About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, June 25, 2017

76. நம்ப முடியவில்லை

குணசேகரன் அந்த அலுவலகத்தில் சேர்ந்து 20 வருடங்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் மீது யாரும் ஒரு சிறு குறை கூடக் கூறியதில்லை. ஒருபுறம் மேலதிகாரிகளிடம் அவருக்கு நல்ல பெயர் - பொறுப்புள்ளவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மையானவர் என்று. மறுபுறம் அவருடனும், அவருக்குக்  கீழேயும் பணிபுரிபவர்களிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுமையாகவும் நடந்து கொள்பவர் என்றும் பெயர் உண்டு.

அதனால்தான் குணசேகரனைப் பற்றி நிறுவனத்தின் தணிக்கையாளர் சொன்ன விஷயத்தை நிர்வாக இயக்குனர் நம்பிராஜனால் நம்ப முடியவில்லை.

"அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, சார். குணசேகரன் மிக நேர்மையானவர். அவர் எப்படி கணக்குகளில் மோசடி செய்து பணம் கையாடியிருக்க முடியும்?" என்றார் நம்பிராஜன்.

"எங்கள் அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம், சார். அகப்பட்டுக் கொள்ளும் வரை எல்லோருமே நல்லவர்கள்தான்!" என்றார் தணிக்கையாளர்.

"நீங்கள் சொல்வது அனுமானத்திலா அல்லது ஆதாரத்துடனா? ஏனெனில் இதுபோன்ற சில குற்றச்சாட்டுக்கள் அனுமானத்தின் பேரில் சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோமே!"

"நான் சொல்வது சந்தேகத்தின் அடிப்படையில்தான். இது ஒரு திறமையான மோசடி என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்கள் நிறுவனம்  ஆண்டுக்குப் பல லட்சங்கள் லாபம் ஈட்டுவதால் உங்களுக்கு இந்த இழப்பு புலப்படவில்லை."

"குணசேகரன் எளிமையான வாழ்க்கை நடத்துபவர். அவருக்குப் பணத்தாசை ஏற்பட்ட வாய்ப்பு இல்லை."

"பணத்தாசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எல்லோருக்கும் பணத்தேவைகள் உண்டு. தேவை ஏற்படும்போது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். நியாயமான வழிகளில் பணம் அதிகம் சம்பாதிக்க முடியாதவர்கள் வழி தவறிப் போவது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். சரி, குணசேகரனின் குடும்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம்."

"அவருக்கு ஒரே பையன்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கி ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்துப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் கல்லூரிக் கட்டணம் கூடக் குறைவுதான்."

"நீங்கள் அவரைக் கண்காணிப்பது நல்லது. கண்காணித்து வந்தால், அடுத்த முறை மோசடி செய்யும்போது மாட்டிக் கொள்வார்."

தணிக்கையாளர் சென்றதும் நம்பிராஜன் சற்று நேரம் யோசனை செய்தார்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, குணசேகரனை நம்பிராஜன் தன் அறைக்கு அழைத்தார். உட்கார வைத்து, அலுவலக வேலை சம்பந்தமாக ஓரிரு கேள்விகள் கேட்ட பிறகு, திடீரென்று, "ஆமாம், உங்கள் பையன் எப்படிப் படிக்கிறான்?" என்றார்.

"நன்றாகப் படிக்கிறான் சார்" என்றார் குணசேகரன். அவர் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதாக நம்பிராஜனுக்குத் தோன்றியது.

"எந்தக் கல்லூரி?"

குணசேகரன் கல்லூரியின் பெயரைச் சொன்னார்.

"அந்தக் கல்லூரியில் கட்டணம் அதிகம், நன்கொடை என்று வேறு ஒரு பெரிய தொகை வாங்குகிறார்கள் என்று சொல்கிறார்களே!"

"என் பையன் மெரிட் சீட்டில்தானே படிக்கிறான்?" என்றார் குணசேகரன். அவர் குரல் எழும்பாமல் பேசுவது தெளிவாகத் தெரிந்தது.

"ப்ளஸ் டூவில் உங்கள் பையன் மார்க் எவ்வளவு?"

குணசேகரனுக்கு முகம் வியர்த்தது. "...சரியாக நினைவில்லை. நல்ல மார்க்தான்..."

"சாரி குணசேகரன்! உங்களை நான் நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்."

"இல்லை சார். நல்ல மார்க்தான்..."

"உங்கள் மகன் மார்க்கைப் பற்றி நான் சொல்லவில்லை. என்னை ஏமாற்றிப் பணமோசடி செய்து வருகிறீர்களே, அதைச் சொன்னேன்."

"சார், என்ன சொல்கிறீர்கள்? நான் அப்படி எதுவும்..."

"நிறுத்துங்கள். உங்கள் மோசடியை நம் ஆடிட்டர் கண்டுபிடித்து விட்டார். நான் போலீசில் புகார் செய்தால் நீங்கள் சிறைக்குப் போக வேண்டி இருக்கும். உங்களை நல்லவர் என்று நினைத்தேன். என்னை ஏன் ஏமாற்றினீர்கள்?"

சட்டென்று குணசேகரன் குலுங்கக் குலுங்க அழுதார். "எல்லாம் போச்சு. என் மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து என் வாழ்க்கையை நானே பாழாக்கிக்கொண்டு விட்டேன்."

"சொல்லுங்கள்! நல்லவராக இருந்த நீங்கள் ஏன் வழி மாறிப் போனீர்கள்?"

"என் பையன் நல்ல மார்க் வாங்கவில்லை. ஆனால் அவனை நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் என் சக்திக்கு மீறி அவனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட்டேன். அவனுக்கு மெரிட் சீட் கிடைத்திருப்பதாக ஆஃபீசில் சொல்லிக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் என்னால் எப்படி இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க முடியும் என்று சந்தேகம் வருமே! ஆனால் வெளியில் நீங்கள்தான் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்லியிருக்கிறேன். என் மனைவியும் மகனும் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்."

"அதுதானே உண்மை!"

"சார்?"

"மேலே சொல்லுங்கள்."

அந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய நகைச்சுவையை நினைத்து நம்பிராஜனுக்குச் சிரிப்பு வந்தது.

"ஆரம்பத்தில் கடன் வாங்கினேன். பிறகு கடன்காரர்கள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல்..." மேலே சொல்ல முடியாமல் குணசேகரன் நிறுத்தினார்.

தன் நிலைமையை உணர்ந்தவராக மறுபடியும் அழ ஆரம்பித்தார். "என் வாழ்க்கையுடன் சேர்ந்து என் மகனின் எதிர்காலமும் அழியப்  போகிறது."

நம்பிராஜன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். "குணசேகரன்! நீங்கள் வழி தவறியதற்குக் காரணம் பணத்தாசை இல்லை. உங்கள் மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு. ஆனாலும் நீங்கள் செய்தது குற்றம்தான். உங்களை போலீசில் ஒப்படைக்க நான் விரும்பவில்லை.

"மீண்டும் நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இப்படி ஒரு தப்பைச் செய்த உங்களை நான் வேலையில் தொடர அனுமதிக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி
வி ஆர் எஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

"இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் மகனின் படிப்பு முடிந்து விடும். அதுவரை அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் குடும்பம் நடப்பதற்கும் தேவையான அளவு பணம் உங்களுக்குக் கிடைக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன்.

"நீங்கள் போகலாம் - உங்கள் சீட்டுக்கு இல்லை. வீட்டுக்கு. உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நான்தான் உங்களை மருத்துவரிடம் அனுப்பியதாகவும், அங்கிருந்து நீங்கள் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும், மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் இனி வேலைக்கு வராமல் வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கப் போவதாகவும் நான் அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன். நீங்களும் உங்கள் வீட்டிலும், உங்கள் அலுவலக நண்பர்களிடமும் அப்படியே சொல்லி விடுங்கள்.

"இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பெரிய தொகைக்கான செக் உங்கள் வீட்டுக்கு வரும். வி ஆர் எஸ் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை விட அதிகமாகவே கிடைக்கும். இத்தனை வருடங்கள் இந்த நிறுவனத்துக்காக உழைத்ததற்கு என் நன்றி."

"சார்! நான் உங்களுக்குச் செய்தது துரோகம். ஆனால் நீங்கள் இவ்வளவு பெருந்தன்மையாக...என் பையன் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் எடுத்த பணத்தை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?"

இருக்கையிலிருந்து தடுமாறியபடி எழுந்து கைகூப்பி விடைபெற்றார் குணசேகரன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:
அறியாதவர்கள் அறம்தான் அன்பைச் சார்ந்திருக்கும் என்று கூறுவர். ஆனால் மறத்துக்கும் (அறத்துக்கு மாறான செயல்களுக்கும்) அன்பே காரணமாக அமையக் கூடும்.)

(குறிப்பு: மறத்தை வீழ்த்தவும் அன்பு துணை நிற்கும் என்றே பெரும்பாலும் இக்குறளுக்குப் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. 'மறத்துக்கும் அஃதே துணை' என்ற வரிக்கு 'மறத்தை எதிர்க்க உதவும் என்று பொருள் கொள்வது சரியாக எனக்குப் படவில்லை. ஆயினும், என்னை அறியாமலேயே, இந்தக் கதை இரண்டு பொருட்களுக்குமே பொருந்துமாறு அமைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















3 comments:

  1. கதையோடு ஒற்றி குறள் - ரொம்பவும் ரசித்தேன்.

    மறம் - வீரம், பகை, பாவம், சினம் என்ற பொருட்களும் உண்டல்லவா?
    வீரம்-தான் அன்பு கொண்ட பெண்ணுக்காக ஏறு தழுவுதல், வீரம் காண்பிப்பது
    பகை - தான் விரும்பியவனுக்காக, அவனுடைய எதிரியின்மீது தான் பகையுணர்வு காண்பிப்பது
    பாவம் - கொண்ட அன்புக்காக பாவச் செயல் செய்வது
    சினம்-அன்பினால் சினம் கொள்வது. நாம் யாரிடம் மிகவும் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்களிடம்தான் பெரும்பாலும் அதிகச் சினத்தைக் காண்பிப்போம்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete