About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, April 6, 2017

72. சொத்து யாருக்கு?

"என் சொத்தில அவனுக்கு ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்!" ஆத்திரமாகக் கூவினார் தண்டபாணி.

"அப்படி என்ன தப்புப் பண்ணிட்டான் ஒங்க பையன்? வேற ஜாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ்வளவு பெரிய தப்பா?" என்றார் அவர் நண்பர் சோமசுந்தரம்.

"என் பேச்சை மதிக்காதவனுக்கு என் சொத்து மட்டும் எதுக்கு?"

"ஒங்களுக்கு இருக்கறது ஒரே பையன். அவனுக்குக் கொடுக்காம வேற யாருக்குக்  கொடுக்கப் போறீங்க?" .

"இன்னொரு  கல்யாணம் பண்ணிக்கறேன். எல்லா சொத்தையும் என் பொண்டாட்டிக்கு எழுதி வைக்கிறேன்."

"இந்த வயசிலயா?..." என்று இழுத்தார் சோமசுந்தரம்.

தண்டபாணி சொன்னபடியே செய்து விட்டார்!

தன் ஐம்பத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான பரிமளத்தைக் கல்யாணம் செய்து கொண்டார். பரிமளம் பெற்றோர்களை இழந்து, தூரத்து உறவினர்கள் வீட்டில் ஒரு வேலைக்காரி போல் இருந்து வந்தவள்.

யார் மூலமோ பரிமளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை "வளர்த்து வந்த" உறவினர்களுக்குக்  கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு அவளை மணந்து கொண்டார்.

கல்யாணம் ஆனதும் தன் சொத்துக்கள் அனைத்தையும் மனைவியின் பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டார் தண்டபாணி. அவர் மகன் ராஜு வந்து கத்தி விட்டுப் போனான். கோர்ட்டுக்குப் போவேன் என்றான். "போ!" என்று சொல்லி விட்டார் தண்டபாணி.

போவதற்கு முன், ராஜு பரிமளத்தைக் கண்டபடி ஏசினான். "எங்கப்பனை மயக்கி சொத்தெல்லாம் எழுதி வாங்கிக்கிட்டே இல்ல? பாத்துக்கறேண்டி ஒன்னை!" என்றான்.

"என் பொண்டாட்டியை மரியாதை இல்லாம பேசினா ஒன்னைக் கொலை பண்ணிடுவேன்!" என்று கத்தியபடி பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து மகன் மீது வீசினார் தண்டபாணி..

ராஜு போனதும், "என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? ஏற்கெனவே, சொத்துக்காகத்தான் ஒங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஊர்ல சில பேரு பேசறாங்க. எனக்கு எதுக்கு ஒங்க சொத்து? பேசாம ஒங்க புள்ள பேருக்கே எழுதிடுங்களேன்" என்றாள் பரிமளம்.

"இப்ப சொல்றேன் கேட்டுக்க. நான் செத்துப் போன பிறகும் நீ இந்த சொத்தை ராஜுவுக்குக் கொடுக்கக் கூடாது. வேற யாருக்கு வேணும்னா கொடு. எனக்குக்  கவலையில்லை."

பத்து வருடங்கள் பரிமளத்துடன் வாழ்ந்து விட்டு தண்டபாணி இறந்து போனார்.

ண்டபாணி இறந்த பிறகு ராஜு பரிமளத்திடம் வந்து பேசினான். "சித்தி! ஒங்களுக்குத்தான் யாரும் இல்லையே! அப்பா ஒங்க பேர்ல எழுதி வச்சிருக்கிற சொத்தை எல்லாம் என் பேருக்கு மாத்திடுங்க. ஒங்களைக் காலம் முழுக்க வச்சுக் காப்பாத்தறேன். அப்படி ஒங்களுக்கு என்னோட இருக்க விருப்பம் இல்லேன்னா, ஒங்க தேவைக்கு மட்டும் கொஞ்ச சொத்தை வச்சுக்கிட்டு மீதியை எனக்குக் கொடுத்துடுங்க. நீங்க அப்படிப் பண்ணலேன்னா, ஒங்க காலத்துக்கப்புறம் சொத்தெல்லாம் வேறு யார் கைக்கோ போயிடும்."

பரிமளம் மறுத்து விட்டாள். "உன் பிள்ளை பெரியவனானப்புறம் வா. அவனுக்கு ஏதாவது கொடுக்க முடியுமான்னு பாக்கறேன். உனக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு ஒங்கப்பா சொல்லியிருக்காரு."

ராஜு அவளை மீண்டும் கடும் சொற்களால் ஏசி விட்டுப் போனான். தன் தந்தையை ஏமாற்றிச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கி விட்டதாக அவள் மீது வழக்குப் போட்டான். ஆனால் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வரவில்லை.

ண்டபாணி இறந்து பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பரிமளம் உடல்நிலை சரியில்லாமல் போய்ப் படுத்த படுக்கையானாள்.  ராஜூவுக்குச் சொல்லி அனுப்பினாள். அவன் வரவில்லை.

சில தினங்கள் கழித்து ராஜூவுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் படித்தான்.

"நான் அதிக நாள் இருக்க மாட்டேன். சொத்துக்களை உன் பையன் பெயருக்கு எழுதியிருக்கிறேன். உயில் வக்கீலிடம் இருக்கிறது. உன் அப்பா எனக்கு எழுதி வைத்த சொத்துக்களை உனக்கே கொடுத்திருப்பேன். ஆனால் உனக்குக் கொடுக்கக் கூடாது என்று உன் அப்பா சொல்லி விட்டார். அதனால்தான் நீ வந்து கேட்டபோது மறுத்து விட்டேன்.

"உன் பையன் சிறுவன் என்பதால் அவன் பெயருக்குச் சொத்தை எழுதினால் உன்னைத்தான் கார்டியனாகப் போட வேண்டும். அது உன் அப்பாவின் விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும் என்பதால் அவன் பெரியவன் ஆகும் வரை காத்திருந்தேன்.

"உயில் எழுதுவது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நீ என் மீது வழக்குப் போட்டதால் நான் ஒரு வக்கீலைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அந்த வக்கீலின் உதவியுடன்தான் உயிலை எழுதினேன்.

"உன் அப்பா எனக்கு ஒரு நல்ல கணவராக இருந்தார். அவர் ஏன் உனக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீ அவரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டிருந்தால், கொஞ்ச நாளில் அவர் கோபம் குறைந்திருக்கலாம்.

"நீயும், உன் மனைவி, மகன் ஆகியோரும் நீண்ட நாட்கள் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்."

கடிதத்தைப் படித்ததும், ராஜு பரிமளத்தின் வீட்டுக்கு ஓடினான். வீட்டின் முன் சிறு கூட்டம் இருந்தது. வக்கீலும் இருந்தார். "சித்திக்கு என்ன சார் ஆச்சு?" என்றான் ராஜு பதட்டத்துடன்.

"இன்னிக்குக் காலையில உயிர் போயிடுச்சு. எனக்கு யாரோ தகவல் சொன்னதால நான் வந்தேன்."

ராஜு உள்ளே போக யத்தனித்தான்.

"நில்லுப்பா. பாடி உள்ளே இல்லை!" என்றார் வக்கீல்.

"அதுக்குள்ளே எடுத்துட்டாங்களா? நான்தானே கொள்ளி  போடணும்?"
என்றான் ராஜு.

'அவங்க உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் பண்ணியிருக்காங்க. அதனால அவங்க பாடி ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கு. எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்ததும் மீதி உடம்பு வரும். அதுக்கு நீ கொள்ளி  வைக்கலாம்!" என்றார் வக்கீல்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்:
அன்பு இல்லாதவர்கள், எல்லாம் தமக்கே வேண்டும் என்ற சுயநல எண்ணத்தில் வாழ்வார்கள். அன்பு உள்ளவர்கள் தங்கள் உடைமைகளை மட்டுமின்றி தங்கள் உடலைக் கூட மற்றவர்களுக்காக அர்ப்பணித்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























1 comment:

  1. கதை நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் குறளுக்கு ரொம்பவும் பொருந்தவில்லை.

    ReplyDelete