச்னையோ இருந்தா, ராத்திரி எத்தனை மணியானாலும் எனக்கு நேரடியா ஃபோன் பண்ணலாம்னு சொல்லுங்க."

"சார், இது நடக்குமா?"

"நடந்தாகணும். பேப்பர் லீக் ஆகிச் சில பேர் அதனால பயன் பெறுவதை என்னால அனுமதிக்க முடியாது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். ஈமெயிலைப் படிச்ச உடனே பதில் அனுப்பணும்னு எழுதுங்க. எல்லா எக்ஸாமினர்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி சீஃப்  எக்ஸாமினர் கிட்ட இருக்கும். அதன் மூலமா ஈமெயில் பார்க்கச் சொல்லித் தகவல் அனுப்புங்க. ஒரு மணி நேரத்துக்குள் பதில் அனுப்பாதவங்களுக்கு ஃபோன் பண்ணி உடனே மெயிலைப் பாக்கச் சொல்லுங்க. நாளைக்கு மெயிலைப் பாக்கலேன்னு யாரும் சொல்லக் கூடாது."

"சரி சார். "
மறுநாள் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பரீட்சை எழுத உட்கார்ந்த சதீஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நண்பன் சொன்னது போல் படித்தவற்றை ரிவைஸ் பண்ணாமல் பேப்பர் கிடைத்து விட்ட மிதப்புடன் இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள்:
அறவழியில் நடப்பதால் அதை விட நன்மை பயப்பது எதுவும் இல்லை. அறவழியிலிருந்து மாறுபட்டு நடந்தால் அதைப் போல் கேடு விளைப்பது வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.

Read 'After the Leak' the English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்