About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, September 22, 2017

101. எங்கிருந்தோ வந்தார்!

அது ஒன்றும் அவ்வளவு பெரிய குடியிருப்பு இல்லை. நான்கு அடுக்குகளில் மொத்தம் 24 வீடுகள்தான். ஆயினும் சுந்தருக்கு அந்தக் குடியிருப்பில் நான்கைந்து பேரைத்தான் ஓரளவுக்காவது தெரியும். பலரின் முகம் கூடத் தெரியாது. அவன் அப்பாவுக்கு இன்னும் நான்கைந்து பேரைத் தெரிந்திருக்கலாம்.

மாடிப்படிகளிலும், லிஃப்டுகளிலும் சந்திக்கும் சில முகங்கள் பரிச்சயமானவையாகத் தோன்றும். சில சமயம் புன்முறுவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவது உண்டு. பேசுவது என்பது மிக அரிது. குடியிருப்பில் அவ்வப்போது எழும் பிரச்னைகளைக் கூட விவாதிப்பதில்லை. அவற்றைக் குடியிருப்பு சங்கச் செயலரிடம் சொல்வதோடு சரி!

இந்த நிலையில், அந்தக் குடியிருப்பில் வசிக்கும், சுந்தர் அவ்வப்போது பார்த்திருக்கும் ஒரு பெரியவர் அவனை வழியில் நிறுத்திப் பேசியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

"ஏம்ப்பா, நீ எஞ்சினீரிங் படிச்சுக்கிட்டிருந்தே போலிருக்கே?" என்றார் அவர்.

"ஆமாம் சார்!" என்றான் சுந்தர், 'இவருக்கு எப்படி இது தெரியும்?' என்ற கேள்வியை மனதில் எழுப்பியபடி.

"ராமலட்சுமி எஞ்சினீரிங் காலேஜிலதானே படிச்சுக்கிட்டிருந்தே?"

"உங்களுக்கு எப்படி சார்..?"

"நான் மெயின் ரோட் பக்கம் நடந்து போகும்போது, நீ அந்த காலேஜ் பஸ்ல ஏறிப் போனதை ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்" என்றவர், தொடர்ந்து "படிப்பு முடிஞ்சு போச்சா?" என்றார்.

"முடிஞ்சுடுச்சு சார்" என்றான் சுந்தர்.

"வேலைக்குப் போறியா?"

"இன்னும் இல்லை..." என்றான் சுந்தர் சற்று சங்கடத்துடன்.

"கேம்பஸ்ல வேலை கிடைக்கலையா?" என்றார் பெரியவர் விடாமல்.

"நான் படிச்சது மெக்கானிகல் எஞ்சினீரிங். கேம்பஸ்ல கிடைச்ச வேலையெல்லாம் சாஃப்ட்வேர்லதான். எனக்கு எஞ்சினீரிங் வேலைக்குப் போறதிலதான் விருப்பம்."

"நல்ல வேலை கிடைக்கும். கவலைப்படாதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் அவர்.

தைத் தன் பெற்றோர்களிடம் சொன்ன சுந்தர் "அப்பா! உனக்கு அவரைத் தெரியுமா?" என்றான்.

"பாத்திருக்கேன். மூணாவது மாடியில இருக்காரு. பேரு வெங்கடாசலம். ஆனா அவர்கிட்ட பேசினது இல்லை. அவர் எதுக்கு உன்னை விசாரிச்சார்? சும்மாவா?" என்றார் அவன் அப்பா.

"வம்புதான். வேற என்ன?" என்றாள் அவன் அம்மா. "உனக்கு சீக்கிரம் ஒரு வேலை கிடைச்சு, இவங்க மாதிரி ஆசாமிகள் மூஞ்சியில எல்லாம் கரியைப் பூசணும்!" என்று வாழ்த்தினாள்(!)

ரண்டு நாட்கள் கழித்து, அழைப்பு மணி அடித்தது. சுந்தர்தான் கதவைத் திறந்தான்.

வெங்கடாசலம் நின்று கொண்டிருந்தார்.

"அப்பா இல்லியே!" என்றான் சுந்தர்.

"இல்லியா? பரவாயில்லை. ஆனா நான் பேச வந்தது உன் விஷயமாத்தான். உள்ள வரலாமா?"

"வாங்க சார், உக்காருங்க!"

"ப்ரோடெக் இன்னோவேஷன்ஸ்'னு ஒரு கம்பெனி இருக்கே தெரியுமா?"

"தெரியுமே! ரொம்ப நல்ல கம்பெனி ஆச்சே அது?"

"அதுல வேலை கிடைச்சா போவியா?"

சுந்தர் திகைப்புடன் "எப்படி சார்? அங்கே வேலை கிடைக்கிறது சுலபம் இல்லியே!" என்றான்.

"என்னோட சொந்தக்காரப் பையன்தான் அங்க ஜெனரல் மானேஜரா இருக்கான். பேரு கிருஷ்ணன். உன்னைப் பத்தி அவன்கிட்ட ஃபோன்ல பேசினேன். பையனை வரச் சொல்லுங்க பாக்கலாம்னான். 'பாக்கறதெல்லாம் இல்லை. பையன் நமக்குத் தெரிஞ்சவன். நீ வேலை கொடுக்கறதாச் சொன்னாதான் அவனை வரச் சொல்லுவேன்'னேன். சிரிச்சுக்கிட்டே 'நீங்க ஒரு ஆளை அனுப்பி வச்சா, அவருக்கு நான் வேலை கொடுக்காம இருப்பேனா?'ன்னான். அதனால உனக்கு வேலை நிச்சயம்!"

அவர் பேச்சைக் கேட்டபடி உள்ளிருந்து சுந்தரின் அம்மா வெளியில் வந்தாள்.

"சார்! நான் உங்ககிட்ட பேசினது கூட இல்லை. எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்யறதா சொல்றீங்களே!" என்றான் சுந்தர் உணர்ச்சி மிகுந்தவனாக.

"நாம எல்லாரும் ஒரே இடத்தில இருக்கோம். ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்யக் கூடாதா என்ன? முன்ன ஒரு தடவை கிருஷ்ணன் எங்கிட்ட, 'மாமா! எங்க கம்பெனியில தெரிஞ்சவங்க மூலமா வர ரெஃபரன்ஸை வச்சுத்தான் வேலைக்கு ஆள் எடுப்போம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன்களா இருந்தா சொல்லுங்க'ன்னு சொல்லியிருந்தான். உன்னைப் பார்த்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது. நாளைக்கு உன்னை வரச் சொல்லியிருக்கான். போய்ப் பார்த்து வேலையில சேர்ந்திடு" என்று எழுந்தார்.

"கொஞ்சம் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்" என்றாள் அவன் அம்மா.

"இப்பத்தாம்மா வீட்டில குடிச்சேன். வயசான காலத்தில அதிகமா காப்பி குடிக்கக் கூடாது" என்றார் அவர் சிரித்தபடி.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சார்" என்று சுந்தர் தடுமாற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர் எழுந்து சென்று விட்டார்.

"எவ்வளவு நல்ல மனுஷன்! அக்கறையோடதான் உன்கிட்ட விசாரிச்சிருக்காரு. நான் அவசரப்பட்டு வம்புக்கு அலையறவர்னு சொல்லிட்டேனே" என்று வருந்தினாள் அவன் அம்மா.

"நாம அவருக்கு எந்த உதவியும் செஞ்சதில்லை. அவரை எத்தனையோ தடவை வழியில பாத்திருக்கேன். வயசில பெரியவர்ங்கறதுக்காக விஷ் பண்ணினது கூட இல்ல. ஆனா அவரா வலுவில வந்து இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காரே! என்னால நம்பவே முடியல!" என்றான் சுந்தர்.


அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:  
நம்மிடமிருந்து எந்த உதவியும் பெறாத ஒருவர் முன் வந்து நமக்கு ஒரு உதவி செய்தால், அவருக்கு இந்த உலகையும், வானுலகையும் கொடுத்தால் கூட, அது அந்த உதவிக்கு ஈடாகாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















2 comments: