About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, April 4, 2017

71. அன்பு வந்தது என்னை ஆள வந்தது!

செண்பகத்துக்குத்  திருமணம் ஆனபோது அவளுக்கு  வயது 22. அவள் கணவன் சங்கரன் ஒரு நிறுவனத்தில் உதவியாளனாகப் பணி புரிந்து வந்தான். சுமாரான சம்பளம். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்பே அவளுக்குத் தெரிந்ததுதான்.

அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவள்தான் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப்  பார்த்ததாகவே தெரியவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக வந்து பெண் பார்ப்பது போல் பார்த்து விட்டுப் போய் விட்டான்.

செண்பகம் நல்ல அழகு என்று பலரும் சொல்வார்கள். அவள் அழகுக்காகவே யாராவது ஒரு பணக்காரப் பையன் அவளைக் கொத்திக்கொண்டு போய் விடுவான் என்று அவள் அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.

சங்கரனைப் போல ஒரு சாதாரணமான நிலையில் இருந்த மாப்பிள்ளையை செண்பகத்தின் அம்மா விரும்பவில்லை. ஆனால் அவள் அப்பா அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்து விட வேண்டும் என்ற அவசரத்தில் முதலில் வந்த வரனைப் பேசி முடித்து விட்டார்.

செண்பகத்துக்குத் தனக்கு கணவனாக வரப்போகிறவனைப் பற்றி எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும், தன் அழகை ஒரு கணம் கூட அவன் ரசிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவள் முகத்தைக் கூட அவன் சரியாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகும் சங்கரன் அவளை அதிகம் லட்சியம் செய்யவில்லை என்று தோன்றியது. 'நீ அழகாக இருக்கிறாய்' என்றோ, 'உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது' என்றோ பொதுவாக எல்லாக் கணவர்களும் சொல்வது போல் அவன் எதுவும் சொன்னதில்லை.

அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை; கோபித்துக் கொண்டதில்லை; அவள் ஏதாவது தவறு செய்தால்  ஒன்றும் சொல்வதில்லை. ஒன்று கோபித்துக்கொள்ள வேண்டும் அல்லது 'பரவாயில்லை' என்றாவது  சொல்ல வேண்டும். சங்கரன் இரண்டையும் செய்வதில்லை. கோபித்துக் கொண்டிருக்கிறானா, அல்லது அவள் செய்த தவறைப்  பொருட்படுத்தவில்லையா என்று அவளால் தீர்மானிக்க முடிவதில்லை.

கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. பாலுவும், சாந்தியும் பிறந்து விட்டார்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்றுதான் இரண்டாவது குழந்தைக்கு சாந்தி என்று பெயர் வைத்தான். (சாந்தி, மங்களம் என்றெல்லாம் பெயர் வைத்தால் அதற்கு மேல் குழந்தை பிறக்காதாமே!)

பாலுவுக்கு நாலு வயது. சாந்திக்கு இரண்டு வயது. குழந்தைகளிடம் சங்கரனுக்கு அதிகப் பாசம் உண்டு. அவர்களும் அப்பா அப்பா என்று அவனிடம்தான் அதிகம் ஒட்டிக் கொள்வார்கள்.

"உங்களுக்கு வேண்டியதையெல்லாம் நான்தான் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு உங்கள் அப்பாதான் முக்கியம்!" என்று அவள் விளையாட்டாகக் குழந்தைகளைக் கோபித்துக்கொண்டபோது அவர்களுடன் சேர்ந்து சங்கரனும் சிரித்தான். எப்போதோ ஒருமுறை அவன் முகத்தில் வரும் சிரிப்பு அது!

அலுவலக வேலையின் அழுத்தமும், குடும்பப் பொருளாதார நிர்வாகத்தின் சுமையும் அன்பு, பாசம், சிரிப்பு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை அவன் மனதிலிருந்து வற்றிப் போகச் செய்து விட்டனவோ என்று அவளுக்குத் தோன்றும்.

ருநாள் செண்பகம் ஜுரம் என்று படுத்துக்கொண்டு விட்டாள். இந்த ஐந்து வருடங்களில் இதற்கு முன்பு ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டவள் இல்லை அவள். இந்த முறை அவளால் முடியவில்லை.

குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் அவள் பக்கத்திலேயே இருந்தனர். சங்கரன் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவளை ஆட்டோவில் அழைத்துச் சென்றான். ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள்.

பக்கத்து வீட்டு அலமேலுதான் அவளுக்குக்  கஞ்சி போட்டுக் கொடுத்ததுடன், குழந்தைகளுக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாள். ஆனால் அவள் எவ்வளவு வற்புறுத்தியும் சங்கரன் அலமேலு கொடுத்த சாப்பாட்டை வாங்க மறுத்து விட்டான்.

"உங்களுக்கு ஏன் சிரமம்? நீங்கள் குழந்தைகளுக்குச் செய்வதே பெரிய விஷயம்! நான் எப்படியாவது பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டான்.

"நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?" என்று அவள் கேட்டதற்கு, "என் நண்பன் முரளி வீட்டில் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் அவன்.

ஜுரத்திலிருந்து செண்பகம் மீண்டு எழ ஏழு நாட்கள் ஆகி விட்டன. உடல்நிலை சரியானதும், முரளியின் மனைவி கீதா வந்து பார்த்தாள்.

உடல் நலம் பற்றி அவள் விசாரித்த பிறகு, "இந்த ஒரு வாரமும் அவருக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு போட்டு அவரைப் பார்த்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி" என்றாள் செண்பகம்.

"எங்கள் வீட்டில் அவர் எங்கே சாப்பிட்டார்? நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஓரிரு முறை காப்பி குடித்ததைத் தவிர எங்கள் வீட்டில் வேறு எதுவும் சாப்பிடவில்லையே!" என்றாள் கீதா.

"உங்கள் வீட்டில் சாப்பிடுவதாகத்தானே சொன்னார்?" என்றாள் செண்பகம்.

"சும்மா சொல்லியிருக்கிறார். உங்களுக்கு உடம்பு சரியில்லாததிலிருந்து உங்கள் வீட்டுக்காரர் ஒழுங்காகச் சாப்பிடவே இல்லை. டீக்கடையில் டீயையும் பன்னையும் சாப்பிட்டு வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பதாக இவர் சொன்னார். 'சங்கரன் முகத்தில் இப்படி ஒரு சோகத்தை நான் பார்த்ததில்லை. கண் கூடக் கலங்கியிருந்தது. ரகசியமாக அழுதிருக்கிறான் போலிருக்கிறது' என்று இவர் சொன்னார்."

செண்பகம் பிரமிப்புடன் கீதாவைப் பார்த்தாள். சங்கரனால் அழ முடியும் என்று கூட அவள் நினைத்ததில்லை. அதுவும் மனைவிக்காகச் சரியாகச் சாப்பிடாமல், கவலைப்பட்டு அழுதிருக்கிறான் என்றால்...

'அட பைத்தியக்காரரே! உங்களுக்கு என் மீது இவ்வளவு அன்பு இருக்கிறது என்று எனக்கு ஒரு கோடி காட்டியிருந்தால் நான் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்திருப்பேனே!'

கீதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். "...இப்போதுதான் இவர் என்னிடம் சொன்னார். நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டால்  உங்கள் உடல் பலவீனமாகி விடும் என்பதற்காக அவர் ஆபரேஷன் செய்து கொண்டாராம்!... கடவுளே! உங்களுக்கு இது தெரியாது என்று இவர் சொன்னார். நான் உளறி விட்டேனே!"

செண்பகத்தின் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. தான் அன்பு வைத்திருப்பவரின் துன்பத்தைத் தாள முடியாமல் வெளிப்படும் சிறிதளவு கண்ணீர் கூட  உள்ளிருக்கும் அன்பை வெளிப்படுத்தி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்










1 comment: