About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 5 - இல்வாழ்க்கை

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5 
இல்வாழ்க்கை

41. அன்றும் இன்றும்

ரகுராமன் சம்பளப் பணத்தை மனைவி சுசீலாவிடம் கொடுத்தான்.

"அதே தொகை, அதே பங்கீடு!" என்றாள் சுசீலா.

"என் சம்பளத் தொகையை என்னால் அதிகரிக்க முடியாது. பங்கீடு செய்வதில் வேண்டுமானால் சில மாற்றங்கள் செய்யலாம்" என்றான் ரகுராமன்.

"என்ன மாற்றம்? வீட்டுச் செலவுக்கான தொகையைக் குறைத்து விட்டு, தர்மம் கொடுக்கும் தொகையை அதிகப் படுத்துவதா?" என்றாள் சுசீலா கேலியாக.

"உன்னால் வீட்டுச் செலவைக் குறைத்துக் கொள்ள முடிந்தால் அப்படிச் செய்யலாம்!" என்றான் ரகுராமன் விட்டுக் கொடுக்காமல்.

"ஆமாம், சம்பாதிப்பதில் பத்து சதவீதம் தர்மத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?"

"அப்படி ஒன்றும் இல்லை. வருமான வரிக்குத்தான் குறிப்பிட்ட சதவீதம் என்று விதித்திருக்கிறார்கள். தர்மத்துக்கு, பத்து சதவீதத்துக்கு அதிகமாகவும் கொடுக்கலாம்!"

"உங்கள்  சிந்தனையே எனக்குப் புரியவில்லை. உங்கள் வருமானத்தில் பத்து சதவீதத்தை தர்மத்துக்குக் கொடுக்கிறீர்கள், சரி. அதை ஏன் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொடுக்கிறீர்கள்?"

"ஒரு பிரிவு அநாதை இல்லங்களுக்கு. ஒரு பிரிவு முதியோர் இல்லங்களுக்கு. இன்னொரு பிரிவு நான் பின்பற்றும், சமூகச் சேவைகள் செய்து வரும் ஸ்வாமிஜியின் மடத்துக்கு."

"மூன்று பேருக்கும் பிய்த்துப் பிய்த்துக் கொடுப்பதை விட யாராவது ஒருவருக்குக் கொடுக்கலாமே!"

"என் வருமானம் அதிகமாக இருந்தால் மூன்று பேருக்கும் ஆளுக்குப் பத்து சதவீதம் கொடுப்பேன். என்னால் கொடுக்க முடிந்தது பத்து சதவீதம்தான் என்பதால் அதை மூன்றாகப் பிரித்துக் கொடுக்கிறேன்."

"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்."

"முன்காலத்தில் மனித வாழ்க்கை நான்கு நிலைகளில் இருந்தது. பிரம்மச்சரியம், இல்லறம், சுகங்களைத் துறந்து காட்டில் போய் வசிக்கும் வானப்பிரஸ்தம், துறவறம் என்று. இவர்களில் இல்லறத்தில்  இருப்பவர்களுக்குத்தான் வருமானம் உண்டு. அதனால் இல்லறத்தில் இருப்பவர்கள்தான் மற்ற மூன்று நிலையில் இருப்பவர்களுக்கும் உதவி வந்தார்கள். அது அவர்கள் கடமை கூட.

ஆனால் இப்போது இந்த நான்கு நிலை வாழ்க்கை முறை நம்மிடையே இல்லை. இல்லறம் மட்டும்தான் அப்படியே இருக்கிறது. பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், துறவறம் ஆகிய மூன்றும் இல்லை. ஆனால் இவை வேறு வடிவில் இருக்கின்றன.

பிரம்மச்சாரிகளுக்குப் பதிலாக அநாதை இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். வானப்பிரஸ்தத்துக்குப் பதிலாக முதியோர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வாழும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். துறவிகளுக்குப் பதிலாகத் தங்கள் வாழ்க்கையைத் துறந்து சமூக சேவைக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், மதத் தலைவர்களும் இருக்கிறார்கள். நான் போலிச்சாமியார்களை இங்கே சேர்க்கவில்லை. அவர்கள் செய்வது பிசினஸ் என்பதால் அவர்களையும் இல்லறத்தில் இருப்பவர்களாகத்தான் கருத வேண்டும்! எனவேதான் இந்த மூன்று வகையினருக்கு என்னால் முயன்ற உதவியைச் செய்து வருகிறேன்."

ரகுராமன் சொல்லி முடித்ததும், முதல் முறையாக அவனை வியப்புடனும் மதிப்புடனும் பார்த்தாள் சுசீலா. "ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"என் அப்பா சொன்னார்."

"உங்கள் அப்பாவுக்கு யார் சொன்னார்கள்?"

"ஒரு பெரியவர்."

"பெரியவரா? யார் அந்தப் பெரியவர்?"

"அவர் பெயர் திருவள்ளுவர்" என்றான் ரகுராமன்.

குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்:
இல்லறத்தில் இருப்பவர்கள் (பிரம்மச்சரியம், வானப்ரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என்ற) மற்ற மூன்று நிலைகளிலும் இருப்பவர்கள் அறவழியில் தங்கள் வாழ்க்கையை நடத்த உதவ வேண்டும்.

42. ஒன்று, இரண்டு, மூன்று
"ஏம்ப்பா நாளைக்கு ஆஃபீஸில முக்கியமா வேலை இருக்கு. நாளைக்குப் போய் லீவு கேக்கறியே! இன்னொரு நாளைக்கு எடுத்துக்கக் கூடாதா?"

"நாளைக்குத்தானே சார் எங்கப்பாவுக்கு நான் திதி கொடுக்கணும்? அதனாலதான் சார் நாளைக்கு லீவு கேக்கறேன்."

"என்னப்பா, இந்தக் காலத்தில போய் திதி, தவசம்னு எல்லாம் பேசிக்கிட்டு!"

"பிறப்பு, இறப்பு எல்லாம் காலத்துக்குத் தகுந்தாப்பல மாறுவது இல்லையே சார்! இறந்து போனவங்களுக்குத் திதி கொடுக்கறதும் அப்படித்தான்."

"சரி. திதி கொடுக்கறதுன்னா என்ன செய்வே?"

"ஐயரைக் கூப்பிட்டு மந்திரம் சொல்லி என் அப்பாவுக்கும் அவரோட மூதாதையர்களுக்கும் ஆகாரம் படைப்போம்."

"ஆகாரம் படைப்பியா? இறந்து போனவங்க வந்து சாப்பிடுவாங்களா?"

"இல்லை சார். அவங்களுக்குப் பிரதிநிதியா ரெண்டு மூணு ஏழைப்பட்டவங்களை உபசரித்து உக்காத்தி வச்சு, அவங்களுக்குப் படைப்போம்."

"ஓ! அது உங்க மூதாதையருக்குப் போய்ச் சேர்ந்திடுமாக்கும்?"

"நிச்சயமா சார்!"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"

"நம்பிக்கைதான் சார்."

"நம்பிக்கை மட்டும் போதுமா? இறந்து போனவங்க வேறே ஏதோ ஒரு உலகத்திலே இருக்காங்கன்னு வச்சுக்கிட்டாலும் இங்கே யாரோ சிலர் சாப்பிடறது அவங்களுக்கு எப்படிப் போய்ச்  சேரும்?"

"எப்படின்னு தெரியாது சார். ஆனா போய்ச் சேரும்."

"ஒரு விஷயம் எப்படி நடக்கும்னு தெரியாம அது நடக்கும்னு எப்படி நம்பறது?"

"சார். நம்ம ஆஃபீஸிலேருந்து கொல்கத்தால இருக்கிற ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ் அனுப்பறேன். அது எப்படி கொல்கத்தாவுக்குப் போய்ச் சேருதுன்னு எனக்குத் தெரியாது. அந்த விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஃபேக்ஸ் நிச்சயமாப் போயிடும்னு தெரியும். அது போலத்தான் சார் இதுவும்."

"சரிப்பா. உன்னோட நம்பிக்கையை நான் தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா இறந்து போனவங்க எங்கேயோ இருக்காங்கன்னு என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியவில்லை."

"'மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை' ன்னு வாலி எழுதி எம். எஸ்.வி அருமையா இசை அமைச்ச ஒரு பாட்டு இருக்கு சார்!"

"நான் எம்.எஸ்,வியோட ரசிகன்கறதனால என்னை இப்படி மடக்கறியா? சரி. திதி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?"

'பன்னிரண்டு, ஒரு மணி ஆகி விடும் சார்.'

"அப்ப மத்தியானம் ஆஃபீசுக்கு வரலாம் இல்லே?"

"மன்னிச்சுக்கங்க சார். திதி முடிஞ்சதும் நான் ஒரு அநாதை இல்லத்துக்குப் போய் அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுத்து விட்டு, அவங்க சாப்பிட்டதும் அவங்களோட கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவேன் சார். இதெல்லாம் முடிய சாயந்திரம் ஆயிடும்."

"இது வேறயா? பெரிய ஆளுதான்ப்பா நீ. உன்னோட சம்பளத்தில இதெல்லாம் பண்ண முடியுதா?"

"இந்த உலகத்தில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் மூணு கடமை இருக்கு சார். அதைதான் நான் செஞ்சுக்கிட்டு வரேன்!"

"அது என்ன மூணு கடமை?"

"முதல் கடமை, தங்கள் வாழ்க்கையைத் துறந்து மற்றவர்களுக்காக உழைக்கிற சேவை மனப்பான்மை கொண்ட துறவிகளுக்கு, இரண்டாவது ஆதரவு அற்றவர்களுக்கு, மூன்றாவது  காலம் சென்ற நமது மூதாதையர்களுக்கு."

"நீ சொன்ன மூணு கடமைகள்ள முதல்ல வருவது துறவிகளுக்குச் செய்ய வேண்டியது. ஆனா நீ செய்யப் போற கடமைகள் ரெண்டாவதும் மூணாவதும்தானே? முதல் கடமையை நீ செய்யறதில்லையா?"

"செய்வேன் சார். நான் சொன்ன அநாதை ஆசிரமத்தை நடத்தராறே அவரு கல்யாணம் பண்ணிக்காம தன்னோட வாழ்க்கையைத் துறந்து ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு நான் என்ன பெரிய உதவி செய்ய முடியும்? அவரை நேரில பார்த்து அவரோட சேவையைப் பாராட்டி விட்டு என்னால முடிஞ்ச ஒரு சின்ன தொகையை நன்கொடையாக் கொடுத்து விட்டு வருவேன். ராமர் பாலம் கட்ட அணில் மண் 'சுமந்து' போய்க் கொடுத்தது மாதிரி. முதல் கடமையை என்னால இந்த அளவுக்குத்தான் சார் செய்ய முடியும்."

"நீ ரொம்ப கிரேட் அப்பா. உன் கிட்டே நான் நிறையக் கத்துக்க வேண்டியிருக்கு. ஆமாம். நீ இதையெல்லாம் எங்கிருந்து கத்துக்கிட்டே?"

"சின்ன வயசிலேருந்து நான் தினம் படிச்சுக்கிட்டு வர ஒரு புத்தகத்திலிருந்து சார்."

"அப்படியா? அது என்ன புத்தகம்?"

"திருக்குறள்."

குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.

பொருள்:
தன்னலம் இல்லாமல் பிறருக்காக உழைக்கிற துறவு மனப்பான்மை கொண்டவர்கள், ஆதரவற்றவர்கள், இந்த உலகத்தை வீட்டுப் போய் விட்ட மூதாதையர்கள் ஆகியோருக்கு இல்லற வாழ்க்கை நடத்துபவன் துணையாக நின்று உதவ வேண்டும்.

43. ஐந்தில் அடங்கும் ஆறு! 

"அப்பா! வீட்டுச் செலவு ரொம்ப அதிகமா ஆகுது. அதனால அடுத்த மாசத்திலேருந்து பட்ஜெட் போட்டு செலவு பண்ணலாம்னு  முடிவு பண்ணியிருக்கேன்" என்றான் முகுந்தன்.

"நல்லவேளை! செலவு அதிகமா ஆகுதுன்னு நீ ஆரம்பிச்சதும் எங்கே ஒரு வேளைச் சாப்பாட்டைக் கொறைச்சுக்கலாம்னு சொல்லப் போறியோன்னு பயந்துட்டேன்!" என்றார் ராமசாமி.

"அம்மா என்னை ஒரு சாப்பாட்டு ராமனா வளர்த்துட்டாங்கன்னு நீங்கதான் அடிக்கடி சொல்வீங்களே! அப்படி இருக்கச்சே, நான் ஏன் சாப்பாட்டைக் கொறைச்சுக்கறதைப் பத்திப் பேசப் போறேன்?" என்றான் முகுந்தன்.

தந்தை மகன் என்ற உறவைத்தாண்டி நண்பர்கள் போல் பேசிக் கொள்வது அவர்கள் இயல்பு.

"ஆமாம். இன்னிக்குத்தானே முதல் தேதி? இந்த மாசத்திலேருந்தே பட்ஜெட் போடலாமே?" என்றார் ராமசாமி.

"இல்லப்பா. பட்ஜெட் போடறத்துக்கு முன்னால எந்தெந்த வகையில எவ்வளவு செலவு ஆகுதுன்னு பாக்கணும். இந்த மாசம் ஆகிற செலவுகளைக் குறிச்சு வச்சுக்கிட்டா அதை வச்சு எந்த வகைகள்ள செலவைக் குறைக்கலாம்னு பார்த்து அடுத்த மாசம் பட்ஜெட் போடலாம். அதனால இன்னியிலிருந்து  செலவுகளைக் குறிச்சு வச்சுக்கணும் நீங்க!"

"ஏண்டா எத்தனையோ வருஷமா செலவுகளைக் குறிச்சு வச்சுக்கன்னு நான் உன்கிட்டே சொல்லிக்கிட்டே வரேன். அதை நீ காதிலேயே  போட்டுக்கல. இப்ப 'செலவுகளைக் குறிச்சு வச்சுக்க'ன்னு நான் சொன்னதை என்கிட்டேயே  திருப்பிச் சொல்றியா?"

"இல்லப்பா!.." என்று இழுத்தான் முகுந்தன்.

"சரி. எல்லார் செய்யற செலவையும் நான் குறிச்சு வச்சுக்கணும் அவ்வளவுதானே?"

"ஆமாம்ப்பா. நீங்கதான் எதையும் விடாம எல்லாத்தையும் கவனமா எழுதி வைப்பீங்க."

"சரி. ஒரு புது நோட்டு கொடு" என்று ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார் ராமசாமி.

ந்த மாதக் கடைசியில் "அப்பா! அந்த செலவுக் கணக்கு எழுதின நோட்டைக் காட்டுங்க" என்றான் முகுந்தன்.

தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ராமசாமி "கொஞ்சம் இரு!" என்றார்.

"நோட்டை என்னிடம் கொடுத்து விட்டு நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாமே!" என்றான் முகுந்தன்.

"இதோ" என்று மடிக் கணினியை அவன் புறம் திருப்பினார் ராமசாமி. செலவுக் கணக்குகள் எக்ஸல் என்னும் மென்பொருள் வடிவத்தில் எழுதப்பட்டிருந்தன. செலவுகளை வகைப்படுத்தி ஒவ்வொரு வகைக்கும் எவ்வளவு செலவு என்று காட்டியது கணினித் திரை.

"ஓ! எக்ஸல்லிலேயே போட்டுட்டீங்களா? புது நோட்டு கேட்டு வாங்கினீங்களே, எதுக்கு?"

"ஸ்ரீராமஜயம் எழுதறதுக்கு! நீ முதல்லே செலவுகளைப் பாரு!"

முகுந்தன் பட்டியலைப் பார்த்தான். "என்னப்பா இது குலதெய்வம் கோவில் திருவிழான்னு ஐநூறு ரூபாய் போட்டிருக்கு?"

 "நியாயமாப் பாத்தா குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு நாம எல்லோரும் நேரில் போயிருக்கணும். அப்படிப் போயிருந்தா ஐயாயிரம் ரூபாயாவது செலவழிஞ்சிருக்கும். அது இயலாததனால ஐநூறு  ரூபா பணம் மட்டும் அனுப்பி வச்சேன்."

"என்னப்பா, இந்தக் காலத்திலே போய் குலதெய்வம் அது இதுன்னுக்கிட்டு?"

"ஏண்டா உலகம் மாறிடுச்சுங்கறதுக்காக வானத்திலே இருக்கிற சூரியன், சந்திரன், நட்சத்திரம் எல்லாம் மாறிடுதா? அது போல்தான் நாம செய்ய வேண்டிய கடமைகளும் எப்பவும் மாறாது!"

"கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டியது கடமையா? வணங்கினால் போதாதா?"

"போதும். ஆனா ஒவ்வொருத்தரும் தங்களோட வசதிக்கேத்தபடி காணிக்கை செலுத்தினாத்தான், கோவில்களை எல்லாம் பராமரிக்க முடியும். வருஷத்துக்கு ஐநூறு ரூபா கோவிலுக்குக் காணிக்கையாக் கொடுக்கறது நம்மளை மாதிரி இருக்கறவங்களால முடியாதது இல்லையே?"

"சரி. ஒத்துக்கறேன். இது மாதிரி வேறே கடமைகள் இருக்கா?"

"இருக்கு. குடும்ப வாழ்க்கையில் இருக்கறவங்க ஐந்து அற நெறிகளைப் பின்பற்றணும். முதலாவது  காலஞ்சென்ற நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வது. இரண்டாவது தெய்வத்தை வணங்குவது.  . மூன்றாவது தம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது. நான்காவது உறவினர்களை ஆதரிப்பது. ஐந்தாவது நம் குடும்பத்தைப் பேணிக்  காப்பது. மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருக்கிற மாதிரி, மனித வாழ்க்கையிலும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து கிளைகளாக விரிந்திருக்கின்றன.  இந்த ஐந்து கிளைக் கடமைகளையும் நிறைவேற்றுவதுதான் அறத்தின் ஆறு (வழி) என்று பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்த வரிசையில நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைதான் முதல்ல இருக்கு. நமக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் கடைசி இடத்தில்தான் இருக்கு!"

"அப்ப இனிமே ஒவ்வொரு மாசமும் பட்ஜெட் போடும்போது நம்மளோட செலவுகளைத் தீர்மானிக்கறத்துக்கு முன்னால முதல் நான்கு கடமைகளுக்குச செலவழிக்க வேண்டியது ஏதாவது இருக்குமான்னு பாக்கணும்."

"கரெக்ட். உதாரணமா அடுத்த மாசம் என் அப்பா அதாவது உன்னோட தாத்தாவோட திதி (இறந்த தினம்) வருது. அதுக்கு என்ன செய்யணும்னு யோசிச்சு பட்ஜெட்டில பணம் ஒதுக்கணும்."

"சரிப்பா. அடுத்த மாச பட்ஜெட்டில முதல் அயிட்டமா தாத்தா திதிக்கான செலவை எழுதிடறேன்."

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பொருள்:
மூதாதையர்கள், தெய்வம், விருந்தினர்கள், உறவினர்கள், தனது குடும்பம் என்ற ஐந்து வகையினரையும் ஆதரித்துப் போற்றுதல் என்ற அறநெறியைப் பின்பற்றுவது நம் தலையாய கடமையாகும்.

44. செல்வம் 'சேர்த்த' செல்வம் 

'முப்பந்தைந்து வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இப்போதுதான் அரசு வேலைக்கு உத்தரவு வந்தாற்போல் இருக்கிறது. அடுத்த வாரம் ஒய்வு பெறப் போகிறேன்!'

இரவில் தூக்கம் பிடிக்காதபோது தன் உத்தியோக வாழ்க்கையை அலசிப் பார்த்தான் செல்வம். வேலைக்கு உத்தரவு வந்தபோது 'உன் பெயருக்கு ஏற்றாற்போல் நீ இனி செல்வம்தான்' என்றனர் சுற்றி இருந்தவர்கள். சிலர் அப்போதே அவன் மேல் பொறாமை கொள்ள ஆரம்பித்தனர். சரியான வேலை இன்றி தாய், தம்பிகள், தங்கைகள் என்று பெரும் குடும்பத்தை வைத்துத் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவர்கள் 'எதிர்பார்த்த' வாழ்க்கை அவனுக்கு வருவதற்கு முன்பே அப்படி ஒரு பொறாமை!

ஆனால் அவன் வாழ்க்கை மற்றவர்கள் பொறாமைப் படும்படி இல்லை. காரணம் அவன் வேலையை வேலையாகச் செய்தான், வியாபாரமாக இல்லை. அவனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்தனர். அவன் மேலதிகாரிகளுக்கும் உடன் பணி புரிபவர்களுக்கும் அவன் சங்கடமாக இருந்தான். அதனால் அடிக்கடி இட மாற்றம் செய்யப்பட்டான். ஆனால்  செல்வம் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் செய்த  வேலைக்குத்தான்  மாதாமாதம் சம்பளம் வந்து கொண்டிருந்ததே!

வசதியான வாழ்க்கை வாழலாம் என்று ஆரம்பத்தில் கனவு கண்ட அவன் தம்பி தங்கைகள் அவன் மனநிலையை உணர்ந்து அடங்கிப் போனார்கள். அவன் அம்மா கூட 'பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாயே!' என்று சிலமுறை அவனிடம் குறைப்பட்டுக் கொண்டாலும், 'என் மகன் நேர்மையானவன்' என்று பெருமை கொண்டாள்.

தம்பி தங்கைகளுக்குத் தன் கடமையை முடித்தபோது அவனுக்கு வயது முப்பத்தைந்து ஆகி விட்டது. இடையில் அவன் தாய் மேற்கொண்ட திருமண முயற்சிகளை அவன் ஊக்குவிக்கவில்லை. முப்பத்தாறு வயதில் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான். வறுமையான குடும்பத்திலிருந்து வந்த வள்ளி, அரசு ஊழியரை மணம் செய்து கொண்டு வசதியாக வாழலாம் என்ற கனவுடன் வந்தாள். ஆரம்பத்தில் வாழ்க்கை அவளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், நல்ல கணவன் கிடைத்தானே என்று ஆறுதல் அடைந்தாள்.

செல்வத்துக்கு மலைப்பாக இருந்தது. சுமாரான வருமானத்தை வைத்துக்கொண்டு எத்தனை செய்து விட்டேன்! தம்பி தங்கைகள் படிப்பு, திருமணம். மாமன் என்ற முறையில் தங்கைகளின் குழந்தைகளுக்கும் பெரியப்பா என்ற 'அந்தஸ்தில்' தம்பி குழந்தைகளுக்கும் செய்த செலவுகள், அம்மாவின் மருத்துவச் செலவு, தனது ஒரே மகளையும் படிக்க வைத்துத் திருமணம் செய்வித்தது, உரிமையுடன் உதவி கேட்ட உறவினர்களுக்கும், 'இவனிடம் கேட்கலாமா?' என்று தயங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தன் சக்திக்கு மீறிச் செய்த உதவிகள்!

'சொந்த வீடு இல்லை, சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை.  நான், மனைவி, தொண்ணுறு வயது அம்மா ஆகிய மூவருக்கும் சிறிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாதா?'

சாப்பிட உட்கார்ந்தபோது வள்ளி கேட்டாள். "ஏங்க அடுத்த வாரத்திலேருந்து நீங்க ரிடையர் ஆகப் போறிங்க இல்லே?"

'இனிமேல் வருமானம் போதாதே, என்ன செய்யப் போறீங்க? வேறே எங்கயாவது வேலைக்குப் போகப் போறீங்களா? வேலைக்கு யார் கிட்டயாவது சொல்லி வச்சிருக்கீங்களா?' என்று கேட்கப் போகிறாளா?

"ஆமாம். அதுக்கு  என்ன?" என்றான். அவள் பதிலை ஊகித்ததில் குரலில் கொஞ்சம் எரிச்சல் வெளிப்பட்டது.

"இத்தனை வருஷமா ஆஃபீஸ், குடும்பம்னு பறந்துக்கிட்டிருந்தீங்க. ஒரு வேளை கூட நிம்மதியா சாப்பிட்டதில்லை. இனிமேயாவது பொறுமையா, நிம்மதியா சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடுங்க!"

செல்வத்தின் கண்களில் நீர் தளும்பியது. இன்னும் என்ன சந்தோஷம் வேண்டும் வாழ்க்கையில்?

குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள்:
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, பகிர்ந்து உண்பதை வழியாகக் கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

 45.  நல்ல மனம் வாழ்க

"சம்பளப் பணத்தைப் பங்கீடு செய்து விட்டாயா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த ஒரு லட்சம் ரூபாயில் பங்கீடு செய்தது போக 80,000 ரூபாய் மீதி இருக்கிறது. இதை எங்கே முதலீடு செய்யலாம்?" என்றாள் வாணி.

தாமோதரன் சிரித்தான், மனைவி விளையாட்டாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்ததால். கல்யாணம் ஆன புதிதில் இதே கேள்வியை எகத்தாளமாகக் கேட்டு அவன் மனதைப் புண் படுத்தியவள்தான் வாணி. இன்று பத்து வருடக் குடும்ப வாழ்க்கையில் தாமோதரனையும், வாழ்க்கையின் உண்மைகளையும் புரிந்து கொண்டபின் அவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.

"கலாவுக்குப் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்னாயே?"

"கடைசித் தேதியை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்."

"கவலைப்படாதே! பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டேன்"

"நீங்கள் பணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். பணத்தை என்னிடம் கொடுங்கள். இன்றே பள்ளிக்குப் போய்க் கட்டி விடுகிறேன். கையில் இருந்தால் செலவாகி விடும்."

"இன்றுதான் பணம் கைக்கு வரும். என் கைக்கு வந்தவுடன் உன் கைக்கு மாற்றி விடுகிறேன். பணத்தைப் பாதுகாப்பதில் நீதான் கைகாரியாயிற்றே!"

"நேற்று முரசு தொலைக்காட்சியில் 'கை கை மலர்க்கை' என்று ஒரு பழைய பாட்டு போட்டார்கள். பாடல் முழுவதும் 'கை' 'கை' என்று வரும். அந்தப் பாட்டை எழுதியது நீங்கள்தானா?"

"ஆமாம் என்று சொல்லி விடுவேன். அப்புறம் அந்தப் பாட்டுக்கு வந்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்பாய்! எதற்கு வம்பு? அந்தப் பாட்டை எழுதிய பெருமை வாலிக்கே இருக்கட்டும்!"

மாலையில் தாமோதரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே "பணம் கைக்கு வந்ததா?" என்று கேட்கவில்லை வாணி. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் கூடக் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் பெண் கலா திடீரென்று நினைவு வந்தவளாக, "அப்பா! எங்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போகிறோம். ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமாம். ஆனால் போக வேண்டும் என்று கட்டாயம் இல்லை" என்றாள்.

"கட்டாயம் இல்லையாம்! நம் பொருளாதார நிலையை உணர்ந்து பேசுகிறாள் பாருங்கள் உங்கள் பெண்" என்றாள் வாணி.

"பொதுவாகக் குழந்தைகளைக் குறை சொல்லும்போதுதான் கணவனோ மனைவியோ 'உன் பிள்ளை,' 'உன் பெண்' என்று சொல்வார்கள். நீ நம் குழந்தையைப் புகழும்போதே 'உங்கள் பெண்' என்கிறாயே! உனக்குப் பெரிய மனது" என்றான் தாமோதரன்.

"நான் இப்படிச் சொல்லாவிட்டால் எனக்குப் பெரிய மனது என்று நீங்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டீர்களே!" என்றாள் வாணி. "அது இருக்கட்டும். கட்டாயம் இல்லை என்றால் கலா உல்லாசப் பயணம் போக வேண்டாம் இல்லையா?" என்றாள் தொடர்ந்து.

தாமோதரன் சற்று  நேரம் மௌனமாக இருந்து விட்டு "இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் மகாபலிபுரம் போகலாம்" என்றான்.

"அய்யா ஜாலி!" என்று குதித்தாள் கலா.

"பிக்னிக்கா? புளியோதரை, தயிர்சாதம் எல்லாம் தயார் செய்து விடட்டுமா?" என்றாள் வாணி.

"எதற்கு? நாம்தான் உயர்தர ஓட்டலில் விருந்து சாப்பிடப் போகிறோமே!" என்றான் தாமோதரன்.

கலா உறங்கியதும் வாணி கேட்டாள் "என்ன, பணம் கைக்கு வந்ததா?"

"வந்தது. ஆனால் உடனே கை மாறி விட்டது."

"என் கைக்கல்லவா மாறி இருக்க வேண்டும்?"

"ஆமாம். ஆனால் உன் தங்கைக்குப் போய் விட்டது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"இன்று என் அலுவலகத்துக்கு  சரவணன் வந்திருந்தார்."

"யார்? சாந்தி வீட்டுக்காரரா?"

"சாட்சாத் உன் தங்கை சாந்தியின் கணவர் சரவணன்தான். பின்னே சிவபெருமானின் பிள்ளை சரவணனா என்னிடம் வந்து கடன் கேட்கப் போகிறார்?"

"கடன் கேட்டாரா?"

"அவர்கள் பையனுக்கும் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டி இருக்கிறதே! அவனுடைய பள்ளியில் இன்றுதான் கடைசி நாளாம். கலாவுக்குப் பணம் கட்டத்தான் இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறதே?""

"உடனே கடன் வாங்கிய பணத்தை நீங்கள் அவரிடம் தூக்கிக் கொடுத்து விட்டீர்களாக்கும்?"

"தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு அவ்வளவு ஒன்றும் கனமான தொகை இல்லையே அது!"

வாணி மௌனமாக இருந்தாள்.

"தன் கைக்கு வர வேண்டிய பணம் தங்கைக்குப் போய் விட்டதே என்று யோசிக்கிறாயா?"

"இல்லை. இதையே நீங்கள் உங்கள் தங்கைக்குக் கொடுத்திருந்தால் என்னால் இதை இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!"

தாமோதரன் வியப்புடன் வாணியைப் பார்த்தான்.

வாணி இலேசாகச் சிரித்து விட்டு, "சரி கலாவுக்குப் பணம் கட்ட என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.

"அதுதான் நீயே சொல்லி விட்டாயே! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"

ஞாயிறன்று மகாபலிபுரத்தில் கலா மிகவும் உற்சாகமாக இருந்தாள். 'கண்ணனின் வெண்ணெய் உருண்டை' என்று அழைக்கப்படும் மெல்லிய அடித்தளத்தின் மீது பல நூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பெரிய பாறையைப் பார்த்து வியந்தாள்.

"எப்படி அப்பா! ஏதோ ஒட்ட வைத்த மாதிரி இவ்வளவு சிறிய அடித்தளத்தின் மீது எப்படி இந்த கனமான பாறை நிற்கிறது? அதிசயமாக இருக்கிறதே!" என்றாள்.

"இது என்ன அதிசயம்? ஒல்லிப் பிச்சானாக  இருக்கும் உன் அப்பா எவ்வளவு கனமான பாறையையும் தன் சுண்டு விரலில் தாங்குவார்!" என்றாள் வாணி.

"அதற்குக் காரணம் இந்த ஒல்லிப்பிச்சானை ஒரு குண்டுப் பிச்சான் தாங்கிக் கொண்டிருப்பதுதான்!" என்றான் தாமோதரன்.

"என்னையா குண்டுப்பிச்சான் என்கிறீர்கள்? அந்தப் பாறையைத் தூக்கி உங்கள் மேல் போட்டு விடுவேன்!" என்றாள் வாணி.

ஆனால் தாமோதரன் மேல் வந்து விழுந்தது அவள் வீசிய சிறு கூழாங்கல்தான்!

குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பொருள்:
இல்வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், அறத்தின் வழியில் செல்வதாகவும் இருக்குமானால், அதுதான் அதன் பண்பு. இல்வாழ்க்கையின் பயனும் அதுதான்.

46. தொலைபேசிச் செய்தி

அதிகாலையில் அழைப்பு மணி கேட்டபோது பால் போடும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கதவைத் திறந்தாள் உமா. வாசலில் கிரிஜாவைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. கிரிஜாவிடம் தெரிந்த படபடப்பைக் கவனித்து அவளை உள்ளே அழைத்து வந்தாள்.

"உன் வீட்டுக்காரரை எழுப்ப முடியுமா? அவசரம்!" என்றாள் கிரிஜா உள்ளே வரும்போதே. அவள் குரல் உடைந்து போயிருந்தது. ஏதாவது கேட்டால் அழுது விடுவாள் போல இருந்தது, அதனால்  அவளை உட்கார வைத்து விட்டு சேகரை அழைத்து வந்தாள் உமா.

சேகரைப் பார்த்ததுமே "என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டார் சார் உங்க நண்பர்!" என்று சொல்லி விட்டுப் பெரிதாக அழத் தொடங்கினாள் கிரிஜா.

அவள் கணவன் ராஜு இரவில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அழுகைக்கிடையே சொல்லி முடித்தாள் கிரிஜா.
 .
"கவலைப்படாதீங்க. ராஜு உங்களை விட்டுட்டுப் போயிட மாட்டான்..." என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிரிஜா ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள்.

தனக்கு இல்லறத்தில் பற்று இல்லாததால் வேறு ஊருக்குப் போய்த் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டுப் போயிருந்தான் ராஜு.

சேகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிரிஜாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் தன் பெண்ணையும், பையனையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து நடுங்கினாள்.

ஒரு வாரம் கழிந்ததும், தன் உறவினர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதை கிரிஜா புரிந்து கொண்டாள். சேகரும், உமாவும் அவளுக்கு உறுதுணையாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களால் எவ்வளவுதான் உதவ முடியும்? 

கிரிஜாவுக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று பார்ப்பதாக சேகர் சொல்லி இருந்தான். ஆனால் அவனுக்குத் தெரிந்த ஒரு சில இடங்களிலிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

யாரோ ஒருவர் இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்ட்டாகத் தொழில் புரியலாம் என்று யோசனை சொல்ல, கிரிஜா அவர் குறிப்பிட்ட இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜண்ட்டாகச் சேர்ந்தாள். அதற்கு முன் அப்படி ஒரு நிறுவனம் இருப்பது கூட அவளுக்குத் தெரியாது.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வெட்கத்தை விட்டுத் தன் எல்லா உறவினர்களிடமும் போய்த் தனக்கு உதவி செய்வதற்காகவாவது ஏதாவது பாலிசி எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினாள். பெரும்பாலோர் முடியாது என்று சொல்லி விட்டார்கள் - சிலர் வருத்தத்துடனும், சிலர் பணிவுடனும், சிலர் நிர்தாட்சண்யமாகவும். 

ஆயினும், அவள் மீது  இரக்கப்பட்டோ, அவளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ சிலர் எடுத்துக்கொண்ட பாலிசிகள் அவளது சுய தொழிலுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தன.

உறவினர்கள், நண்பர்கள் வட்டம் முடிந்ததும், அறிமுகம் இல்லாதவர்களை அணுகினால் என்ன என்று கிரிஜாவுக்குத் தோன்றியது. தெரிந்தவர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல் கேட்பதை விடத் தெரியாதவர்களிடம் போய் ஒரு  விற்பனையாளராகப் பேசுவது எளிதாக இருக்கும் என்று தோன்றியது.

அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள், கோவில்கள்  என்று தினமும் சில இடங்களுக்குச் சென்றாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏமாற்றமே கிடைத்தாலும், சில நாட்கள் கழித்து சிலர் பாலிசி எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

சில மாதங்கள் கழித்து அவளுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. அவளிடம் பாலிசி எடுத்துக்கொண்ட நபர்கள் சொல்லி, அவர்களின்  நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் தாங்களாகவே இவளை அணுகினர்.

அவளது கடின உழைப்பும், விடாமுயற்சியும், வாடிக்கையாளர்களிடம் அவள் ஏற்படுத்திக் கொண்ட நல்லெண்ணமும் சேர்ந்து  அவளுக்குப் புதிய வாடிக்கையாளர்களும், பழைய வாடிக்கையாளர்களிடம் புதிய பாலிசிகளும் கிடைக்க வழி வகுத்தன. இரண்டு வருட முடிவில் அவளுக்குக் கணிசமான வருமானம் வரத் தொடங்கியது.

சேகர்-உமா குடும்பத்துடனான அவளது நட்பு தொடர்ந்தது. தன் பொருளாதார நிலை உயர்ந்த பிறகும் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் கிரிஜா எதையும் செய்வதில்லை. சேகர்-உமாவின் பையனும் பெண்ணும் படித்த அதே பள்ளியில்தான் தன் குழந்தைகளையும் படிக்க வைத்தாள்.

சேகர் குடும்பத்தை விடப் பொருளாதார நிலையில் உயர்ந்த பிறகும், கிரிஜா அவர்கள் குடும்பத்துக்குக் கடமைப்பட்டவள் போலவே நடந்து கொண்டாள். அவர்கள் சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்குச் சிறிய உதவிகளை அவ்வப்போது செய்து வந்தாள்.

ராஜு கிரிஜாவை விட்டுப் போய் சுமார் ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. சேகர் ஒரு நாள் பரபரப்பாக கிரிஜாவைத் தேடி வந்தான். "கிரிஜா, ராஜுவைப் பார்த்தேன்" என்றான்.

"அப்படியா?" என்றாள் கிரிஜா ஆர்வம் இல்லாமல்.

"ஆஃபீஸ் விஷயமா விஜயவாடாவுக்குப் போனபோது அவனைப் பாத்தேன். லெட்டர்ல எழுதிட்டுப் போன மாதிரி அவன் சன்யாசியாகத்தான் இருக்கான். சாரி. இனிமே இருக்கார்னுதான் சொல்லணும். ஏன்னா இப்ப அவர் ஒரு மடத்துக்குத் தலைவரா இருக்கார். அவரைச் சுத்திப் பல சிஷ்யங்க, இன்னும் பல மனுஷங்க!"

"ம்ம்..."

"தற்செயலா ஒரு போஸ்டர்ல அவரோட ஃபோட்டோவைப் பாத்தேன். என்னதான் தாடி மீசையெல்லாம் இருந்தாலும் அவரோட மூஞ்சி எனக்கு அடையாளம்  தெரிஞ்சது. மடத்துல ஏதோ ஒரு மீட்டிங். அதுக்குத்தான் போஸ்டர் போட்டிருந்தாங்க. மீட்டிங்குக்குப் போனேன். நல்லாவே பேசினார். நம்ம ராஜுவுக்கு இவ்வளவு ஆன்மீக ஞானம் எப்படி வந்ததுன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது.

"மீட்டிங் முடிஞ்சதும் அவரைப் பாத்துப் பேசினேன். எங்கிட்ட பழைய  மாதிரிதான் பேசினார். எனக்குத்தான் அவரை 'வா போ'ன்னு பேசறது சங்கடமா இருந்தது. நல்லவேளையா கூட யாரும் இல்லை. மத்தவங்களை வெளியில போகச் சொல்லிட்டுத்தான் எங்கிட்ட பேசினார். உங்களைப் பத்தியெல்லாம் விசாரிச்சார்."

"விசாரிக்காம இருப்பாரா என்ன?"

"சொன்னேன். உங்களோட முன்னேற்றத்தைப் பத்திக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். தன்னோட பிரார்த்தனை வீண் போகலேன்னு  சந்தோஷப்பட்டார்."

"அப்புறம்?"

"அடுத்த மாசம் நம் ஊருக்கு வராராம். நீங்களும் குழந்தைகளும் அவரை அவர் தங்கப் போற மடத்தில சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்னு சொல்லச் சொன்னார்."

"எவ்வளவு பெரிய மனசு அவருக்கு! ஆமாம். உங்க கிட்ட அவரோட ஃபோன் நம்பர் இருக்கா?'

"இருக்கு. பேசறீங்களா?"

"நான் பேசப் போறதில்லை. நீங்க பேசணும், எனக்காக."

"என்ன பேசணும்? சொல்லுங்க."

"நீங்களும் அவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பொருளாதார நிலை, குடும்ப சூழ்நிலை உள்ளவங்க. நீங்க உங்க மனைவி குழந்தைகளோட அழகா இல்லறம் நடத்திக்கிட்டிருக்கீங்க. அவர் என்னை விட்டுப் போனதும் நானும் ஒரு மாதிரி சமாளிச்சு கணவர் இல்லாமலேயே இல்லறம் நடத்திக்கிட்டிருக்கேன். நீங்க உங்க குடும்பத்தோடயும், நான் என் குடும்பத்தோடயும் சந்தோஷமா இருக்கோம். துறவறத்தைத் தேடிப் போன உங்க நண்பரும் நம்மளை மாதிரி சந்தோஷமா இருக்காரான்னு முதல்லே கேளுங்க."

"கிரிஜா! அவசரப்படாதீங்க!"

"நீங்க இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணி இதைக் கேளுங்க. நான் கேக்கச் சொல்றேன்னு சொல்லிக் கேளுங்க."

"நீங்க பக்கத்தில இருக்கீங்கன்னு அவர்கிட்ட சொல்லலாம் இல்லே?"

"அதை அவரே தெரிஞ்சுப்பாரு."

"எப்படி? ஃபோனை நீங்க வாங்கிப் பேசப் போறீங்களா?"

"நீங்க பேசும்போது உங்களுக்கே தெரியும்!"

சேகர் ராஜுவுக்கு ஃபோன் செய்து தயக்கத்துடன் கிரிஜா கேட்கச் சொன்னதை அப்படியே கேட்டான்.

சேகர் பேசி முடித்ததும், மறுமுனையிலிருந்து பதில் வருவதற்கு முன்பே, கிரிஜா சற்றே உரத்த குரலில் பேசினாள்.

"சேகர் சார்! கொஞ்சம் இருங்க. இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவரோட மனச்சாட்சியைத் தட்டி எழுப்பத்தான் இந்தக் கேள்வி. எங்களை ஆதரிக்க வேண்டிய சமயத்தில அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டு இப்ப எங்களை வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொல்றாரு!

"நாங்க யாரும் ராஜு சுவாமிகள் கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கிக்கப் போறதில்லை. அவர் விரும்பினா, சன்யாசத்தை விட்டுட்டு மறுபடி எங்களோட வந்து சேந்தா எங்களுக்கு சந்தோஷம்தான். எனக்குக் கணவரா எங்க குழந்தைகளுக்கு அப்பாவா அவரு  திரும்பக் கெடச்சா அதை விடப் பெரிய சந்தோஷம்  வேறே என்ன இருக்க முடியும்?

"பழசையெல்லாம் நான் கிளற மாட்டேன். அவர் வேலைக்குப் போனாலும் சரி,  சொந்தத் தொழில் ஏதாவது செஞ்சாலும் சரி அல்லது வேலைக்குப் போகாம சும்மா இருந்தாலும் சரி. அவர் எப்படி வேணும்னா இருந்துக்கட்டும்.

"கடவுளோட அருளாலயும், உங்களை மாதிரி நல்ல நண்பர்களோட உதவியாலேயும்  நானே என் குடும்பத்துக்குத் தேவையான அளவு சம்பாதிக்கிறேன். கடைசி வரையிலேயும் எங்க எல்லாரையும் என்னால காப்பாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"உங்க நண்பருக்கு இல்லறத்தில விருப்பம் இருந்தா அவரைத் திரும்பி வரச் சொல்லுங்க. இல்லை துறவியா இருக்கறதுதான் அவருக்கு சந்தோஷம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டும். நாங்க ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னா அதுக்கு இந்த ஊரிலேயே நிறைய சாமியாருங்க இருக்காங்க!"

மறுமுனையிலிருந்து நீண்ட நேரத்துக்கு பதில் வரவில்லை.

குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.

பொருள்:
ஒருவன் அற வழியில் இல்வாழ்க்கை நடத்தினால், (துறவறம் போன்ற)  வேறு வழியில் போய் அவன் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

47. மணியின் மனக்குழப்பம்

பாலுவும் மணியும் பள்ளி நாட்களிலிருந்தே மற்ற சிறுவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தனர். ஒழுக்கம், அடக்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதை, படிப்பில் நாட்டம் என்ற சிறப்பு இயல்புகளால் அவர்கள் இருவரும் மற்ற மாணவர்களால் கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

இருவரும் வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளுக்குப் போனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது. இருவரையும் இணைத்தது ஆன்மீகச் சிந்தனை.

பாலுவுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீகத் தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மணிக்கு பாலுவின் திருமணம் ஒரு அதிர்ச்சிதான்.

ஆயினும் மணி பாலுவிடம் இது பற்றிப் பேசவில்லை. பாலுவின் மனைவி எப்படி இருப்பாளோ, பாலு தன்னிடம் நட்பு வைத்திருப்பதை விரும்புவாளோ என்ற கவலைகள் மணியிடம் இருந்தன.

ஆனால் பாலுவின் மனைவி மல்லிகாவைப் பார்த்ததும் அவனது ஐயங்கள் மறைந்து விட்டன.

"உங்க நண்பர் உங்களைப் பத்திச் சொல்லி இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருந்தீங்களோ அப்படியே  இருங்க. உங்க நட்புக்கு என்னால எந்தப் பிரச்னையும் வராது" என்று முதல் சந்திப்பிலேயே அவனிடம் சொன்னாள்.

ஆயினும் திருமணத்துக்குப் பிறகு பாலுவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எப்போதும் குடும்பம், மனைவி என்றே பேசிக் கொண்டிருந்தான். மணியோடு செலவிட்ட நேரம் மிகவும் குறைந்து விட்டது. மணி எங்காவது அழைத்தால் கூட வருவதில்லை. பல சமயங்களில் மல்லிகாவே அவனைப் போகச் சொல்லி அனுப்பினாள். இந்த மாற்றங்களைப் பற்றி பாலுவிடம் மணியால் கேட்க முடியவில்லை.

நாளடைவில் மணி தானாகவே பாலுவை அழைப்பதைக் குறைத்துக் கொண்டான். கோவில்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி வெளியூர் செல்ல ஆரம்பித்தான். ஆயினும் மனதுக்குள் எதையோ இழந்து விட்டது போல் தோன்றிக்கொண்டே இருந்தது.

தன் மனதில் ஓடும் எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று தோன்றியது. அப்போது  அவன் மாமா ரகுபதியின் நினைவு வந்தது. ஒரு விதத்தில் ரகுபதிதான் மணிக்கு வழிகாட்டி. திருமணம் செய்து கொள்ளாமல் கோவில், ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருத்தல யாத்திரை என்று வாழ்க்கையைக் கழித்து வந்தவர் அவர். ஐம்பது வயதை நெருங்கிய நிலையில் இருந்தார்.

அரசு அலுவலகத்தில் பணி புரிந்து வந்த அவர் தனது விடுமுறை நாட்களையும் வருமானத்தையும் ஆன்மீகத்துக்காகவே செலவழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பாலுவையும் தெரியும். அதனால் அவரிடம் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து ஒரு விடுமுறை நாளன்று அவர் வீட்டுக்குப் போனான்.

அவரை ஒரு நண்பராக நினைத்துத் தன் எண்ணங்களை அவரிடம் கொட்டினான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு, "பாலு என்ன செய்யணும்னு நீ எதிர்பாக்கறே?" என்றார் ரகுபதி .

"தெரியல. ஆனா அவனை இழந்துட்ட மாதிரி இருக்கு."

"பாலு இப்ப கோவிலுக்கெல்லாம் வரதில்லையா?"

"என்னோட வரதில்லை. அவன் மனைவியோட போவான்."

"அப்படித்தானே அவனால செய்ய முடியும்? மனைவயை வீட்டில விட்டுட்டு உன்னோட சுத்தணும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?"

"நான் அப்படிச் சொல்லலே!"

"எனக்குப் புரியுது. உனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே. எதையோ இழந்துட்ட மாதிரி இருக்கு."

"ஆமாம்."

"நீ பாலுவை இழந்துட்டது ஓரளவுக்கு உண்மைதான். அந்த இழப்பை மறக்கறதுக்கு உனக்கு ஒரு வழி இருக்கு."

"என்ன அது?"

"நீயும் கல்யாணம் பண்ணிக்க!"

"இல்லை. நான் கல்யாணமே பண்ணிக்காம கடவுள் பக்தி, சமூக சேவை இதிலெல்லாம் ஈடுபடலாம்னு பாக்கறேன்!"

"அப்படியே செய்யி. ஏன் பாலு உன்னோட அதிகம் வரதில்லேன்னு கவலைப்படற?"

"இல்லை. பாலுவும் என்னை மாதிரியே கல்யாணம் பண்ணிக்காம இருப்பான்னு எதிர்பாத்தேன்."

"நீ சொல்றதிலேருந்து உனக்கு ஒரு துணை தேவைப்படுதுன்னு தெரியுது. இத்தனை நாளா பாலு உனக்குத் துணையா இருந்தான். இனிமே ஒரு பொண்ணைத்  துணையா வச்சுக்க வேண்டியதுதான்!"

"இல்லை."

"நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது. சின்ன வயசில பல பேருக்கு இது மாதிரி எண்ணங்கள்ளாம் வரும். 'நாம கல்யாணமே பண்ணிக்காம நம்மளைப் பெத்தவங்களையும், கூடப் பிறந்தவங்களையும் காப்பாத்தணும், கல்யாணமே பண்ணிக்காம சமூக சேவை செய்யணும், கல்யாணமே பண்ணிக்காம பக்தி நெறியில ஈடுபடணும், கல்யாணமே பண்ணிக்காம அரசியல்ல சேந்து இந்த நாட்டைத் திருத்தணும், கல்யாணமே பண்ணிக்காம உல்லாசமா வாழணும்' இது மாதிரியெல்லாம்.

"இந்த எல்லா எண்ணங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்கறதுதான். கல்யாணம் பண்ணிக்கிட்டா பல பொறுப்புகள் வந்துடும். அதோட மனைவியோட விருப்பத்தையும் அனுசரிச்சு நடக்கணும். இதனால நம்ம லட்சிய வாழ்க்கையை வாழ முடியாது என்கிற சிந்தனை சரியானதுதான்.

"ஆனா நடைமுறையில, ஒரு துணை இல்லாம தனியா இருக்கறது எல்லாராலும் முடியாது. கல்யாணம் பண்ணிக்கிட்டே ஓரளவுக்கு நம்ம லட்சியங்களைப் பின்பற்றுவதுதான் பிராக்டிகலா இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம நூறு சதவீதம் லட்சியவாதியா இருக்கறதை விடக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து சதவீதம் லட்சியவாதியா இருக்கறதுதான் சிறப்பு. அதில கிடைக்கிற மன நிறைவும் சந்தோஷமும் தனியா வாழறதில கிடைக்காது.

"மனசில ஒரு வெறுமையோட இருந்துக்கிட்டு ஆன்மீகத்திலேயோ சமூக சேவையிலோ ஈடுபடறதில ஒரு பயனும் இல்லை. பிரம்மச்சரியம், சன்யாசம் இதெல்லாம் தப்புன்னு நான் சொல்லலே. இதெல்லாம் ஒரு சில பேருக்குத்தான் ஒத்து வரும்."

"உங்களை மாதிரி ஒரு சில பேரா?"

"இல்லேப்பா. நானும் ஒரு வெறுமையை உணர்ந்துக்கிட்டுத்தான் இருக்கேன். இத்தனை நாளா மனசுக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு இயந்திரம் மாதிரி இருந்துக்கிட்டிருந்தேன். இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்."

"என்ன முடிவு?"

"என் ஆஃபீசில கணவனை இழந்த ஒரு பொண்ணு வேலை செய்யறாங்க. நானும் அவங்களும் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் எளிமையா எங்க கல்யாணம் நடக்கும். உன்னை நிச்சயமாக் கூப்பிடுவேன்."

மணி சற்று நேரம் மௌனமாக  இருந்தான்.

"உன்னோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்து வாழக்கூடிய ஒரு பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. ஏன், உன்னைப்பத்தி நல்லாத் தெரிஞ்ச பாலுவோட மனிவியே உனக்கு ஏத்த ஒரு பொண்ணாப் பாத்துக் கொடுப்பா. யோசனை செஞ்சு பாரு."

மணி யோசிக்க ஆரம்பித்தான்.

குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

பொருள்:
இல்லறத்துக்கு உரிய இயல்போடு இல்லற வாழ்க்கை வாழ்பவன், (துறவறம் போன்ற) பிற வழிகளைக் கடைப்பிடித்து இறைவனை அடைய முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன். (வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா வழிகளிலும் தலை சிறந்தது இல்லறமே.)

48. குடியும் குடித்தனமும் 

"உங்களுக்குக் குடிப்பழக்கம் இருக்குன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலையே!" என்றாள் ரம்யா.

"அப்படியா? அப்படின்னா இந்தப் பழக்கம் எனக்கு நம்ம கல்யாணத்துக்கு மறுநாளிலேருந்துதான் ஆரம்பிச்சதுன்னு வச்சுக்கோ!" என்றான் நடராஜ்.

இவனிடம் பேசுவதில் பயன் இருக்காது என்று ரம்யா புரிந்து கொண்டாள். மௌனமாக அவன் குடிப் பழக்கத்தைச் சகித்துக் கொண்டாள். வாழ்க்கை நரகமாகியது. சிறிது காலத்துக்குப் பிறகு இந்த வாழ்க்கையைத் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று தோன்றியதும் விவாகரத்துக்காக ஒரு பெண் வக்கீலை அணுகினாள்.

வக்கீல் வீட்டுக்கு இரண்டு மூன்று வரை போய் வந்தபோது ஒருமுறை வக்கீல் நளினியின் கணவன் விசுவைச் சந்தித்தாள். விசுவிடம் பேசிக் கொண்டிருந்ததில்  நடராஜ் விசுவின் பள்ளி நண்பன் என்றும் ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இருவருக்கும் தொடர்பு விட்டுப் போய் விட்டது என்றும் தெரிந்தது.

தற்செயலாக நடராஜைச் சந்திப்பது போல் விசு அவனைச் சந்தித்தான். பிறகு இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ரம்யாவை முன்பே தெரிந்தது போல் விசுவோ நளினியோ காட்டிக் கொள்ளவில்லை.

பின்பு ஒரு முறை ரம்யா நளினியைத் தனியாகச் சந்தித்தபோது விவாகரத்துக்கு அவசரப்பட வேண்டாம் என்று யோசனை சொன்னாள் நளினி.

இரு குடும்பங்களும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. விசு தங்கள் இள வயது நட்பைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டியவனாக நடராஜுடன் அதிக நேரம் செலவழித்தான். நளினியின் ஆலோசனைப்படி ரம்யா நடராஜிடம் அவன் குடிப்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.

ஏழெட்டு மாதங்களில் நடராஜிடம் நிறைய மாறுதல்கள்  தெரிந்தன. அவன் குடிப்பழக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் தோன்றி இருந்தது. முன்பு போல் இல்லாமல் ரம்யாவிடம் அன்பாகவும், கனிவாகவும் பேச ஆரம்பித்தான். தன் நண்பன் விசுவின் குணத்தைப் பற்றியும் அவன் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உயர்வாகப் பேசினான்.

ரம்யாவுக்குத் தன் விவாகரத்து எண்ணத்தைக் கை விட வேண்டி இருக்கும் என்று தோன்றியது.

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்:
மற்றவர்களை அறவழியில் நடக்க வைத்துத் தானும் அறவழியில் நடப்பவரின் இல்வாழ்க்கை தவம் செய்பவர்களின் வாழ்க்கை முறையை விட மேன்மை உடையதாகும்.

49. வெள்ளி விழாவில் வெளிப்பட்ட உணர்வுகள்

"இருபத்தைந்தாவது திருமண விழாவைக் கொண்டாடணுமா என்ன?" என்றான் மாதவன்.

"நான் கொண்டாடச் சொல்லலே! உங்க பொண்ணுதான் சொல்றா!" என்றாள் ரமா.

மாதவனுக்குப் பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிப்பதில்லை. மகள் சுகன்யாவின் விருப்பத்துக்காக ஒப்புக் கொண்டான்.

நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு ஒரு ஓட்டலில் கொண்டாடினார்கள்.

வந்த உறவினர்கள் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினார்கள். சிலர் வாழ்த்திப் பேசினார்கள். பிறகு மாதவனையும், ரமாவையும் பேசச் சொன்னார்கள்.

"என்னுடைய கல்யாணம் என் அப்பா அம்மா பார்த்துச் செய்து வைத்தது. என்னைப் பொறுத்தவரை ரமா எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். என்னைப் பத்தி அவள் என்ன  நினைக்கிறாளோ தெரியாது! எனக்கு அவ்வளவா வசதி கிடையாது. ரமாவுக்குப் புடவை, நகைன்னு நான் அதிகமா வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. எங்களால முடிஞ்ச அளவுக்கு சுகன்யாவை வளர்த்திருக்கோம். அவ நல்லா படிச்சு ஒரு வேலையையும் தேடிக்கிட்டா. இது எனக்குத் திருப்தியா இருக்கு. இருபத்தைந்து வருஷத் திருமண வாழ்க்கை ஒரு சாதனையாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா நீங்க எல்லாரும் வந்து எங்களை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மாதவன் சுருக்கமாகப் பேசி பலத்த கைதட்டல் பெற்றான்.

பேச மறுத்த ராமாவை வற்புறுத்திப் பேச வைத்தார்கள். அவள் தயக்கத்துடன் பேசினாள். "என்னை அவர் தனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்னு சொன்னதும் என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. எங்களுக்குள்ள அப்பப்ப சண்டை வரும்.  ஒரு வேளை  அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, வேண்டா வெறுப்பாத்தான் குடித்தனம் நடத்தறாரோன்னு நான் சில  சமயம் நினைச்சிருக்கேன். நான்தான் அவரைச் சரியாப்  புரிஞ்சுக்கலையோன்னு இப்ப நினைக்கிறேன். ஆனா அவர் எப்பவுமே என்கிட்டே கோபமா இருந்தது கிடையாது. சண்டை போட்டா கூட கொஞ்ச நேரம் கழிச்சு இன்னைக்கு என்ன சமையல்னு கேட்டுக்கிட்டே சமையல்கட்டுக்கு வந்துடுவார்."

பிறகு சுகன்யா பேசினாள். "எங்க அம்மா அப்பா சண்டை போட்டுக்கிட்டது என்னைப் பத்தித்தான். ஆரம்பத்தில நான் சரியாப் படிக்கலை. அதனால என்னை டியூஷனுக்கு அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. 'டியூஷன் எதுக்கு? நீதான் படிச்சிருக்கியே! நீயே சொல்லிக் கொடுக்கலாமே' ன்னு அப்பா சொல்லுவாரு. 'நீங்களும்தான் படிச்சிருக்கீங்க. நீங்க சொல்லித் தரலாமே'ன்னு அம்மா சொல்லுவாங்க. 'எனக்கு சொல்லித்தரத் தெரியாது'ம்பாரு அப்பா. 'அது மாதிரிதான் எனக்கும். அதனாலதான் டியூஷனுக்கு அனுப்பச் சொல்றேன்'ன்னு அம்மா சொல்லுவாங்க. இது மாதிரி பல சமயங்களில என்னாலதான் அவங்களுக்குள்ள சண்டை வரும். கொஞ்சம் பெரிய கிளாசுக்கு வந்ததும் நல்லாப் படிக்கறது ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு நானே கஷ்டப்பட்டுப் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறமும் என்னை எந்த கோர்ஸில சேக்கலாம்னு சண்டை போட்டுப்பாங்க. ஆனா நான் எனக்கு இஷ்டப்பட்ட கோர்ஸிலதான் சேர்ந்தேன். இப்ப படிப்பை முடிச்சு வேலையிலும் சேர்ந்தாச்சு. இனிமே அவங்க என்னைப் பத்தி சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்."

"ஏன் இருக்காது? உன் கல்யாண விஷயமா சண்டை போடுவோமே!" என்றாள் ரமா சிரித்தபடி.

"நீங்க ரெண்டு பேரும் எப்படிப்பட்ட மாப்பிளை பார்க்கறதுன்னு சண்டை போட்டுப்பீங்க. ஆனா உங்க பொண்ணு அவளுக்கு இஷ்டமான படிப்பில சேந்த மாதிரி அவளுக்கு ஏத்த பையனை அவளே தேர்ந்தெடுக்கப் போறா!" என்று யாரோ சொல்ல அங்கே பெரிதாக ஒரு சிரிப்பலை  எழுந்தது.

குறள் 49:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பொருள்:
அறம் என்று கருதப்படுவது இல்வாழ்க்கையே ஆகும் அந்த இல்வாழ்க்கை பிறர் பழித்துப் பேச இடம் கொடுக்காமல் சிறப்பாக இருந்தால் நல்லது.

50. மனிதனும் தெய்வமாகலாம்

"அப்பா! அமரர் என்றால் யார்?"

"அமரர் என்றால் தேவர்."

"தேவர் என்றால்?"

"தேவர் என்றால் தேவ லோகத்தில் அல்லது சொர்க்கத்தில் இருப்பவர். ஒருவர் இந்த உலகத்தில் இருக்கும்போது நல்ல காரியங்களைச் செய்தால், இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் செல்வார். அங்கே தேவர் போல் வாழ்வார். அதனால்தான் இறந்து போனவர்களை 'அமரர்' என்று சொல்கிறோம். இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் சென்றிருப்பார் என்ற விருப்பத்திலும் நம்பிக்கையிலும் சொல்லப்படுவது இந்த வார்த்தை."

"அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் அமரர் இல்லையா?"

"உயிரோடு இருப்பவர்களைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை" என்றார் குணசீலன் எச்சரிக்கை உணர்வுடன்.

பள்ளியில் படிக்கும் பத்து வயது மகனின் கேள்வி குணசீலனின் மனதில் திரும்பத் திரும்ப மேலெழும்பிக்கொண்டே இருந்தது. தனக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை நினைத்துப் பார்த்தார். அவர்களில் யாரையாவது கடவுளுக்கு நிகரானவர்களாகச் சொல்ல முடியுமா? தெரியவில்லை.

அவருக்கு மிகவும் விருப்பமான பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.'

எப்படி?

அந்தப் பாடலிலேயே சில குறிப்புகள் இருந்தன. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தெய்வம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எவராலாவது வாழ முடியுமா?

அன்று மாலை ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குச் சென்றார் குணசீலன். சொற்பொழிவாற்றிய அறிஞர் சொன்ன ஒரு விஷயம் குணசீலனின் சிந்தனையைத் தூண்டியது. "விண்ணுலகம் சென்றால் அங்கே அமிர்தம் குடிக்கலாம். அமிர்தம் என்பது என்ன? அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு பானம். இந்த மண்ணுலகத்திலேயே நமக்கு அமிர்தம் கிடைத்தால் இங்கேயே நாம் தேவ வாழ்க்கை வாழலாமே! மரணத்துக்குப் பின் கிடைக்கப் போகும் அமர வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க வேண்டாமே!

"சரி. அந்த அமிர்தம் எங்கே கிடைக்கும்? குளிர்பானங்கள் விற்கும் கடைகளிலோ, மதுபானம் விற்கும் இடங்களிலோ கிடைக்குமா? கிடைக்காது. வாழ்க்கையை ஒரு இனிமையான அனுபவமாகக் கருதி, வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொண்டு தன்னால் இயன்ற வரை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பவன் குடிக்கும் தண்ணீர் கூட அமிர்தம்தான். அத்தகைய மனிதர்கள்தான் தேவர்கள் அல்லது அமரர்கள்."

இந்தப் பேச்சு குணசீலனின் சிந்தனையைக் கிளறியது.

சொற்பொழிவாற்றிய பெரியவர் அவர் சொன்னது போன்ற தேவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாரா? தெரியவில்லை. ஆனால் அவர் மனைவியை அவர் ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையாக இருந்தால் அவர் வாழும் வாழ்க்கையை தெய்வீகமான வாழ்க்கை என்று சொல்ல முடியுமா? தனது ஆன்மீகப் பணிக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்ததாக அவர் காரணம் சொல்லலாம், ஆனாலும் அது ஒரு களங்கம்தானே?

இதைப்பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

தன் நண்பர் பூபதியின் வீட்டிற்குச் சென்றார் குணசீலன். பூபதி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். அதனால் அவரிடம் அந்த ஆன்மீகச் சொற்பொழிவைப் பற்றிப் பேசி விட்டு மண்ணுலகிலேயே தேவ வாழ்க்கை வாழ்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தன் ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

பூபதிக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. குணசீலன் தன் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில்,யோசனையுடன் விடை பெற்றார்.

குணசீலன் சென்றதும், பூபதியிடம் அவர் மனைவி கேட்டாள். "என்ன உங்க நண்பர் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் கேட்கறாரு? சந்நியாசி ஆயிடுவார் போல இருக்கே!"

"அப்படி இல்லை. சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தறதனாலதான் அவருக்கு இப்படிப்பட்ட சிந்தனையே வந்திருக்கு" என்றார் பூபதி.

"எப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என்னோட கம்பெனியிலே மானேஜரா இருக்கேன். அதனால இதற்கு அடுத்தபடியான ஜெனரல் மானேஜர் பதவிக்கு உயர முடியுமான்னு யோசிக்கிறேன். நான் ஒரு கிளர்க்கா இருந்தா இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு வருமா? மனுஷ வாழ்க்கையைச் சிறப்பா வாழறதாலதான் தேவ  வாழ்க்கையைப் பற்றி  அவரால யோசிக்க முடியுது."

"அவர் நல்ல மனுஷர்னு தெரியும். ஆனா இல்லற வாழ்க்கையைச் சிறப்பா வாழறாருன்னு எப்படிச் சொல்றீங்க?"

"அரசாங்க வேலையில இருந்தாலும் நேர்மையா இருக்கறதினால மத்த சிலர் மாதிரி அவரால ரொம்ப வசதியான வாழ்க்கை வாழ முடியல. இதனால அவர் மனைவிக்கு அவர் மேல கோபம். தன்னோட கோபத்தை அவங்க தினசரி வாழ்க்கையில பல விதத்திலும் வெளிப்படுத்தறாங்க.

"ஆனா குணசீலன் அதைப்பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, தன் மனைவிக்கும் மகனுக்கும் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாச் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதோட இல்லாம மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்காரு. அவர் மனைவியோட சொந்தக்காரங்க பலருக்கே அவரு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அது அவர் மனைவிக்கும் தெரியும். ஆனாலும்  அவங்க தன் மனசை மாத்திக்கல! மத்தவங்க மாதிரி தன்னால வசதியா, ஆடம்பரமா வாழ முடியலியேங்கற கோபம் அவங்களுக்கு நிறைய இருக்கு.

"ஆனா குணசீலன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம, மனுஷனா இருந்துக்கிட்டே தேவ வாழ்க்கை வாழ முடியுமான்னு சிந்திச்சுக்கிட்டிருக்காருன்னா எப்படிப்பட்ட மனசு அவரோடதுன்னு பாரு!"

அவர் மனைவி மௌனமாக இருந்தாள்.

"அவர் கேட்ட கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். மனுஷனா இருந்துக்கிட்டே தெய்வ வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கிறது அவரேதான்! ஆனா நான் இதைச் சொன்னா அவரு ஒத்துக்க மாட்டாரு. அதனாலதான் நான் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாதுன்னு சொன்னேன்!" என்றார் பூபதி.

குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
இந்த உலகத்தில் வாழும் (இல்)வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன் வானில் இருக்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














1 comment: