About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, February 24, 2020

314. காணாமல் போன சங்கிலி!

"வாங்க!" 

தன் குடியிருப்பு இருக்கும் அதே தளத்தில் இருந்த ஒரு குடியிருப்பில் வசித்து வந்த உமாபதியை வரவேற்றார் பாலன்.  

ஐந்து வருடங்களாக ஒரே தளத்தில் வசித்ததால் இருவர் குடும்பங்களும் பரிச்சயமானவை என்ற போதும் நெருக்கமானவை என்று கூற முடியாது. முதலில் இருந்த நெருக்கமும் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியால் குறைந்து விட்டது.

"உக்காருங்க!" என்ற பாலன், உமாபதி சோஃபாவில் உட்கார்ந்ததும், தானும் அவர் எதிரே உட்கார்ந்தார். 

"சொல்லுங்க!" என்றார் பாலன். 

உமாபதி சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எனக்கு இதைச் சொல்றதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. மேடம் வெளியில போனதைப் பாத்துட்டுத்தான் வந்தேன். கடைக்குப் போறாங்க போல. இன்னும் பத்து நிமிஷத்துக்கு இங்கே யாரும் வர மாட்டாங்க, இல்ல?" என்றார்.

"வர மாட்டாங்க. சொல்லுங்க" என்றார் பாலன்.

"உங்க வீட்டில ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு நகை காணாமப் போச்சு."

"ஆமாம். என் மனைவி அப்பத்தான் புதுசா வாங்கி இருந்த டாலர் வச்ச ரெட்டை வடம் சங்கிலி. 8 பவுன். கடையில கொடுத்த நகைப்பெட்டியில போட்டு மேஜை மேல வச்சிருந்தா. பீரோவில் எடுத்து வைக்கணும்னு நினைச்சு, அப்புறம் வேற ஏதோ ஞாபகத்தில மறந்து போய் இன்னொரு ரூமுக்குப் போயிட்டா. ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அவளுக்கு ஞாபகம் வந்திருக்கு. அப்ப போய்ப் பாத்தப்ப, நகைப்பெட்டி மட்டும் இருந்தது. அதுக்குள்ளே இருந்த சங்கிலியைக் காணோம். நாங்களும் உங்களை மாதிரி நடுத்தரக் குடும்பம்தான். அப்ப, 8 பவுன் தொலைஞ்சு போனது எங்களுக்குப் பெரிய இழப்புதான்."

உமாபதி மறுபடியும் தயங்கினார். பிறகு, "நீங்க ஏன் சார் போலீஸ்ல புகார் கொடுக்கல?" என்றார்.

"போலீஸ்ல புகார் கொடுத்திருந்தா சங்கிலியை எடுத்தது யார்னு சுலபமாக் கண்டு பிடிச்சிருப்பாங்க!"

"எப்படி சார்?"

"எனக்கு யார்மேல சந்தேகம்னு போலீஸ்ல சொல்லி இருந்தா போதும். அவங்க அவனை விசாரிச்சு உண்மையை வரவழைச்சிருப்பாங்க. சங்கிலி வச்சிருந்த நகைப்பெட்டி மேலேயும், அதை வச்சிருந்த மேஜையிலேயும் நகையை எடுத்தவனோட கைரேகை பதிஞ்சிருக்கும். அது ஒண்ணே போதுமே! நகையை எங்கே வித்தான் அல்லது அடகு வச்சான்னு கண்டு பிடிச்சு நகையை மீட்டுக் கொடுத்திருப்பாங்க!"

"அப்புறம் நீங்க ஏன் சார் போலீசுக்குப் போகல?"

"அது இருக்கட்டும். நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்க" என்றார் பாலன் சிரித்தபடி.

"சார்! அந்த நகையை எடுத்தது என் பையன் ரமேஷ்தான். நீங்களும் அவன் மேல சந்தேகப்படற மாதிரி பேசினீங்க. ஆனா நேரடியா கேக்கல. நான் என் பையன்கிட்ட கேட்டேன். அவன் இல்லைன்னுட்டான். ஆனா எனக்கு சந்தேகமாத்தான் இருந்தது. அவனுக்கு குடிப் பழக்கம் இருந்ததும், குடிக்கறதுக்குப் பணம் வேணும்னுட்டுத்தான் இப்படி செஞ்சிருக்கான்னும் எனக்குக் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் தெரிஞ்சது. 

"அப்புறம் என்னென்னவெல்லாமோ செஞ்சு அவன் குடிப் பழக்கத்தை நிறுத்திட்டேன். ஆனா, நகை பத்தின உண்மையை உங்க கிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்ல. அவன் திருடின நகைக்கு ஈடான பணத்தை உங்ககிட்ட கொடுத்து, உங்க நஷ்டத்தை ஈடு செய்யற அளவுக்கு எனக்கு வசதியும் இல்ல.

"இந்தக் குற்ற உணர்ச்சியாலதான் உங்ககிட்டேந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். நீங்க என் பையன் மேல சந்தேகப்பட்டீங்கங்கற கோபத்தினாலதான் அப்படி நடந்து கிட்டதா நீங்க நினைச்சிருக்கலாம். இப்ப சொல்லுங்க. நீங்க ஏன் போலீசுக்குப் போகல?"

"சார்! சங்கிலியை எடுத்தது உங்க பையன்தாங்கறதில எனக்கும் என் மனைவிக்கும் எந்த சந்தேகமும் இல்ல. உங்க பையன் எங்க வீட்டிலேந்து நீங்க இரவல் வாங்கிக்கிட்டுப் போன ஸ்பானரைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கான்.

"என் வீட்டு வாசற்கதவு திறந்து இருந்திருக்கு. என் மனைவி அறைக்குள்ள இருந்திருக்கா. ரமேஷ் குரல் கேட்டதும் 'ஸ்பானரை' சோஃபா மேல வச்சிடு'ன்னு என் மனைவி சொல்லி இருக்கா. ஹாலுக்குள்ள வந்த ரமேஷ் இன்னொரு அறையில இருந்த மேஜை மேல இருந்த நகைப் பெட்டியைப் பாத்திருக்கான்.

"இங்கேயிருந்து பாத்தா அந்த மேஜை தெரியுது பாருங்க! அந்த அறைக்குள்ள போய் அந்த நகைப்பெட்டியைத் திறந்து பாத்துட்டு, அதில இருந்த சங்கிலியை எடுத்துக்கிட்டுப் போயிருக்கான். ஸ்பானரை ஹால்ல இருந்த சோஃபா மேல வைக்காம நகைப்பெட்டி இருந்த மேஜை மேல வச்சுட்டுப் போயிருக்கான். என் மனைவி சொன்னபடி ஹால்ல இருக்கற சோஃபா மேல ஸ்பானரை வச்சுட்டுப் போகாம யாரும் இல்லாத அந்த அறைக்குள்ள போய் நகைப்பெட்டி இருந்த மேஜை மேல ஏன் ஸ்பானரை வச்சுட்டுப் போகணும்? அவன்தான் நகையை எடுத்திருக்காங்கறதுக்கு இதுவே ஆதாரம்!

"இன்னொரு அறையில இருந்த என் மனைவி இதை கவனிக்கல. நகைப்பெட்டியை மேஜைமேல் வச்சதும், வாசற்கதவைத் திறந்து வச்சுட்டு இன்னொரு அறையில இருந்ததும் என் மனைவியின் அஜாக்கிரதைதான். ஆனா உங்க பையனைத் தவிர வேற யாரும் எங்க வீட்டுக்கு வரல. 

"போலீஸ்ல புகார் செஞ்சு, எங்க சந்தேகத்தைச் சொல்லியிருந்தா கல்லூரியில படிச்சுக்கிட்டிருந்த உங்க பையனோட எதிர்காலமே பாழாகி இருக்கும்.

"ஒருவேளை எங்க சந்தேகம் தப்பா இருந்து, அவன் நகையை எடுக்கலேன்னா கூட, அப்பவும் அவனுக்கு ஒரு கெட்ட பேர் வந்து அவன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். 

"நகை போனாலும் பரவாயில்ல, ஒரு பையனோட எதிர்காலத்தைப் பாழடிக்க வேண்டாம்னுதான் நான் போலீசுக்குப் போகல."

உமாபதி சட்டென்று எழுந்து பாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். 

"சார்! உங்களுக்கு ரொம்பப் பரந்த மனசு. உங்க வீட்டில என் பையன் திருடினதை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கு. இப்ப நான் வந்த விஷயத்தை நினைச்சா இன்னும் அவமானமா இருக்கு!"

"சொல்லுங்க. என்ன விஷயம்?" என்றார் பாலன்.

"சார்! ரமேஷ் படிப்பை முடிக்கப் போறான். அவனுக்கு ஒரு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. அவங்க ஒரு நல்ல ரெஃபரன்ஸ் கேட்டிருக்காங்க. நீங்க ஒரு அரசு நிறுவனத்தில அதிகாரியா இருக்கறதால உங்க பேரை அவன் கொடுத்திருக்கான். 

"எனக்கு அது இப்பத்தான் தெரியும். உங்களுக்கு அவன் மேல சந்தேகம் இருக்கறது அவனுக்குத் தெரியாது. எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா நான் உங்க பேரைக் கொடுக்க வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லி இருப்பேன்.

"இப்ப அந்த கம்பெனியிலேந்து அவனைப் பத்தி விசாரிச்சு உங்களுக்குக் கடிதம் வரும். தயவு செஞ்சு அவன் பண்ணின தப்பை மனசில வச்சுக்கிட்டு நீங்க அவனைப் பத்தித் தப்பா ரிப்போர்ட் கொடுத்துடாதீங்க. 

"இந்த உதவியைக் கேக்கத்தான் நான் வந்தேன். நீங்க ஏற்கெனவே அவன் விஷயத்தில ரொம்பப் பரந்த மனசோட நடந்துக்கிட்டிருக்கீங்க. இப்ப உங்க கிட்ட இன்னொரு உதவி கேக்கறது எனக்கு அவமானமாத்தான் இருக்கு. ஆனா எனக்கு வேற வழி இல்லை."

உமாபதிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"நீங்க கொஞ்சம் லேட்டா வந்திருக்கீங்க சார்! எனக்கு ஏற்கெனவே அந்த கம்பெனியிலேந்து கடிதம் வந்துடுச்சு. நேத்திக்கே நான் பதிலும் அனுப்பிட்டேன்!"

"சார்!" என்றார் உமாபதி என்ன சொல்வதென்று தெரியாமல்.

"ரமேஷை எனக்கு நல்லாத் தெரியும், அவன் நல்ல குணம் உள்ளவன், நேர்மையானவன்னுதான் ரிப்போர்ட் கொடுத்திருக்கேன்!" என்றார் பாலன் சிரித்துக்கொண்டே.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பொருள்:
நமக்கு ஒருவர் துன்பம் செய்தால், அவர் வெட்கப்படும்படி அவருக்கு  நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்



















No comments:

Post a Comment