About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 21, 2018

194. ஊர் அறிந்த ரகசியம்

"அம்மா எங்கே?"

வீட்டுக்குள் நுழையும்போதே விநாயகம் கேட்டுக்கொண்டே வந்தான்.

"வெளியே போயிருக்காங்க" என்றாள் சுமதி.

"பேத்திக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. இப்ப கூடவா வீட்டில இருக்க மாட்டாங்க?"

"ஏங்க, அவங்க என்ன கல்யாண வேலையா பாக்கப் போறாங்க? அவங்களுக்குப் பொழுது போக வேண்டாமா? யார்கிட்டயாவது போய்ப் பேசிட்டு வருவாங்க."

"இந்த வயசான காலத்துல அம்மா வீடு வீடாப் போய் அரட்டை அடிச்சுட்டு வரது எனக்குப் பிடிக்கல."

"ஏங்க, வயசானவங்களுக்குப் பொழுது போக இப்படி ஏதாவது செய்யணும்? உங்களுக்கு என்ன இடைஞ்சல் இதில?"

"மாமியாரை விட்டுக் கொடுக்காம பேசற மருமக நீ ஒருத்தியாத்தான் இருப்பே!" என்றான் விநாயகம் சிரித்தபடியே.

அப்போது பர்வதம் உள்ளே நுழைந்தாள்.

"எங்கம்மா போயிட்டு வரே?" என்றான் விநாயகம் சாதாரணமாக.

"வாசல்ல உக்காந்திருந்தேன். தெருக்கோடியில் ருக்மணி அவ வீட்டுத் திண்ணையில உக்காந்திருந்தா. அவ வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தேன்" என்றாள் பர்வதம்.

அதற்குப் பிறகு விநாயகம் எதுவும் பேசவில்லை.

விநாயகம் சோர்வுடன் வீட்டுக்கு வந்தான்.

"ஏண்டா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூப்பிட்டாங்கன்னு போயிட்டு வந்தியே, என்ன விஷயம்? சீர் பத்தி ஏதாவது கேட்டாங்களா?" என்றாள் பர்வதம்.

"அது இருக்கட்டும். சுமதி அம்மாவைப் பத்தி யார்கிட்டயாவது சொன்னியா?" என்றான் விநாயகம்.

"சம்பந்தி அம்மாவைப் பத்தி நான் என்ன சொல்லப் போறேன்? அவங்க தங்கமானவங்களாச்சே! அப்படியே சொல்லணும்னாலும் உன்கிட்டத்தான் சொல்லப் போறேன்."

"இல்லேம்மா. நீ தினம் வீடு வீடாப் போய் பல பேர் கிட்ட பேசிட்டு வர. நீ என்ன பேசறேன்னு எனக்குத் தெரியாது."

"என்னடா நீ? நான் ஏதோ பொழுது போக்கறதுக்காக என்னை மாதிரி உள்ள வயசானவங்க கிட்ட போய் ஏதோ பழங்கதை பேசிட்டு வருவேன். இதுல உனக்கென்ன வந்தது?"

"ஆமாம்மா. பழங்கதை. சுமதியோட அம்மா நம்ம ஜாதி இல்ல. அந்தக் காலத்திலேயே சுமதியோட அப்பா அவங்களைக் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காரு. இதெல்லாம் பழங்கதைதானே?"

"ஆமாண்டா. அதுக்காகவே அவங்க வீட்டில பெண் எடுக்கப் பல பேரு தயங்கினாங்க. நான் பழங்காலத்து மனுஷியா இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாம சுமதியை உனக்குக் கட்டி வச்சேன்."

"அதெல்லாம் சரிதாம்மா. உன்னோட இந்த மனசைப் பாத்து நானே ஆச்சரியப்பட்டிருக்கேன். ஆனா, சுமதி அம்மா வேற ஜாதிங்கறது நம்ம ஊர்ல யாருக்கும் தெரியாது. இப்ப நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. நீ யார்கிட்டயாவது சொன்னியா?"

"நான் ஏண்டா சொல்லப் போறேன்?" என்று ஆரம்பித்த பர்வதம் சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.

"சொல்லும்மா. யார் கிட்ட சொன்ன?" என்றான் விநாயகம்.

"ரெண்டு நாள் முன்ன பேச்சுவாக்கில் குஞ்சம்மா கிட்ட சொன்னேன். ஏதோ பேசும்போது டக்னு என் வாயிலேந்து வந்துடுச்சு. அதனால என்ன இப்ப?"

"இப்ப என்ன வா? குஞ்சம்மாவோட வாயைப் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே. அவங்க இதை பல பேர் கிட்ட சொல்லி, விஷயம் பக்கத்து ஊர்ல இருக்கற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரைக்கும் போயிடுச்சு."

"அடப்பாவமே!" என்றாள் பர்வதம். "அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டாங்களா? அவங்களுக்கு விளக்கம் சொல்லி சமாதானப்படுத்திட்டே இல்ல?"

"சமாதானப்படுத்தறதா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜாதி விசுவாசம் அதிகம் உள்ளவங்க. அவங்களுக்கு ஜாதிதான் முக்கியமாம். நாம கலப்பு ஜாதின்னு சொல்லி கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க!" என்றான் விநாயகம், குரல் கம்மியபடி.

பர்வதம், சுமதி இருவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர். ஆனால் சுமதி உடனே சமாளித்துக்கொண்டு, "விடுங்க. கல்யாணத்துக்கப்புறம் இது அவங்களுக்குத் தெரிஞ்சிருஞ்சா, அப்பவும் பிரச்னை பண்ணியிருப்பாங்க. நம்ம பொண்ணுக்கு வேற நல்ல இடம் கிடைக்கும்!" என்றாள்.

ஆனால் பர்வதத்துக்கு மனம் சமாதானமாகவில்லை. "தவளை தன் வாயாலேயே கெடற மாதிரி, வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம நானே என் பேத்தி கல்யாணம் நின்னு போகக் காரணமா இருந்துட்டேனே!" என்று புலம்ப ஆரம்பித்தாள் அவள்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பொருள்:  
பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது அறத்துக்குப் பொருந்தாமல் போய், நன்மைகளை அழிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













2 comments: